
ஜிரோ பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய பள்ளத்தாக்கு. இது "நெல் வயல்களின் பள்ளத்தாக்கு" என்றும் அழைக்கப்படுகிறது. அபதானி பழங்குடியினரின் வளமான கலாச்சாரத்திற்கும், பச்சை மலைகளுக்கும், நெல் வயல்களுக்கும் பெயர் பெற்ற இடமிது. இங்குள்ள டேலி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஜிரோ இசை விழா மிகவும் பிரபலமாகும்.
ஜிரோ பள்ளத்தாக்கு சுமார் 13,000 மக்களைக் கொண்ட சிறிய நகரங்களில் ஒன்றாகும். கிழக்கு இமயமலைப் பகுதி நெல் வயல்கள் மற்றும் பைன் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பால் வகைப்படுத்தப்படுகிறது. தாரின் மீன் பண்ணை என்பது மூங்கில் மற்றும் பைன் மரங்களுக்கு இடையில் அதிக உயரத்தில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த பகுதியின் காலநிலை ஆர்க்கிட்களை வளர்ப்பதற்கு சிறந்த இடமாக அமைகிறது. 10,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகளின் நடுவில் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு அழகாக காட்சி தருகிறது. அழகான மலைகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், எங்கும் பசுமை நிறைந்த இயற்கையின் சொர்க்கமாகத் திகழும் இந்த இடம் சுற்றுலா செல்வதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.
ஜிரோ பள்ளத்தாக்கில் மொட்டைமாடி நெல் வயல்கள் உள்ளன. அங்கு அபதானி பழங்குடியினர் மீன் வளர்ப்புடன் இணைந்து அரிதான ஈர அரிசி சாகுபடியை மேற்கொள்கின்றனர். ஜிரோ இசை விழாவிற்கும் ஜிரோ பிரபலமானது.
அபதானி பழங்குடி கலாச்சாரம்:
ஹாங், புல்லா மற்றும் ஹரி போன்ற கிராமங்களில் அபதானிகள் தங்கள் பாரம்பரிய மூங்கில் வீடுகளில் வசிக்கின்றனர். வண்ணமயமான துணிகள் அணிந்து அமைதியான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். பழமையான பழக்கவழக்கங்களில் ஒன்றான முகத்தில் பச்சை குத்துதல் மற்றும் பெண்கள் அணியும் பெரிய மூக்கு குத்தல்கள் போன்றவை இவர்களின் தனித்துவமான அடையாளங்களாகும்.
இந்த மக்கள் டோனி-போலோவை (சூரியன்-சந்திரன்) வணங்குகிறார்கள். பிஜே எனப்படும் புனித மூங்கில்களை பயன்படுத்தி சடங்குகளை மேற்கொள்கிறார்கள். மூங்கிலில் நெய்யப்பட்ட கூடைகள், பாய்களை உருவாக்குகிறார்கள். இவர்களின் தனித்துவமான விவசாய முறைகள் - ஒரே நிலத்தில் நெல் வளர்ப்பதையும் மீன் வளர்ப்பதையும் உள்ளடக்கிய விவசாயத்தை யுனஸ்கோ அங்கீகரித்துள்ளது.
டேலி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் (Talle Valley Wildlife Sanctuary):
337 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1995இல் நிறுவப்பட்ட இந்த வனவிலங்கு சரணாலயம் 1,200 முதல் 3,000 மீ வரை உயரத்தில் உள்ளது. ஜிரோவில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேகமூட்டப்பட்ட சிறுத்தை, மலாயன் ராட்சத அணில், ஆசிய பனை புனுகு, கருப்பு கழுகு, காலர் ஆந்தை போன்றவை இங்கு காணப்படுகின்றன.
ஜிரோ இசை விழா:
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இசை விழாவாகும். வடகிழக்கு இந்தியாவிலிருந்து வரும் இசைக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செப்டம்பரில் நான்கு நாட்கள் இயற்கையான சூழலில் திறந்த வெளியில் நடைபெறும். செப்டம்பர் மாதம் சென்றால் இங்கு அற்புதமான இந்த இசை விழாவைக் காணலாம்.
செல்ல சிறந்த நேரம் எது?
ஆண்டு முழுவதும் இனிமையான காலநிலை கொண்டுள்ளது. மார்ச் முதல் அக்டோபர் வரை இங்கு செல்வதற்கு சிறந்த நேரமாகும்.
எப்படி செல்வது?
அருகில் உள்ள விமான நிலையம் லிலாபரி(116 கிலோமீட்டர்) தொலைவு, தேஜ்பூர்(239 கிலோமீட்டர்) அல்லது இட்டாநகர்(123 கிலோமீட்டர்). அருகிலுள்ள ரயில் நிலையங்கள் நஹர்லகுன்(89 கிலோமீட்டர்) மற்றும் வடக்கு லக்கிம்பூர்(115 கிலோமீட்டர்). அங்கிருந்து சாலை வழியாக டாக்ஸி அல்லது பேருந்தில் செல்லலாம்.