வாருங்கள் கனடாவில் உள்ள ’க்யூபெக்’ சுற்றிப்பார்க்கலாம்!

க்யூபெக்...
க்யூபெக்...

னடா நாட்டின் பதின்மூன்று மாநிலங்களில் முக்கியமானது கெபெக். இதன் தலைநகரம் கெபெக் என்கிற க்யூபெக் நகரம். கெபெக் என்றால் “ஆறு குறுகும் இடம்” என்று பொருள். பழமையான நகரம். பழங்காலப் பெரிய வீடுகள், அரண்மனைகள், பெரிய தேவாலயங்கள், பூங்காக்கள், பொருட்காட்சி சலைகள் என்று பார்ப்பதற்கு நிறைய இடங்கள். பழைய கெபெக் பகுதியில் குறுகலான தெருக்கள். சீராக இல்லாமல் உயர்ந்தும், தாழ்ந்தும் உள்ள தெருக்கள்.

ஃபேர்மாண்ட் லெ சாட்யு ஃபிரான்டெனாக் ஹோட்டல்

அரண்மனை போன்ற இந்த ஹோட்டல், செயின்ட் லாரன்ஸ் நதியைப் பார்ப்பது போன்று கட்டப் பட்டிருக்கிறது. 610 விருந்தினர்கள் அறை. மிக முக்கியமான விருந்தினர்கள் தங்குவதற்கு பல அறைகளை உள்ளடக்கிய இருப்பிடம் உள்ளது. இது 1892ஆம் வருடம் இரயில்வே கம்பெனியால் வடிவமைக்கப்பட்டது. இதன் உள்ளே ஒருவன் முழுவதும் நடந்தால், பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்பான்.

ஃபிரான்டெனாக் ஹோட்டல்
ஃபிரான்டெனாக் ஹோட்டல்

இது உலகில் அதிகமாகப் புகைப்படம் எடுக்கப்பட்ட ஹோட்டல். இரண்டாவது உலகப் போர் தருணத்தில் நாசிப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட நேசநாடுகள் போர் தந்திரங்களை வரையறுத்துக் கொள்ள இந்த ஹோட்டலில் கூடினர். கெபெக் கான்ஃபரன்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த சந்திப்புகள் ஆகஸ்ட் 1943 மற்றும் செப்டம்பர் 1944 என்று இரண்டு முறை நடந்தது. சர்ச்சில், ப்ராங்க்லின் ரூஸ்வெல்ட், ராணி எலிசபெத் ஆகியோர் இங்கு தங்கிய பிரபலங்கள். ஹிட்ச்காக், “வெர்டிகோ” என்ற ஆங்கிலப் படத்தை இந்த ஹோட்டலில் படம் பிடித்தார்.

அரண்மனை போன்ற இந்த ஹோட்டலின் அழகைக் காண்பதற்கும், இதன் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகிறார்கள்.

செயிண்ட் ஆன்னே சரணாலயம்

கெபெக் நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள செயிண்ட் ஆன்னே தேவாலயம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. கனடாவில், கத்தோலிக்கத் திருச்சபையால் தேசிய ஆலயம் என்று அறிவிக்கப்பட்ட எட்டு தேவாலயங்களில் இதுவும் ஒன்று. மதர் செயிண்ட் ஆன்னே மாலுமிகளின் புனித புரவலர் என்று பூஜிக்கப் படுகிறார். 1658 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம், 1946ல் புனரமைக்கப்பட்டது. உடல் உபாதையால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இங்கு வந்து பூஜித்தப் பின் பூரண குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்கள் விட்டுச் சென்ற கைத்தடிகளை, நுழைவாயிலில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். இப்போது, வருடத்திற்கு ஐந்து லட்சம் யாத்திரிகர்கள் இந்த புனித கோவிலிற்கு வருகின்றனர்.

