குளு குளு ஊட்டி... ரொம்பவே பியூட்டி!

குளு குளு ஊட்டி... ரொம்பவே பியூட்டி!

ச்சைப் போர்வை போர்த்திய எழில் மிகு மலைகள், கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மேகங்கள், உடலுக்கு மட்டுமல்லாது மனதிற்கும் குளிர்ச்சி தரும் தட்ப வெப்பநிலை, பாறைகளுடன் விளையாடியபடி ஓடிவரும் அருவிகள் என இயற்கையின் ஆதிக்கம் அதிகம் நிறைந்திருக்கும் இடம் குளுகுளு ஊட்டி. டென்ஷனை அவ்வப்போது குறைத்துக்கொண்டு புத்துணர்ச்சி பெற நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மலைவாசஸ்தலமே ஊட்டி.

ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயிலில் ஏறி அமர்ந்து நம் பயணத்தைத் தொடர்ந்ததுமே உற்சாகம் வந்து நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளுகிறது. இரண்டு பக்கமும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள், பூத்துக் குலங்கி நம்மைப் பார்த்து தலையசைக்கும் வண்ண வண்ணப் பூக்கள் இவையாவும் கண்களுக்கு இயற்கை தரும் விருந்து. சுவாரசியமான இந்த ரயில் பயணம் சுமார் சுமார் ஐந்து மணி நேரம் நீடிக்கிறது. வழியில் மலைகளைக் கடக்கும்போது மனம்திக் திக் என்று அடித்துக் கொள்வதையும் உணர முடிகிறது. அதிர்ஷ்ட மிருந்தால் வழியில் யானைகளைக் காண முடியும். ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகளும் தென்படும்.

தொட்டபெட்டா

நீலகிரி மாவட்டத்தின் மிக உயரமான இடம் இந்த தொட்டபெட்டா. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2623 மீட்டர் உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. ஊட்டியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தொட்டபெட்டாவை அடைந்ததுமே சில்லென்ற காற்று நம்மை வரவேற்று கைகுலுக்கும். இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு தொலைநோக்கி வழியாக இயற்கைக் காட்சிகளை வெகு அருகில் கொண்டு வந்து ரசிக்கலாம். இங்கே ஒரு ரெஸ்டாரெண்ட்டும் இருக்கிறது. தொட்டபெட்டாவிலிருந்து மேட்டுப்பாளையம் போன்ற இடங்களைக் காணலாம். ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் பேருந்தில் ஏறினால் தொட்டாபெட்டா ஜங்ஷனில் இறங்கிக்கொண்டு அங்கிருந்து ஷேர் ஜீப்பில் தொட்டபெட்டாவை அடையலாம். மீண்டும் இங்கிருந்து புறப்பட்டு தொட்டபெட்டா ஜங்ஷனில் இறங்கி அங்கிருந்து ஊட்டி தாவரவியல் பூங்காவை வேறொரு பேருந்து மூலம் அடையலாம். வசதி இருந்தால் அனைத்து இடங்களையும் காரில் சென்று ரசிக்கலாம்.

தாவரவியல் பூங்கா:

ட்டியில் மிகவும் புகழ் பெற்ற ஸ்பர்ட் தாவரவியல் பூங்கா. 1847ல் உருவாக்கப்பட்ட இந்த பொட்டானிக்கல் கார்டன் 22 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்தப் பூங்கா தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறையால் நிர்வகிக்கப்படுகிறது. பச்சைப் பசேலேன பிரம்மாண்டமான புல் போர்வையைப் பார்த்ததும் அதன்மீது ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் மூன்றாவது வாரத்தில் கோடைத் திருவிழா நடைபெறுகிறது. இச்சமயத்தில் மலர்க்கண்காட்சி நடத்தப்படுகிறது. பலவகையான அரிதான மலர்களும் செடிகளும் இக்காட்சியில் அணிவகுத்து அசத்தும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு கண்களுக்கு விருந்து படைக்கும்.

