
பயணங்களால் மன அழுத்தம் குறைவதோடு பொது அறிவு வளர்வதால் பயணம் செய்ய அனைவருக்கும் பிடிக்கும். இருந்தாலும் பணம் பற்றாக்குறை காரணமாக பல நேரங்களில் பயணங்கள் தள்ளிப் போகின்றன. அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் 10,000 ரூபாய் செலவில் இந்தியாவில் நிறைவாக பார்க்கக்கூடிய 5 சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
உத்தரகாண்ட் நகரில் ஆற்றில் சவாரி செய்வது ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கும். ரிஷிகேஷில் ஆசனங்கள் செய்வதற்கான மையங்கள் அதிகம் இருப்பதால் கங்கை நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டே அமைதியாக அமர்ந்து ஆசனங்கள் செய்யலாம். மேலும் இங்கு விலை குறைவான தங்கும் இடங்கள், ஹோட்டல்கள் அதிகம் உள்ளதால் இயற்கையை குறைந்த பட்ஜெட்டில் கண்டு களிக்கலாம்.
கர்நாடகாவில் உள்ள பண்டைய கால கட்டிடங்கள் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த கலாச்சார நகரமாக ஹம்பி இருக்கிறது. இங்குள்ள கட்டிடக்கலை பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. வரலாற்றுக் கால நகரங்களை குறைந்த பட்ஜெட்டில் காண ஹம்பியை விட மிகச் சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் தேயிலை தோட்டங்களும், தனித்துவமான ரயில் பயணங்களும் ,இமயமலை காட்சிகளும் மிகச் சிறந்த அனுபவங்களை வழங்குகின்றன. அருமையான மலைப்பிரதேசத்தை குறைவான பட்ஜெட்டில் கண்டுகளிக்க டார்ஜிலிங் மிகச்சிறந்த தேர்வாகும்.
உத்திரபிரதேசம் மாநிலத்தின் கங்கை நதிக் கரையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் வாரணாசி மிகவும் பழமையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட நகரமாக இருக்கிறது. இங்கு தங்குமிடமும், உணவும் மிகக் குறைவான விலையில் கிடைப்பதால் பட்ஜெட் சுற்றுலாவிற்கு செல்பவர்களின் முதல் தேர்வாக வாரணாசி நகரம் இருக்கிறது.
கடற்கரையை கண்டு ரசிக்கவும், பிரம்மாண்ட கோவில்களில் வழிபாடு செய்யவும் ,மன அமைதிக்கு தியானம் மேற்கொள்ளவும், மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கவும், விருப்பமான உணவுகளை சாப்பிடவும், பிரெஞ்சு காலனி தெருக்களை ரசிக்க வேண்டுமென நினைப்பவர்கள் புதுச்சேரி செல்லலாம். குறைவான கட்டணத்தில் தங்குமிடங்களும், சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்க்க அதிக செலவும் இல்லாததால் குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல நினைப்பவர்களின் முதல் தேர்வு பாண்டிச்சேரிதான்.
மேற்கூறிய 5 இடங்களும் குறைவான பட்ஜெட்டில் நிறைவான அனுபவத்தை வழங்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.