

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு அமைதியான ஓலைக்குடா கடற்கரை (Olaikuda Beach) அற்புதமான பவளப்பாறைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதியில் உள்ள கடல் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான காட்சியை வழங்குகிறது.
ஓலைக்குடா கிராமம் முக்கியமான மீன்பிடி கிராமமாக இருப்பதால் இங்கு சுறாக்கள், நண்டுகள், இறால், கடல் வெள்ளரிகள் போன்ற பல்வேறு வகையான கடல் இனங்களை காணமுடியும். இந்த கடற்கரையை மேலும் அழகூட்டுவது இங்கு கடலோரப் பகுதிகளில் பறக்கும் சீகல்கள் மற்றும் ஃபிளமிங்கோக்கள். ராமேஸ்வரம் நகரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரை ராமேஸ்வரத்திற்கு வருபவர்களுக்கு ஒரு முழுமையான கடற்கரை அனுபவத்தை அனுபவிக்கக் கூடிய சிறந்த இடமாக உள்ளது.
ஓலைக்குடா கடற்கரையின் சிறப்பம்சங்கள்:
ஓலைக்குடா கடற்கரை ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு அமைதியான, அழகிய மீன்பிடி கிராமமாகும். இது தெளிவான நீல நீர், வெள்ளை மணல், அழகான பவளப்பாறைகள் மற்றும் ஏராளமான கடல் பறவைகளுக்கு பெயர் பெற்றது.
அமைதி மற்றும் இயற்கை அழகு:
இந்தக் கடற்கரை அதன் அமைதியான சூழல் மற்றும் அழகிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. பனை மற்றும் சவுக்கு தோப்புகள், குளுமையான கடல் காற்று ஆகியவை குடும்பத்துடன் ஓய்வெடுக்க ஏற்ற இடமாக இருக்கிறது.
நீச்சல், படகு சவாரி, ஸ்கூபா டைவிங் மற்றும் மீன்பிடி படகுகளின் அழகைக் காண்பதற்கு ஏற்ற இடமிது. இங்கு படகு சவாரி செய்வதன் மூலம் கடற்கரையோரத்தின் அழகிய காட்சிகளைக்கண்டு ரசிக்கலாம். படகு சவாரி செய்ய நபருக்கு 200 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கடற்கரையில் உயிர் காப்பாளர்கள்(lifeguards) இல்லை என்பதால் நீச்சல் செய்யும்பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்துடன் இரவில் கடற்கரையில் தங்குவது பாதுகாப்பானதல்ல என்பதையும் மறக்க வேண்டாம். கடற்கரைப் பகுதியில் உணவு விருப்பங்கள் குறைவாக இருப்பதால் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துச்செல்வது நல்லது.
ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் மற்றும் பிற நீர் விளையாட்டு களுக்கான வாய்ப்புகளும் இங்குள்ளன.
மென்மையான காலை வெளிச்சமும், அமைதியான கடலும் சூரிய உதயத்தின் பொழுது ஒரு அழகிய காட்சியை உருவாக்குகின்றது. ஆழமற்ற பகுதிகளில் நட்சத்திர மீன்கள் காணப்படுவது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கிறது.
ராமேஸ்வரம் செல்லும்பொழுது, கலாச்சார பாரம்பரியத்துடன் இயற்கை அழகையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஓலைக்குடா கடற்கரை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பார்வையிட சிறந்த நேரம் எது?
அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை காலநிலை இதமாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் கடற்கரைக்குச் சென்று அதன் முழுமையான அழகை அனுபவிக்கலாம்.