இந்தியர்கள் பல காலங்களாகவே வணிகம் மற்றும் சுற்றுலா என்று நட்பு பாராட்டும் நாடுகளில் மலேசியா மிக முக்கிய இடம் பிடிக்கிறது. இந்தியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா என்றதும் முதலில் நினைவுக்கு வருவது மலேசியா, சிங்கப்பூர் போன்ற அண்டைய நாடுகளேயாகும். தற்போது இந்தியர்கள் மலேசியாவிற்கு விசா இல்லாமலேயே பயணம் செய்யலாம் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்தது இந்தியர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் நிறைய சுற்றுலாப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை தருவார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் நம்புகிறது. இப்போது மலேசியாவில் சுற்றுலாப்பயணிகளை கவரும் 10 இடங்கள் எதுவென்று காணலாம் வாங்க.
மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட 88 அடுக்குகளை கொண்ட வானளாவிய கட்டிடமாகும். இக்கட்டிடம் 1483 அடி உயரம் கொண்டது. 1998 முதல் 2004 வரை உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையை தாங்கிக்கொண்டிருந்தது. அதுபோலவே 2019 வரை உலகிலேயே உயரமான இரட்டை கோபுரம் என்ற பெருமையை சுமந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாகும், புகைப்படம் எடுத்து கொள்வதற்கு சிறந்த இடம், முக்கியமாக மாலை நேரத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாகவேயிருக்கும்.
பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் மலேசியாவின் சின்னமாகவே விளங்குகிறது என்று கூறினாலும் மிகையாகாது. பெட்ரோனாஸ் கோபுரத்தில் 86ஆவது மாடி வரை மக்களுக்கு அனுமதியுண்டு. பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தை வடிவமைத்த கட்டிட வடிவமைப்பாளர், சீசர் பெல்லி ஆவார்.
ப்ஸ்கேப் பினாங் ஒரு தீம் பார்க்காகும். இங்கே நிறைய விளையாட்டுகளும், பொழுது போக்குகளும் உண்டு. இந்த தீம் பார்க்கே முதன் முதலில் வெளி விளையாட்டுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. மகிழ்ச்சியாக இருக்க வயது தேவையில்லை என்பதை புரிய வைத்தது. இவ்விடம் மலேசியாவிலுள்ள பெனாங்கில் அமைந்துள்ளது. ஸிப் லைன், மலை ஏறுவது போன்ற சாகச விளையாட்டுக்கள் உள்ளது. உலக கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்ற நீண்ட நீர் சறுக்கு விளையாட்டும் இங்கு உள்ளது.
லங்காவி தீவை சுற்றி பார்க்க வரும் போது கண்டிப்பாக செய்ய வேண்டியது லங்காவி ஸ்கை கேப்பில் சவாரியாகும். 10 மில்லியன் வருட பழைமையான மழைக்காடுகளின் அழகை ஸ்கை கேப் மூலம் பார்த்து ரசிக்கலாம். இந்த சவாரியில் சுமார் 2.2 கிலோ மீட்டர் காட்டை சுற்றி பார்க்க கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் செலவழித்து இந்த சவாரியை செய்யலாம் என்பது குறிப்படத்தக்கது. நவம்பர் முதல் ஏப்ரல் மாதங்களில் இவ்விடத்திற்கு வருவது சிறந்ததாகும்.
மலேசியாவிலுள்ள கோலாலம்பூர் சிட்டி சென்டரில் உள்ள பூங்காவே கேஎல்சிசி பூங்காவாகும். இப்பூங்கா பச்சை பசேலென்று செடிக்கொடிகளை கொண்டு பெட்ரோனாஸ் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா 50 ஏக்கரை கொண்டது. ஜாக்கிங் செய்வதற்கான இடம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் போன்றவை இப்பூங்காவில் உள்ளது. தினமும் காலை மாலை இங்கே மக்கள் வரலாம். இப்பூங்காவில் எல்லோரும் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு இரண்டு இசை நீரூற்றுகள் இருக்கிறது தினமும் 8,9,10 மணிக்கு இந்நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்காக ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கே குகை கோவிலானது மலேசியாவிலுள்ள கோம்பாக்கில் அமைந்துள்ளது. மலாய் மொழியில் ‘பத்து’ என்றால் ‘கல்’ என்று பொருள். இந்தியாவிற்கு அடுத்து முருகனுக்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் என்றால் அது இக்குகை கோவிலேயாகும். வருடாவருடம் தைபூசம் இங்கே பிரசித்தியாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து குகையில் இருக்கும் சுண்ணாம்பு கற்கள் 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. தங்க நிறத்திலான உயர்ந்து நிற்கும் முருகன் சிலை உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்குகையை ஏறி செல்வதற்கு மொத்தம் 272 படிகள் உள்ளது.
