

மால்பே கடற்கரை (Malpe Beach) என்பது உடுப்பிற்கு அருகில் உள்ள ஒரு அழகான கடற்கரை இதன் தங்க மணல், பனை மரங்கள் மற்றும் அழகான அரபிக்கடல் காட்சிக்கு பெயர் பெற்றது.
உடுப்பியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கடற்கரை சூரிய உதயம் மற்றும் சூர்ய அஸ்தமனம் வரை பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும். கர்நாடகாவின் பெரிய மற்றும் பரபரப்பான மீன்பிடி துறைமுகமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு நீர் விளையாட்டு, படகு சவாரிகள் போன்றவற்றுடன் அமைதியான அனுபவத்தை வழங்கும் இடமாகவும் உள்ளது. நீர் விளையாட்டுகள், பாராசெய்லிங் (Parasailing), பனானா போட் சவாரி, ஜெட் ஸ்கீ (Jet Ski) போன்ற சாகச செயல்கள் இங்கு மிகவும் பிரபலம்.
உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு அருகில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலமான மால்பே கடற்கரையில் வெள்ளி போன்ற வெள்ளை மணல், நீல நிற அலைகள், அரபிக் கடலின் அற்புதமான காட்சிகள் மற்றும் பனை மரங்கள் நிறைந்த கடற்பகுதியாக உள்ளது.
செயின்ட் மேரிஸ் தீவு (St. Mary's Island):
மால்பே கடற்கரையிலிருந்து படகில் 30 நிமிடம் பயணிக்க அழகான செயின்ட் மேரி தீவை அடையலாம். இது இயற்கையின் புவியியல் அதிசயமாக கருதப்படுகிறது. பாசால்ட் (Basalt) ஹெக்சகனல் பாறைகள் - 88 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் உருவானவை. இத்தீவு எரிமலை குழம்புகளால் உருவான தனித்துவமான அறுகோண வடிவ பாசால்ட் பாறைகளுக்கு புகழ்பெற்றது. வெள்ளை மணல், சுத்தமான நீர் போன்றவை இந்தத் தீவை ஒரு சொர்க்கமாக காட்டும். இங்கு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுடன் மிகவும் அழகாக பராமரிக்கப்படுகிறது.
கடல் நடைபாதை (Sea Walk):
அரபிக் கடலின் அழகை ரசிக்க 600 மீட்டர் நீளமுள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இது மாலை நேரங்களில் சூரிய அஸ்தமனத்தை பார்க்க சிறந்த இடமாகும்.
மிதக்கும் பாலம் (Floating Bridge):
அலைகளின் மீது நடப்பது போன்ற உணர்வைத் தரும் கர்நாடகாவின் முதல் மிதக்கும் பாலம் இங்குள்ளது.
கடல் உணவுகள்:
கடற்கரை ஓரங்களில் உள்ள கடைகளில் புத்தம்புதிய கடல் உணவுகள் மற்றும் உள்ளூர் தின்பண்டங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.
செல்ல சிறந்த நேரம்:
அக்டோபர் முதல் மார்ச் வரை வானிலை மிகவும் இதமாக இருக்கும். பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை கடல் சீற்றமாக இருப்பதால் படகு போக்குவரத்து மற்றும் நீர் விளையாட்டுகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். கடற்கரையை பொதுவாக காலை 6:00 மணி முதல் திறந்திருக்கும். தீவுக்கான படகுகள் காலை 9.30 முதல் மாலை 5:30 வரை இயக்கப்படுகின்றன.
உடுப்பியிலிருந்து பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகள் மூலம் எளிதில் இந்த கடற்கரையை அடையலாம்.