சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலை பிடிக்காதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது. மென்மையான காற்று, விசாலமாக பரந்து விரிந்து கிடக்கும் கடல் நீர், அடிக்கடி வந்து காலை உரசிச் செல்லும் அலைகள் என்று கடலை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும்.
இருப்பினும் இதெற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று இரவில் ஒளி வீசும் கடற்கரைகள் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அதுவும் அப்படிப்பட்ட கடற்கரைகள் நம் இந்தியாவிலேயே இருப்பது பலருக்கும் தெரியவில்லை. அதை பற்றி இன்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
இரவில் ஒளி வீசும் கடற்கரையை “பயோலுமினெசென்ட் பீச்” என்று கூறுவார்கள்.
கடலில் வாழும் சில உயிரினங்கள் தங்களுடைய உடலிலிருந்து ஒளியை உமிழக்கூடிய தன்மையுடை யதாகும். ஆல்கா, ஜெல்லி மீன்கள், பேக்டீரியா, பங்கை போன்றவைகளாகும். சில சமயங்களில், கடலின் ஆழத்தில் வாழும் இவை கடற்கரை பக்கம் வருவதுண்டு. அப்படி வரும் போதே இது போன்ற மாயாஜால காட்சிகளை நமக்கு உருவாக்கி கொடுத்துவிட்டு செல்கின்றன.
இந்தியாவில் மொத்தம் ஆறு பயோலூமினெசென்ட் கடற்கரைகள் உள்ளது. மும்பையில் உள்ள ஜூகு கடற்கரை, கோவாவில் உள்ள பிடல்பாத்திம் கடற்கரை, உடுப்பியில் உள்ள மட்டு கடற்கரை, சென்னையில் உள்ள திருவான்மியூர் கடற்கரை, லக்ஷத்தீவில் உள்ள பங்காரம் கடற்கரை, அந்தமானில் உள்ள ஹேவோலாக் கடற்கரை.
மும்பையில் உள்ள ஜூகு கடற்கரையில் இந்த நிகழ்வு முதலில் நடந்தது 2016ல் தான். இந்த நிகழ்வு இங்கே அடிக்கடி நிகழ்வது கிடையாது. எனினும் சில சமயங்களில் மக்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்குவது போல இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் உள்ள பிடல்பாத்திம் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாகும். இங்கே இந்நிகழ்வை அதிகமாக குளிர்க்காலத்திலேயே காணலாம். பிடல்பாத்திம் கடற்கரை, கோவ்லா கடற்கரை மற்றும் மஜோர்டா கடற்கரைக்கு நடுவிலே உள்ளது.
உடுப்பியில் உள்ள மட்டு கடற்கரை மங்களூர் விமான நிலையத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மட்டு கடற்கரை பிக்னிக் செல்வதற்கு, நீந்துவதற்கு என்று ஒரு சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்குகிறது. இங்கே நடக்கும் பயோலூமினெசென்ட் நிகழ்வால் இக்கடற்கரைக்கு நிறைய மக்கள் கூட்டம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள திருவான்மியூர் கடற்கரையில் இந்நிகழ்வு 2019ல் நிகழ்ந்தது. மக்கள் கடற்கரையில் ஏற்பட்ட நீல நிற ஒளியினை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். இந்நிகழ்வு இங்கே அடிக்கடி நிகழ்வது இல்லையென்றாலும் எப்போதாவது நிகழ்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
லக்ஷத்தீவில் உள்ள பங்காரம் கடற்கரையில் ஒளிரும் இரவை நிம்மதியாக கழிக்கலாம். இக்கடற்கரை அவ்வளவாக கூட்டம் இல்லாமல் இருப்பதால், ஒளிரும் கடற்கரையில் தனிமையை நிம்மதியாக கழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தமானில் உள்ள ஹேவோலாக் கடற்கரையில் உள்ள அதிகமான மிதவைவாழியின் ஒளிரூட்டும் பண்புகளாலேயே அக்கடற்கரை இரவில் ஒளிர்கிறது. இக்கடற்கரையின் அழகு உங்களை அதன் மீது காதல் வயப்பட வைக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.
இதுபோன்ற ஒளிரும் காட்சிகளை இரவிலேயே கண்டு கழிக்க முடியும் என்பதால் கடற்கரை அருகிலேயே ஏதாவது தங்கும் விடுதி பார்த்து கொள்வது சிறந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இதுபோன்ற பயோலூமினெசென்ட் கடற்கரைகளை சுற்றிப்பார்க்க வருவது சிறந்ததாகும்.