கோலாலம்பூரில் உள்ள ஜாலன் அலார் 500 மீட்டர் கொண்ட உணவுகள் விற்கப்படும் தெருவாகும். இது உணவிற்கென்றே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். ஒருகாலத்தில் சிவப்பு விளக்கு பகுதியாக இருந்த இடம் இன்று மாற்றம் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடத்தில் ஜாலன் அலார் நிச்சயமாக உள்ளது. இங்கு இருக்கும் மசாலாக்களின் வாசம், வியாபாரிகளின் கூவல்களும் இந்த இடத்தை திருவிழா கோலத்தில் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மலேசியாவிலுள்ள ஜார்ஜியா டவுனில் அமைந்துள்ள இந்த மியூசியம் பினாங் பெரனாக்கன் பரம்பரையை சேர்ந்ததாகும். இந்த மியூசியம் பார்ப்பதற்கு பச்சை நிறத்திலான வீடு போன்றே காட்சியளிக்கும். இது சர்ச் ஸ்டிரீட், ஜார்ஜியாவில் உள்ளது. இந்த இடம் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன தொழிலதிபரான சுங் கெங் க்யூவின் அலுவலகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மேன்ஷனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரனாக்கன் கலைப்பொருட்கள் உள்ளது. மேலும் உட்புற வடிவமைப்பும், மற்றும் உணவருந்தும் மேசையை அனைவரின் பார்வைக்காகவும் வைத்துள்ளனர். ‘அமேசிங் ரேஸ்' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இவ்விடம் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.
மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் உள்ள கடற்கரை தான் பான்டாய் செனாங் பீச். இந்த கடற்கரை அதன் அழகிற்கும், வெள்ளை மணலுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கடற்கரை லங்காவி தேசிய விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலே அமைந்துள்ளது. இக்கடற்கரையில் தென்னைமரங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. இரவில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இசை நிகழ்ச்சி நடைப்பெறும். இந்த இடத்தில் எண்ணற்ற உணவு விடுதிகள் இருக்கின்றது எனவே சுற்றுலாப்பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கு மிகவும் சிறந்த இடமாக இந்த கடற்கரை அமைந்துள்ளது.
மலேசியாவில் உள்ள சாராவாக் மிர்னி டிவிஷனில் உள்ளது குணு முழுங் தேசியா பூங்கா. இந்த பூங்கா யுனெஸ்கோ உலக பாரம்பரிய களங்களில் பட்டியலில் ஒன்றாக இருக்கிறது. இக்குகை அதன் அழகிற்கும், நிலப்பரப்பிற்கும், மலை கள் மற்றும் அருவிகளுக்கு பிரசித்தி பெற்றதாகும். சாராவாக் குகை தான் உலகிலேயே பெரிய குகை 600 மீட்டர் நீளமும், 415 மீட்டர் அகலமும்,80 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இவ்விடத்தை சுற்றி பார்க்க இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும். இந்த பூங்காவில் வனவிலங்கு,செடிகள், பூக்கள் போன்ற வகைகள் உள்ளது. டீர் கேவ் தான் உலகிலேயே இரண்டாவது குகை வழியாகும். இக்குகை 120 முதல் 150 மீட்டர் விட்டம் கொண்டது. முழுங்கிலுள்ள தூய்மைநீர் குகை அமைப்பு தான் உலகிலேயே எட்டாவது நீளமான குகையாகும். சாராவாக் குகைதான் உலகிலேயே இயற்கையாக அமைந்த மிகவும் பெரிய குகையாகும். இதில் 40 போயிங் 747 விமானத்தை வைக்கும் அளவிற்கு இடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவிலுள்ள சாப்பாவிலே தான் உயரமான மலையான கின்னபாலு உள்ளது. இம்மலை 13,435 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே தீவுகளிலுள்ள மூன்றாவது உயரமான மலையாகும். இம்மலை உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மார்ச் முதல் செப்டம்பர் வரை இம்மலையை பார்வையிடுவதற்கு உகந்த மாதங்களாகும். உலகிலுள்ள முக்கியமான பல்லுயிர் பாரம்பரியதளமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலகம் முழுவதிலிருந்து வரும் சாகச விரும்பிகள் இங்கே மலையேற்றம் செய்ய விரும்புகிறார்கள்.
மலேசியாவில் சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கு எண்ணற்ற இடங்கள் உள்ளது. எனினும் இந்த 10 குறிப்பிட்ட இடங்களை மறக்காமல் பார்வையிடுவது சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.