ரோஜாப் பூங்கா

தாவரவியல் பூங்காவிலிருந்து அருகில் அமைந்துள்ள ரோஜாப் பூங்காவுக்கச் செல்லலாம். உலகின் சிறந்த பதினைந்து ரோஜாத்தோட்டங்களில் இதுவும் ஒன்று. உலக அளவிலான பெருமைமிக்க விருதை இந்தப் பூங்கா பெற்றுள்ளது. ஊட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்கா சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தியாவிலேயே அதிக அளவிலான ரோஜாச் செடிகளைக் கொண்டது. சுமார் 3000 வகையான ரோஜாச்செடிகள் உள்ள இப்பூங்காவில் அரிதான கறுப்பு ரோஜாக்களையும் கண்டு மகிழலாம். மலையி்ல் பாதை அமைத்து இந்தப் பூங்காவை உருவாக்கி வைத்துள்ளனர். இந்தப் பூங்காவில் காலார நடந்து ரோஜாச் செடிகளைக் கண்டு ரசிப்பது ஓர் அலாதி அனுபவம்!

படகுத் துறை                                   

குடும்பத்தோடு படகு சவாரி செய்வது உல்லாசமான விஷயம். அதுவும் போட் ரைடிங் சூப்பரோ சூப்பர். இந்தச் செயற்கை ஏரி சுமார் மூன்று கிலோமீட்டர் நீளம் கொண்டது. இங்கு பெடலிங் போட் வசதியும் இருக்கிறது. படகுகளில் பயணிக்கும்போது சுற்றிலும் உள்ள மலைப் பகுதிகளில் மான்களைக் காண முடிந்தால் அது உங்கள் அதிர்ஷ்டம்.

நூல் பூங்கா

ட்டி படகுத் துறைக்கு எதிரில் உள்ள த்ரெட் கார்டன் பூங்காவுக்கு விஜயம் செய்தால் நீங்கள் நிச்சயம் வியப்பின் எல்லைக்கே போவீங்க. ஒயர், நூல், கேன்வாஸ் ஆகியவற்றை உபயோகித்து செயற்கையாக தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட நூல் செடிகளும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. என்ன விலைதான் சற்று அதிகம். உலகின் முதல் ‘நூல் பூங்கா’ என்ற பெருமையை இப்பூங்கா, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

குன்னூர்

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் வழியில் ஊட்டியிலிருந்து இருபது கிலோமீட்டருக்கு முன்னால் அமைந்துள்ள இடம் குன்னூர்.

குன்னூரிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு வியூபாயிண்ட் டால்பின்நோஸ். இங்கிருந்து நின்று பார்த்தால் ‘ஹே’ என்று கொட்டும் நீரின் கேதரின் நீர்வீழ்ச்சி கண்டுகளிக்கலாம். டால்பின் நோஸ் போகும் வழியில் அமைந்துள்ள மற்றொரு வியூபாயிண்ட் லேம்ப்ஸ் ராக். இந்த இடத்தில் நின்று இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்கலாம். குன்னூரிலிருந்து டாக்ஸி மூலம்தான் இந்த இடங்களுக்குச் செல்ல முடியும். காலை புறப்பட்டால் மதியம் திரும்பி விடலாம். மதியம் சிம்ஸ் பூங்காவிற்குச் செல்லுங்கள். குன்னூரில் உலகப் புகழ் பெற்ற சிம்ஸ் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. குழந்தைகள் விளையாட நிறைய வசதிகள் இருக்கின்றன. ஒரு சிறிய நீச்சல் குளமும் இருக்கிறது. குன்னூரில் புகழ் பெற்ற மிகப் பழமையான லூயி பாஸ்ச்சர் மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் வெறிநாய்க்கடி தடுப்பூசி மருந்து தயாரிக்கிறார்கள்.

சிம்ஸ் பூங்காவுக்கு அருகில் ஊட்டியில் விளையும் அரிதான சீசனில் பழங்கள் விற்பனை செய்யப் படுகின்றன. தூய்மையான இந்தப்  பழங்களை ருசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com