
நாங்கள் கொழுக்குமலைக்கு சென்றபொழுது குடும்பமாக சென்றோம். சூரியநெல்லியிலிருந்து ஜீப் சஃபாரி செய்த பொழுது மிகவும் கடினமான சாலைகள் இருந்தது. சீரற்ற சாலையில் ஜீப் குலுங்கிச் செல்லும் பொழுது பிள்ளைகள் அசதியாக உணர்ந்தனர். கொஞ்ச தூரம் போனதும் தேயிலைத் தோட்டத்திற்கு நடுவில் இரும்பாலான வாட்ச் டவர் இருந்தது. அதில் ஏறி நின்று புகைப்படங்கள் எடுத்தோம்.
வாட்ச் டவர் அதிக உயரம் இல்லை என்றாலும் மேலே ஏறியதும் குளிர்காற்று முகத்தில் அடித்து நம்மை நடுங்கச் செய்தது. கை விரல்கள் எல்லாம் மரத்துப் போயிற்று. ஆசை தீர கண்களால் அந்த இயற்கை காட்சிகளை உள்வாங்கிக்கொண்டு கீழே இறங்கினோம். ஜீப் கொழுக்குமலை அடிவாரம் வரை சென்றது. கொழுக்கு மலையின் உச்சிக்கு செல்லவேண்டும் என்றால் மலையற்றம் மூலம் செல்லலாம்.
இன்றும் இங்கு பாரம்பரியமான முறையில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நவீன இயந்திரங்களின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. கைமுறையாக தேயிலைகளைப் பறித்து, அவற்றை உலர்த்தி, நொதிக்க வைத்து, உருட்டி, தரம் பிரித்து தேயிலை தூள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாரம்பரிய முறையில் தேயிலையின் தனித்துவமான நறுமணம், சுவை மற்றும் தரம் சிறந்ததாக உள்ளது. கொழுக்கு மலையில் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள பழமையான தேயிலை தொழிற் சாலையான இதில் நுழைவதற்கான நுழைவு கட்டணம் மிகவும் அதிகமாக இருந்ததால் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானவர்கள் அங்கு செல்லவில்லை.
கொழுக்கு மலையின் அடிவாரத்தில் அற்புதமான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு இருந்தபொழுது ஜீப் ஓட்டுநர் சிங்கப்பாறையை பார்த்துவிட்டு வரச்சொல்ல, ஜீப் நிறுத்திய இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கப்பாறையை பார்த்து விட்டு வந்தோம். குளிர் ரொம்பவே அதிகமாக இருந்தது. இதற்கு ஏன் சிங்கப்பாறை என பெயரிட்டார்கள் எனக் காரணம் தெரியவில்லை.
கொழுக்கு மலைக்கு அருகில் புகழ்பெற்ற மீசைப்புலி மலை உள்ளது. கொழுக்கு மலையும், மீசைப்புலி மலையும் இரண்டு வெவ்வேறு சிகரங்கள். ஆனால் அவை ஒன்றுக்கொன்று அருகில் அமைந்துள்ளன. இது மேற்கு தொடர்ச்சி மலையின் மூன்றாவது உயரமான சிகரமாகும். கொழுக்குமலை மற்றும் மீசைப்புலி மலை பகுதிகளுக்குச் செல்வதற்கு கேரள சுற்றுலா துறையின் அனுமதியுடன் ட்ரெக்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கொழுக்குமலை தேயிலைத் தோட்டத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்தால் (trekking) மீசைப்புலி மலையை அடையலாம்.
கொழுக்குமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,100 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டமாகும். இது தேனி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் மூணாறு வழியாக எளிதாகச் செல்வதே எளிதான வழி. மூணாறில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியநெல்லி (Suryanelli) என்ற இடத்திற்குச் சென்று, அங்கிருந்து ஜீப் சஃபாரி செய்யலாம். சூரியநெல்லியில் இருந்து மலை உச்சிக்கு செல்வதற்கு தார் சாலைகள் கிடையாது. கரடுமுரடான பாதையில் ஜீப்பில் செல்வதே சிறந்தது.
இங்கு அதிகாலை சூரிய உதயம், ஜீப் சஃபாரி, பசுமையான தேயிலைத் தோட்டங்கள் போன்றவை இங்கு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கின்றது. சாகச விரும்பிகள் குரங்கணி வழியாகவும் மலையேற்றம் செய்து இங்கு வரலாம்.
தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் வட்டத்தில் அமைந்துள்ள கொழுக்குமலை உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டம் என்ற பெருமைக்குரியது. மேகக்கூட்டங்களுக்கு மேலே சூரியன் உதிக்கும் அழகைக் காண ஒரு சிறந்த இடமாகும். கொழுக்குமலையின் பிரம்மாண்டமான மலைச்சரிவுகள் மற்றும் மேகக் கூட்டங்கள் நம்மை இயற்கையை வெகுவாக ரசிக்க வைக்கும். கரடுமுரடான மலைப்பாதை என்பதால் சொந்த வாகனங்களுக்கு பதிலாக சூர்யநெல்லியில் கிடைக்கும் ஜீப்புகளை பயன்படுத்துவது நல்லது. பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரை. மழைக்காலங்களில் (ஜூன்-ஆகஸ்ட்) பாதை மிகவும் வழக்கம் என்பதால் பயணத்தை தவிர்ப்பது நல்லது. இங்கு குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கேற்ற வகையில் ஆடைகளை எடுத்துச்செல்வது சுகமான பயணத்திற்கு வழி வகுக்கும்.
முக்கிய குறிப்பு:
கொழுக்கு மலைக்கு திட்டமிடும் பொழுது அதிகாலை 4.30 - 5 மணிக்குள் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு சூரியநெல்லியை அடைந்துவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் முந்தைய நாளே சூரியநெல்லியில் தங்கிவிடலாம். இங்கு தங்கும் வசதி உள்ளது.