
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆசியாவின் மிக நீளமான டிரைவ்- இன் (Muzhappilangad) கடற்கரை இது. தங்க மணல், மென்மையான அலைகள், சாகச விளையாட்டுக்கள் நிறைந்த இந்த இடத்தை சுற்றுலாப்பயணிகள் யாராலும் எளிதில் மறக்க முடியாது. கேரளாவின் ஒரே வாகனம் ஓட்டக்கூடிய கடற்கரை இது என்ற பெருமை பெற்றது. கடற்கரை நன்கு பராமரிக்கப்பட்டு மிகவும் சுத்தமாக உள்ளது.
பாராகிளைடிங், பாராசைலிங், பவர் படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளை இங்கு உற்சாகமாக அனுபவிக்கலாம். அலைகள் குறைவாக இருக்கும் பொழுது அருகிலுள்ள பசுமையான தர்மடம் தீவுக்கு நடந்து செல்லவும் செய்யலாம். இது கடற்கரையின் அழகை அதிகரிக்கும் இடமாக உள்ளது. மயக்கும் மலபார் கடற்கரையின் அழகையும், அரபிக் கடலின் அழகையும் நம்மால் அனுபவிக்க முடியும்.
ஆசியாவின் மிக நீளமான டிரைவ்-இன் கடற்கரை 4 கிலோமீட்டர் நீளமுள்ளது. இங்கு நாம் நேரடியாக காரில் பயணம் செய்து இயற்கை அழகை ரசிக்கலாம். மோட்டார் சைக்கிள் அல்லது காரில் கடற்கரையில் வாகனம் ஊட்டுவது வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. இப்பகுதியில் வாகனங்களில் பயணம் செய்வது மறக்க முடியாத மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கும்.
கண்ணூர் மற்றும் தலச்சேரிக்கு இடையே அமைந்துள்ள இந்த கடற்கரை இயற்கை அழகு மிகுந்த இடமாகும். தலச்சேரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கடற்கரை கேரளாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
பெரிய கரும்பாறைகள் கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுத்து பாறைகளுக்கு இடையே ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி கிடப்பது கண்ணுக்கு விருந்தாகவும், நீச்சல் செய்பவர்களுக்கு வசதியாகவும் உள்ளது. இந்த கரும்பாறைகள் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு புகலிடமாகவும் செயல்படுகிறது. குளிர்காலங்களில் டெர்ன்கள், கடல் புறாக்கள் மற்றும் மணல் பைப்பர்கள் போன்ற 30க்கும் மேற்பட்ட பறவைகளை இங்கு காண முடியும். தென்னந்தோப்புகள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்கிறது.
முழப்பிலங்காடு கடற்கரைக்கு வந்து அழகை ரசிப்பதுடன் மலபார் உணவுகளையும் ருசிக்காமல் இருக்க முடியாது. மிகவும் சுவையான கடல் உணவுகள் நாவிற்கு நல்ல விருந்தளிக்கின்றது. இந்த பரந்த கடற்கரை அதன் சுவையான மலபார் உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது.
பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை. இந்த டிரைவிங் கடற்கரையை பார்வையிட நுழைவு கட்டணம் கிடையாது. இருப்பினும் கடற்கரையில் கிடைக்கும் பலவிதமான நடவடிக்கைகளுக்கும், பார்க்கிங் வசதிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எப்படி செல்வது?
முழப்பிலங்காடுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் தலச்சேரி(7 கி.மீ), கண்ணூர்(15 கி.மீ). அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு.