ஆச்சரிய அனுபவங்களைத் தரும் நெல்லியம்பதி மலைகள்!

நெல்லியம்பதி மலைகள்...
நெல்லியம்பதி மலைகள்...

பாலக்காடு மாவட்டத்தின் நென்மாரா நகரத்தில் உள்ள நெல்லியம்பதி மலைகள் பார்க்க வேண்டியவை. நெல்லியம்பதி கேரளாவில் மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமாகும். இது பாலக்காட்டிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலைகளின் உயரம் 467 மீட்டர் முதல் 1572 மீட்டர் வரை உள்ளது.

நெல்லியம்பதி மலைகளில் பார்க்க வேண்டிய இடங்கள்:

பசுமையான காடுகள், ஆரஞ்சு, தேயிலை, காபி மற்றும் மசாலா தோட்டங்கள் நிறைந்த இடம். "ஏழைகளின் ஊட்டி" என்று அறியப்படும் நெல்லியம்பதி அதன் மலையேற்ற பாதைகளாலும், சிறந்த தட்பவெப்ப நிலை காரணமாகவும் புகழ் பெற்றது.

நெல்லியம்பதியில் பல வியூ பாய்ண்டுகளும், அருவிகளும், அடர்ந்த வனப்பகுதியும் உள்ளது. நென்மாராவிலிருந்து நெல்லியம் பதிக்கு மலைவழி சாலை வழியாக செல்ல வேண்டும்.

Pothundi Dam
Pothundi Dam

போதுந்திரி அணை (Pothundi Dam): 

போதுந்திரி அணை  நெல்லியன்பதியின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இந்த அணையானது 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்தியாவின் பழமையான அணைகளில் ஒன்றான இது 5470 ஹெக்டேர்கள் பரப்பளவில் பாசன பயன்பாட்டுக்காகவும் குடிநீர் தேவையை நிறைவு செய்யவும் அமைந்துள்ளது. படகு சவாரி செய்ய ஏற்ற அருமையான இடமாகும்.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த அணையை பார்வையிடலாம்.

மயிலாடும் பாறை:

பாலக்காட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மயிலாடும் பாறையில் சூலனூர் மயில் சரணாலயம் உள்ளது. இங்கு செல்ல பஸ் மற்றும் டாக்ஸி வசதிகள் உள்ளன. இங்கு அழிந்து போகும் அபாயத்தில் இருக்கும் அழகான மயில்கள் ஏராளமாக உள்ளன. அவை அழகாக தோகை விரித்தாடுவதைக் காணலாம்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கு இதம் தரும் காய்கறிகளின் ராஜா!
நெல்லியம்பதி மலைகள்...

நென்மரா வல்லங்கி வேளா:

நெம்மாராவில் உள்ள வல்லங்கி வேளா கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அல்லது 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது திருவிழாவின்போது கோவில் மைதானம் முழுவதும் யானைகள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

சீதார குண்டு வியூ பாயிண்ட்...
சீதார குண்டு வியூ பாயிண்ட்...

சீதார குண்டு வியூ பாயிண்ட்:

சீதாவை மீட்டு வந்த ராமன் அயோத்திக்கு போகும் வழியில் சில காலம் இந்த பகுதியில் தங்கியிருந்ததால் இப்பகுதிக்கு சீதார குண்டு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் ஏலக்காய், மிளகு, காப்பி, தேயிலை தோட்டங்களும் உள்ளது. இங்கிருந்து பள்ளத்தாக்கின் அழகான தோற்றத்தை காணலாம். 100 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி இங்குள்ளது. இந்த இடத்திற்கே பிரபலமான கூஸ்பெர்ரி மரங்களை கண்டு ரசிக்கலாம்.

காரப்பாரா நீர்வீழ்ச்சி
காரப்பாரா நீர்வீழ்ச்சி

காரப்பாரா நீர்வீழ்ச்சி:

அங்கிருந்து தேயிலை தோட்டங்கள் வழியாக சென்றால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காரப்பாரா தொங்கு பாலத்தை அடையலாம். அதை ஒட்டி காரப்பாரா நீர்வீழ்ச்சியும் உள்ளது. மாலை நேரத்தில் இந்த காட்டில் மிளிரும் ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகள் நம் கண்களை கொள்ளையடித்து விடும்.

நெல்லியம்பதி மலைப்பகுதியில் மட்டுமே பல கோட்டைகள், ஆன்மீக தலங்கள், அணைகள், அருவிகள், பூங்காக்கள் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. நெல்லியம்பதிக்கு செல்ல மே மாதம் முதல் அக்டோபர் வரை ஏற்ற நேரமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com