செயிண்ட் ஆன்னே சரணாலயம்
செயிண்ட் ஆன்னே சரணாலயம்

தேவாலயத்தின் உட்புறம் மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகளைக் காண முடிகிறது. காணிக்கை செலுத்துவதற்கு “மின்னணு நன்கொடை” என்ற சாதனம் வைத்திருக்கிறார்கள். அருகில் செயல் முறை விளக்கம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும். பொத்தான் மூலமாக செலுத்த விரும்பும் பணத்தை தேர்வு செய்து, அதனை கடன் அட்டை மூலம் செலுத்தலாம். இதைப் போலவே இறைவனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கும் தானியங்கி மின்னணு சாதனம் உள்ளது. எத்தனை நேரம் மெழுகுவர்த்தி எரிய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்குன்டான பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தினால், மெழுகுவர்த்தி எரிய ஆரம்பிக்கும். இதற்கென்று மனிதர்கள் எவருமில்லை. தேவாலயத்தைச் சுற்றிலும் அழகான புல்வெளிகள், செடிகள், நீர் ஊற்றுகள் மற்றும் அமருவதற்கு இருக்கைகள் உள்ளன.

கேன்யன் செயிண்ட் ஆன்னே

இயற்கை ரசிகர்களுக்கு மிகப் பிடித்தமான இந்த பள்ளத்தாக்கு, கெபெக் நகரின் கிழக்குப் பக்கத்தில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பார்ப்பவர்களைக் கவரும் செங்குத்தான இந்த பள்ளத்தாக்கில், செயிண்ட் ஆன்னே நதி 74 மீட்டர் (243 அடி) உயரத்திலிருந்து விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க வருடத்திற்கு சுமார் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

கேன்யன் செயிண்ட் ஆன்னே
கேன்யன் செயிண்ட் ஆன்னே

ஆற்றின் மேல் 60 மீட்டர் (197 அடி) உயரத்தில் மூன்று தொங்கு பாலங்கள் அமைத்திருக்கிறார்கள். நிறைய மனிதர்கள் பாலத்தில் நடக்கும்போது பாலம் இத்தனை எடைகளைத் தாங்குமா என்ற தேவையற்ற பயம் வருகிறது. ஆனால், இயற்கை அழகை, நதியின் ஒட்டத்தைப் பார்த்தபடி நடந்து செல்வது சுகமான அனுபவம். நடுவில் ஒய்வு எடுத்துக் கொள்ள விரும்பு பவர்களுக்கு இருக்கைகளும் அங்கங்கே அமைக்கப்பட்டு உள்ளன.

பள்ளத்தாக்கை வானிலிருந்து பார்க்க விரும்புபவர்களுக்கு “ஏர் கேன்யன்” என்ற அமைப்பு இருக்கிறது. பள்ளத்தாக்கின் இரு பகுதிகளையும் உறுதியான கம்பிகள் இணைக்கின்றன. அதில் இருவர் உட்கார்ந்து கொள்வதற்கு தொங்கும் இருக்கைகள் அமைத்திருக்கிறார்கள். அமர்ந்த பிறகு பயணிப்பவர் கீழே விழாமல் இருக்க பாதுகாப்பு பெல்ட்கள் இருக்கின்றன. அமர்ந்தவுடன், பார்வையாளர்களை ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் தொங்கும் இருக்கைகள் பள்ளத்தாக்கிறகு மேல் கூட்டிச் செல்கின்றன. அமர்ந்தபடி, அதல பாதாளத்தைப் பார்க்கலாம். உங்களுக்கு உயரத்தில் தலைசுற்றும் என்றாலோ, இதயம் மென்மையானது என்றாலோ, இது உங்களுக்கான விளையாட்டு இல்லை.

இதையும் படியுங்கள்:
லடாக்கில் தென்பட்ட அரோரா ஒளிகள்! காரணம் என்ன?
க்யூபெக்...

வானத்தில் தொங்கிய படி நதியைப் பார்த்துக் கொண்டு செல்வதற்கு “ஜிப் லைன்” என்ற சாகச விளையாட்டு உள்ளது. நதியின் இருகரைகளிலும் கம்பங்களின் உச்சியில் தடித்த இரும்பு கம்பிகள் பொருத்தப் பட்டிருக்கிறது. பாதுகாப்பு கவசங்களுடன் இரும்பு கம்பிகளில் தொங்கியபடி நதியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் செல்லலாம். இந்த இடங்கள் முழுமையும் காட்டுப்பகுதி. இயற்கையை ரசித்து நடப்பதற்கு ஏராளமான இடங்கள். நீர்வீழ்ச்சியுடன் வானவில் காண்பது இயற்கையின் அற்புதம்.

கனடா செல்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய நகரம் கெபெக்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com