ஆடி மாசம் பிறந்ததும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வீற்றிருக்கும் காந்திமதி அம்மனை தரிசிக்கும் ஆவல் ஏற்பட்டது. உடனே தக்கலில் டிக்கெட் புக் செய்து கிளம்பி விட்டோம். ரூம் எடுத்து குளித்து நேராக கோவிலுக்கு பயணப்பட்டோம். ஸ்டேஷனிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு டவுன் பஸ்ஸில் ஏறி பயணம் செய்து கோவிலை அடைந்தோம். அருமையான தரிசனம்.
இங்குள்ள சங்கிலி மண்டபம் நெல்லையப்பர் கோவிலையும் காந்திமதி கோவிலையும் இணைத்து ஒரே பெரிய கோயிலாக மாற்றியவர் திரு வடமலையப்ப பிள்ளையான்.
நெல்லையப்பர் காந்திமதி திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விஷ்ணு இங்கு வந்ததாக கூறப்படுகிறது. இங்கு ஒரே கல்லில் கட்டப்பட்ட 10 இசை தூண்களையும் தட்ட ஒவ்வொன்றும் வெவ்வேறு ஸ்வரத்தை வெளிப்படுத்துவது சிறப்பான அம்சமாகும்.
இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. கோவிலில் நுழைந்தவுடன் பத்தடி உயரத்திற்கும் மேல் ஒரு அழகான வெள்ளை நிற நந்தி உள்ளது. கொடி மரத்தை சுற்றி உள்ளே சென்றால் மூலவர் ஈசன் சுயம்புவாக காட்சி தருகிறார். அவருக்கு முன் மிகப்பெரிய ஆனைமுகன் சிலை ஒன்பது அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ளது.
மூலவரை சுற்றி 3 பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் பிரதட்சணம் பண்ணி வருவதே சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது.
கோவிலுக்கு உள்ளே மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. இத்துடன் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு குளமும் உள்ளது. இக்கோவிலில் உள்ள தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்கு உரியது. இக்கோவிலின் தல விருட்சம் மூங்கிலாகும். கோவில் காலை 6:00 - 1 மணி வரை, மாலை 4.30 - 9.30 வரை திறந்திருக்கும்.
மாலையில் திரும்பவும் தரிசனம் செய்ய சென்றபோது கீழரத வீதியில் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா கடையில் வீட்டிற்கு ஒரு கிலோ வாங்கிக் கொண்டு தனியாக வாழை இலையில் சுருட்டி வைத்து விற்கப்படும் நெய் மணத்துடன் கூடிய அல்வாவை ருசித்தோம். அப்பப்பா அமிர்தம்தான்!
உலகில் பலவகை அல்வாக்கள் காசி அல்வா, அசோகா அல்வா, சுஜி அல்வா, கேரட் அல்வா, சோள மாவு அல்வா, கராச்சி அல்வா என இருக்கும்போது திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவுக்கு மட்டும் மவுசு அதிகம்.
இப்பொழுது ஆன்லைனிலும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இருந்தாலும் நேரில் சென்று க்யூவில் நின்று நம் முறை வருவதற்குள் அச்சச்சோ தீர்ந்து விடுமோ என்று பயந்து கொண்டே வாங்கி சாப்பிடும் அனுபவம் தனிதான். இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம். காந்திமதி அம்மை தரிசனமும், அல்வாவின் இனிப்பு சுவையும் இன்னும் கொஞ்ச நாளைக்கு மனதை விட்டு நீங்காது.