
இமயமலையிலிருக்கும் மூன்றாவது பெரிய நகரமெனக் கூறப்படும் டேராடூன் உத்தராகண்டின் தலைநகரமாகும். இமயமலையின் அடிவாரத்திலுள்ள டேராடூன், பசுமையான "சால்" காடுகளினால் சூழப்பட்டுள்ளது. டேராடூனில் உள்ள முக்கியமான சில இடங்களைக் காண, டேரா ...டூர்.. போகலாமா...!
வன ஆராய்ச்சி நிறுவனம்
மிக பிரமாண்டமான கட்டிடத்தைக்கொண்ட வன ஆராய்ச்சி நிறுவனம், டேராடூனின் முக்கிய அடையாள சின்னமாக கருதப்படுறது. இந்த காலனித்துவ கலைக் கட்டிடம், பாலிவுட் நடிகர்கள் அலியாபட், வருண்தாவன் நடித்த "ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்" மற்றும் பல படங்களுக்கான ஷீட்டிங் நடத்துமிடமாகவும் செயல்படுகிறது. வனவியல் குறித்த அருங்காட்சியகமும் இந்நிறுவனத்தினுள் உள்ளது.
சஹஸ்த்ர தாரா
சஹஸ்த்ர தாரா என்றால் "ஆயிரம் மடங்கு வசந்தம்" என்ற பொருளாகும். 9 மீட்டர் உயரத்திலிருந்து விழும் இந்த நீர் வீழ்ச்சி புகழ் வாய்ந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. அருகாமையிலுள்ள கந்தக நீருற்றுகள், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறதென நம்புகின்றனர். நீர் பொழுதுபோக்கு பூங்கா அருகாமையில் இருப்பதால், குழந்தைகளுக்கும் பிடித்த இடம்.
மைண்ட் ரோலிங் மடாலயம்
ஜப்பான் நாட்டு கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் மைண்ட்ரோலிங் மடாலயம், முக்கியமான பௌத்த கற்றல் மடாலயமாக திகழ்கிறது. பெரிய பிரார்த்தனை மண்டபம் மடாலயத்தில் உள்ளது. இந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து, 35 மீட்டர் உயரமுடைய புத்தர் சிலையை வணங்குகையில் மனதில் பிறக்கும் அமைதி அளவிடமுடியாததாகும். தவிர, மைண்ட் ரோலிங் மடாலய வளாகத்தில் அநேக ஸ்தூபிகள் இருக்கின்றன.
தபோவனம்
கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள தபோவனத்தில் இயற்கை எழில் கொஞ்சி விளையாடுகிறது. இங்கே, குரு துரோணாச்சாரியார் தவம் செய்ததாக கூறப்படுகிறது. தியானம் மற்றும் யோகா செய்வதற்கேற்ற தபோவனம்.
தப்கேஷ்வர் மகாதேவ் கோவில்
ஆசான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோவில் புகழ் வாய்ந்தது. இயற்கையாகவே அமைந்துள்ள மலைக்குகை. உள்ளே வீற்றிருக்கும் மிகப் பழமையான சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் நீர்த் துளிகள் விழுந்தவாறு இருக்கும். தனித்துவமான கட்டிடக்கலையைக் கொண்டுள்ள கோவில். மகா சிவராத்திரி போன்ற முக்கியமான பண்டிகை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
குச்சு பானி
இது "திருடர்கள் குகை என்றும் அழைக்கப்படுகிறது. டேராடூனிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள குகை "குச்சு பானி". நிலத்தடி நீர் ஓடும் காரணம், மர்மமான இடத்திலிருப்பதைப்போல இருக்கும். சிறிய நீர் வீழ்ச்சியைக் கொண்ட குகையின் இறுதிவரை ஆற்றுவழி அல்லது மலையேற்றமாக செல்லலாம்.
மல்ஸி மான் பார்க்
25 ஹெக்டர் ஏரியா பரப்பளவில் அமைந்திருக்கும் மஸ்லிமான் விலங்கியல் பூங்கா அனைவரையும் கவரக்கூடிய தன்மை கொண்டது. இரண்டு கொம்புகளைக் கொண்ட விலங்கினங்கள் அதிகம். மான்கள் துள்ளி துள்ளி செல்வதைக் காண்கையில் அழகாக இருக்கும்.
இமயமலைப் பகுதியில் இருக்கும் டேராடூனிற்கு பயணம் செல்லுகையில், நம்மையறியாமலேயே புத்துணர்ச்சி ஏற்படும் என்பது நிதர்சனம்.