
சிக்கிம் இமயமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மலைசார்ந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 280மீ முதல் 8585மீ உயரம் வரை அமைந்துள்ள மலைப்பகுதிகளாகவே இருக்கின்றன. உலகின் 3-வது உயரமான சிகரமான கஞ்சஞ்ஜங்கா இங்கு அமைந்துள்ளது.
சிக்கிம் 7096 ச.கி.மீ பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். தெற்கு வடக்காக 115 கி.மீ. கிழக்கு மேற்காக 65 கி.மீ கொண்டது. மேற்கு சிக்கிம், வடக்கு சிக்கிம், கிழக்கு சிக்கிம், தெற்கு சிக்கிம் என நான்கு மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. வடகிழக்கு இந்தியாவின் அமைதியான மாநிலம். எப்படி என்றால் இந்த மாநிலத்தில் 'கொலை' என்பது பொதுவாக யாருக்கும் தெரியாத ஒரு சொல்!
கிழக்கில் பூட்டானையும், மேற்கில் நேபாளத்தையும், வடக்கே திபெத்தையும் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது சிக்கிம். ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமாக ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன. மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், சுடுநீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன. இயற்கையான 50 டிகிரி சூட்டில் இருக்கும். இங்குள்ள வெந்நீர் ஊற்றுகளுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
சிக்கிமின் மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளாக உள்ளது. மேலும் பனிகளால் நிரம்பிய பல ஓடைகள் சிக்கிமின் உயிர்நாடி என அழைக்கப்படும் தீஸ்தா நதியில் சங்கமிக்கின்றன. மொத்த மாநிலத்திலும் எல்லா இடத்திலும், ஏற்ற இறக்கமான நிலப்பகுதிகள் உள்ளன. தொடர்ந்து 500 அடி தூரம் சமதளத்தில் நடப்பது என்பது இயலாத காரியம். உலகத்திலேயே சில இடங்களில் மட்டும் இயற்கையாக தோன்றும் இரட்டை வானவில்லை இங்கேயும் பார்க்கமுடியும்.
வருமான வரி செலுத்தாத மாநிலம்:
இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (26AAA) இன் கீழ், வடகிழக்கு மாநிலமான சிக்கிம் இந்தியாவில் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலமாகும். சிக்கிம், 330 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பழங்கால சமஸ்தானமாக இருந்தது. இருப்பினும், 1975 இல் மே 16 ம் தேதி சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இது இந்தியாவின் 22 வது மாநிலமாக மாறியது. இணைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசாங்கம் சிக்கிமுக்கு வரி விலக்குகள் உட்பட சில சிறப்பு அந்தஸ்தைகளை வழங்கியது.
இரயில்வே ஸ்டேசன் இல்லாத ஒரே மாநிலம்:
இந்திய மாநிலங்களில் ரயில் நெட்வொர்க் இல்லாத ஒரே மாநிலம் என்றால் அது சிக்கிம் தான். இந்த மாநிலம் இன்னும் ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்படவில்லை. இந்த மாநிலம் மற்ற அருகிலுள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கான சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்கிம் இமயமலை அடிவாரத்தில் மலைப்பகுதியில் இருப்பது தான் இதற்கு காரணம். வெகு நாட்களுக்கு பிறகு 'பாக்யாங்' என்ற இடத்தில், 2018 - ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி விமான நிலையம் தொடங்கப்பட்டது.
உலகின் நூறு சதவிகித முழுமையான பிளாஸ்டிக் இல்லாத மாநிலம்:
உலகின் நூறு சதவிகித முழுமையான இயற்கை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலம் என்ற பெருமையை இந்திய மாநிலம் ஒன்று பெற்றுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், சுத்தமான, பசுமையான வாழ்க்கையை வாழ்வதிலும் இந்த மாநிலம் முன்னணியில் உள்ளது. வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இந்த அற்புதமான மாநிலம், எதுவென்றால், அமைதியின் நிலமான 'சிக்கிம்' தான்.
முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்யும் ஒரே மாநிலம் சிக்கிம் தான். 2016 - ஆம் ஆண்டில், ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ உபயோகப்படுத்தாத முழு இயற்கை விவசாய மாநிலம் என்று சிக்கிம் அறிவிக்கப்பட்டு அதற்கான வருங்காலக் கொள்கை விருதையும் ஐ.நா வழங்கியுள்ளது. முழு இயற்கை விவசாயம் என எந்த ஒரு நாடோ, அல்லது இந்தியாவின் எந்த ஒரு மாநிலமோ எடுக்காத கொள்கை முடிவை எடுத்து அதை நிறைவேற்றியுள்ளது சிக்கிம்!
இங்கு 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. சிக்கிமில் புகையிலையும், பிளாஸ்டிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை, பழவகைகள், காய்கறிகள் போன்றவை இங்கு பயிரிடப்படுகின்றன.
இந்தியாவிலேயே மிக மிக வித்தியாசமான ஒரு கலாச்சாரம் இங்குள்ளது என்றால் அதில் ஒன்று வழிபாட்டு கொடிகள். கோயில்களில் பல நிறங்களில் உள்ள கொடிகள் உங்களை அன்புடன் வரவேற்கும். கொடியும் வண்ண வண்ண அழகு நிறைந்த நிறங்களில் இருக்கும். ஆனால் அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு பொருள் இருக்கிறது. இதில் மொத்தம் 5 நிறங்கள் வெள்ளை, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு கொண்ட கொடிகள் இருக்கும். அனைத்துமே வேண்டுதலுக்காக அமைக்கப்பட்டது.