ஆண்டின் பெரும்பாலான நாட்கள் இதமான உடலை வருடும் குளிர் காற்று வீசும், பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலத்தில் ஒன்று தமிழக - கேரளா எல்லையில் உள்ள ராமக்கல்மேடு. மூணாறு - தேக்கடி சாலையில் நெடும் கண்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ராமக்கல்மேடு உள்ளது. தமிழ்நாட்டின் தேனி, கம்பம், குமளி வழியாகவும் இந்த இடத்திற்கு எளிதாக செல்லலாம்.
பசுமை போர்த்திய அழகான ராமக்கல்மேடு ஒரு மலைவாசஸ்தலம் ஆகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இது. புகழ்பெற்ற இந்த மலைவாசஸ்தலத்தில் இருந்து தமிழக கிராமங்கள் மற்றும் நகரங்களின் பரந்த காட்சியை காணமுடியும் என்பது சிறப்பு. இந்த இடம் இயற்கை அழகுக்கு மட்டுமல்ல அங்குள்ள ஏராளமான காற்றாலைகளுக்கு பெயர் பெற்றதாகவும் திகழ்கிறது.
இராமாயணத்தில் தனது மனைவி சீதையைக் கடத்திச் சென்ற லங்கை அரசன் ராவணனைத் தேடுவதற்காக ராமர் தனது கால்களை ராமக்கல்மேடு முனையில் வைத்ததாக இந்த இடத்தின் பின்னணியில் உள்ள கதை கூறுகிறது. இதற்கு சான்றாக ராமக்கல்மேடு என்ற பெயரின் அர்த்தம் "ராமனின் கல் நிலம்" அல்லது "ராமன் தனது புனித பாதத்தை பதித்த நிலம்" என்பதாக பொருள் தருகிறது.
இந்த இடம் குறவன் மற்றும் குறத்தியின் நினைவுச்சின்னம் கொண்ட ஒரு வரலாற்று தளமாகவும் உள்ளது. இடுக்கி அணையின் கட்டுமானத்துடன் தொடர்புடைய இரண்டு வரலாற்று கதாபாத்திரங்களை சித்தரிக்கும் இந்த அழகிய தத்ரூபமான பெரிய இரட்டை சிலைகள் 2005 ஆம் ஆண்டு மலையின் உச்சியில் அமைக்கப்பட்டது. இடுக்கி ஆர்ச் அணையானது குறவன் மலை (குறவன் மலை) மற்றும் குறத்தி மலை (குறத்தி மலை) என்ற இரண்டு பெரிய பாறை மலைகளை இணைக்கிறது.
ஏராளமான சிறப்புகள் கொண்ட இங்கு செல்ல, மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும்.
அழகிய வியூ பாயிண்ட்களுடன் வழியெங்கும் உள்ள பச்சை பசேலென்ற காப்பி, தேயிலை தோட்டங்கள் நம் மனதை நிச்சயம் கவரும். அனைத்து பருவங்களிலும் மணிக்கு 35 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது. குளிர்ந்த காற்று, பசுமையான மலைகள் என ராமக்கல்மேடு சுற்றுலா வாசிகளை வியக்க வைக்கும் ஒரு இடமாக உள்ளது.
மேலும் இங்கு கண்டு ரசிக்க காற்றாலை பண்ணை, இடுக்கி ஆர்ச் அணை, குறவன் குறத்தி சிலை, ராமக்கல் சிகரக்காட்சி, ஆமை பாறை, ஆமை பாறை ஜீப் சஃபாரி, திராட்சை பண்ணை, தேயிலை தோட்டங்கள், நீலக்குறிஞ்சி மலைகள், கம்பம் பள்ளத்தாக்கு காட்சி, ஹார்ன்பில் டவர், தூவல் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நம் மனதை உற்சாகம் கொள்ள வைக்கிறது.
பிரபல டைட்டானிக் படத்தின் ஹாலிவுட் ஹீரோவான லியோனார்டோ டிகாப்ரியோ ராமக்கல்மேடு குறித்து 'பூமியில் சொர்க்கம் இருந்தால் அது இங்கேதான்' என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்கின்றனர். உண்மைதான்.. இயற்கையின் சொர்க்க பூமியான இங்கு செல்லாமல் கேரள சுற்றுலா முழுமையடையாது.