
கொடைக்கானலில் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அருகே உள்ள கதவு மலைநாதன் சிவன் கோவில் மிக அழகிய தலமாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. பிரம்மாண்டமான பாறையில் குகை வடிவில் காணப்படும் இந்த கோவிலில் உள்ள குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. மலைச்சரிவில் ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் வண்ணம் அமைந்துள்ள இக்கோவிலுக்கு குறிப்பிட்ட இடத்திற்கு இடத்திற்கு மேல் வாகனங்களில் செல்ல இயலாது.
தாண்டிக்குடி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்டது அரசன்கொடை கதவு மலைநாதன் கோவில். மலைமுகடுகளுக்குள் சரிவான அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சித்திரை தமிழ் புத்தாண்டு பிறப்பன்று நிறைய மக்கள் தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் நடைப்பயணமாக இங்கு வந்து ஈசனை தரிசிப்பார்கள். இங்கு அமாவாசை, பௌர்ணமி தினங்களும் விசேஷமானவை.
இமயமலை சாரலில் அமர்நாத் பனி லிங்க தரிசனம்போல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் ஒரு சிவன் வீற்றிருக்கிறார். பாறையை தகர்த்து அமைத்த ஒத்தையடிப் பாதையில் நடந்து தான் இக்கோவிலை அடைய முடியும். பாதையின் இரு புறமும் கதவு போல பாறைகள் அமைந்துள்ளன. 1300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் இது.
தாண்டிக்குடி, பாச்சலூர், வடகவுஞ்சி பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. சரியான சாலை வசதி இல்லாததால் நடைபயணமாக இக்கோவிலை அடைய வேண்டியுள்ளது. இங்கு ஏராளமான குகைகளும், பாறை ஓவியங்களும் உள்ளன. இங்கு இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
இந்தக் கோவிலில் சிவன் லிங்கமாக இல்லாமல் சிலை வடிவாக காட்சி தருவது தான் சிறப்பு. இந்த மலையின் இரு புறமும் கதவுகள் போன்ற தோற்றம் கொண்டதால் 'கதவுமலை நாதன்' என்ற பெயருடன் இக்கோவில் விளங்குகிறது. நினைத்த காரியம் நிறைவேற இக்கோவிலுக்கு நிறைய பக்தர்கள் நடைபயணமாக வந்து செல்கின்றனர்.
சுற்றிலும் மலைமுகடுகளும், வானுயர்ந்த மரங்களும், மலை கிராமங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது. தொல்லியல் சின்னங்கள் பொதிந்து கிடக்கும் இந்த மலையை அமைதியை வேண்டி வரும் பக்தர்கள் அதிகம்.
இக்கோவிலின் வலது பக்கம் ஓடும் ஆறு ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கும், இடது பக்கம் ஓடும் ஆறு வரதமாநதி அணைக்கும், வடக்கு பக்கம் ஓடும் ஆறு பரப்பலாறு அணைக்கும் செல்கிறது. இப்படி இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் தாண்டிக்குடி வழியாக வந்து ஈசனை தரிசித்து செல்கின்றனர்.
இந்த ஆலயத்தை சுற்றி மூன்று பக்கங்களிலும் பாயும் ஆறுகளால் இந்த மலை அடிவாரத்தில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கம், பரப்பலாறு, மஞ்சளாறு, அமராவதி அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது.
எங்குள்ளது?
கொடைக்கானலுக்கு அருகில் உள்ளது தாண்டிக்குடி. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அரசன் கொடையில் கதவு மலைக்கோயில் அமைந்துள்ளது. பாறையை தகர்த்து அமைத்த ஒத்தையடி பாதையில் நடந்து தான் இக்கோயிலுக்கு செல்ல முடியும். வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக்குடிக்கு செல்ல பஸ் வசதியும், ஜீப் வசதியும் உண்டு.