
சுற்றுலா என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். அதிலும் சாகச சுற்றுலா என்றால் பனியால் மூடப்பட்ட மலை சிகரங்கள், அடர்ந்த காடுகள், மழையில் நனைந்த சதுப்பு நிலங்கள்தான் அனைவர் கண் முன் நிழலாடும். ஆனால் குறைவாக மழை பெய்யும் வறண்ட சமவெளிகள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை நிலம் போன்ற மற்றொரு இடமும் சாகச சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் உலகில் குறைவாக மழை பெய்து அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் 5 வறண்ட இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
அண்டார்டிகாவில் உள்ள மெக்மர்டோ வறண்ட பள்ளத்தாக்கில் மலைகள் சூழ்ந்திருப்பதன் காரணமாக மிகக் குறைவாகவே மழை பெய்து கடுமையான காலநிலையைக் கொண்டுள்ளது. ஈரப்பதமும் குறைவாக இருப்பதால் எளிதில் செல்ல முடியாத இந்தப் பள்ளத்தாக்கின் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் சாகச சுற்றுலாவாக நினைத்து துணிந்து வர வேண்டும். மேலும் பூமியில் செவ்வாய் கிரகத்தை நினைவுபடுத்தும் இடம் இதுதான் என அடிக்கடி கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிற்கு சராசரியாக 50 மி. மீ மட்டுமே மழை பெய்து பூமியில் அதிக வெப்பமான வறண்ட இடங்களில் ஒன்றாக அமெரிக்காவில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த இடம் சாகச சுற்றுலாப் பயணிகள் எளிதில் சென்றடையும் வண்ணம் சாலை வசதிகளை கொண்டிருப்பதால் கடுமையான சூழல் நிலவினாலும் இந்த தேசிய பூங்காவில் உள்ள உப்புப் படுகைகளையும், வண்ணமயமான நிலப் பரப்புகளையும் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தரும் பிரபலமான இடமாக உள்ளது.
உயரமான சிவப்பு மணல் மேடுகளையும், பரந்த சமவெளிகளையும் உலகின் மிகவும் பழமையான பாலைவனமாக கருதப்படும் நமீபியாவில் உள்ள நமீப் பாலைவனம் கொண்டிருக்கிறது. மலை இங்கு குறைவாக பெய்தாலும் கடற்கரை அருகில் இருக்கும் பனிமூட்டம் காரணமாக ஈரப்பதம் இருப்பதால் வித்தியாசமான காலநிலை நிலவி சில உயிரினங்கள் உயிர் வாழ ஏற்ற இடமாக இது உள்ளது. நமீப் பாலைவனத்தில் உள்ள கோசுஸ்வ்லே இயற்கை காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நமீப் பாலைவனத்திற்கு வருகை புரிகின்றனர்.
உலகில் மிகவும் வறண்ட இடமாக துருவப்பகுதிகளை அடுத்து சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாலைவனத்தின் சில பகுதிகளில் ஆண்டிற்கு ஒரு மில்லி மீட்டர் மழையும், சில பகுதிகளில் மழையேக்கூட பெய்வதில்லை என்பது வானிலை ஆய்வு நிலையங்களின் கூற்றாக உள்ளது. செவ்வாய் கிரகத்தை போல இருக்கும் நிலப்பரப்பும், உப்புப் படுகைகளும், வெந்நீர் ஊற்றுக்களும், இரவில் தெரியும் தெளிவான வானமும் ,நட்சத்திரங்களும் இருப்பதால் அட்டகாமா பாலைவனம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கின்றன.
மழை குறைவாக பெய்தாலும் அழகான பாலைவனமாக ஜோர்டானில் உள்ள வாடி ரம் பாலைவனப்பகுதி உள்ளது. மணற்கல் மலைகள், குறுகிய பள்ளத்தாக்குகள், பரந்த மணல் சமவெளிகள், ஜீப் சவாரி ஆகியவை சாகச பயணிகளை ஈர்ப்பதால் அதிக அளவு சுற்றுலாபயணிகள் இந்த பாலைவனத்தில் முகாமிடுகின்றனர்.
மேற்கூறிய 5 இடங்களும் மழை குறைவாக பெய்தாலும் மனதளவில் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.