-மரிய சாரா
இந்த வரிகள் ஏதோ ஒரு பாடலில் கேட்டதுபோல இருக்கிறதா? ஆம் இது ‘மாறா’ திரைப்படத்தில் வரும் ‘யார் அழைப்பது?’ பாடலில் வரும் வரிகள்தான். தனது வரிகளை ஊடாக ஒரு கவிஞனால் கேட்பவருக்குக்கூட போதை ஏற்ற முடியும் என்பது, இதுபோன்ற சில பாடல்களைக் கேட்கும்போதுதான் புரிகிறது. போய் சேரும் வரை எங்கு செல்கிறோம் என்பதே தெரியாது என்றால் அதைவிடப் போதை தரும் எல்லையற்ற இன்பம் ஏதும் உள்ளதா எனக் கேட்கிறார் இந்த பாடல் ஆசிரியர்.
உண்மைதான். இப்படிப்பட்ட ஆசை என்பது எல்லோருக்கும் இருக்கும். யோசித்து பாருங்களேன், நீண்ட நெடும் பயணம் அந்த பயணத்திற்கு வரையறை இல்லை. இங்குதான், இத்தனை நாள், இப்படித்தான், இதெல்லாம்தான் இப்படி எந்த அளவுகளும் இல்லை. உண்மையில் இப்படி ஒரு பயணம் செல்ல நிறைய பணம்கூடத் தேவை இல்லை. நினைத்தால் வெறும் மிதிவண்டியில் கூடச் செல்லலாம். செல்லும் இடத்தில் கிடைப்பதை உண்ணலாம். நினைத்த இடத்தில் தூங்கலாம்
எந்தத் தொல்லையும் இல்லை. துரத்தும் நினைவுகள் இல்லை, கட்டுப்பாடுகள் இல்லை, கட்டிப்போட ஆளில்லை, விமர்சனங்கள் பற்றிய கவலைகள் இல்லை. அடடே, நினைக்கவே அலாதியாக உள்ளதல்லவா? உண்மையில் நினைத்துப் பார்த்தால், நம் ஒவ்வொரு வருக்குள்ளும் இப்படியான நேரம் கிடைக்காதா என்ற ஏக்கம் நிச்சயம் இருக்கும்.
சின்ன குழந்தைகளுக்கு இருக்கும் அந்தக் காரணமே இல்லாத மகிழ்ச்சி நமக்குக் கிடைக்காதா என எங்கும் மனநிலை நம் அனைவருக்குமே இருப்பதுதான். குறிப்பிட்ட வயது வரை எந்தக் கவலையும் இல்லாமல் எதைப்பற்றியும் அதிகம் யோசிக்காமல்தான் நாம் வளர்கிறோம். ஆனால் வயதில் வளர வளர, அனைத்தும் மாறிப்போகிறது. வயது அதிகமாக அதிகமாக நமது பொறுப்புகளும், கவலைகளும் சுமைகளும் வளர்ந்துகொண்டேதான் போகின்றன.
சில காலம் கழித்து வயது முதிர்ந்த பின் அய்யோ என் வாழ்வை வீணடித்துவிட்டேனே! எனக்கு பிடித்ததை செய்யவில்லையே! மற்றவர்களுக்காகவே வாழ்ந்துவிட்டேனே! என்றெல்லாம் புலம்பி அழுவதில் எந்த பயனும் இருக்காது. வாழ்க்கையும் ஓடிப்போய் தீர்ந்துபோய் இருக்கும். எதையும் செய்யும் வலிமையையும் நமது கையில் இருக்காது.
இது நமது வாழ்க்கை, நமக்கான வாழ்க்கை. ஆகவே எனக்கு இந்த பிரச்னை இருக்கு, அந்தப் பிரச்னை இருக்கு என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருக்கும் உறவுகளே கேளுங்கள். உங்கள் குடும்பத்தோடு அல்லது தனியாகவே ஒரு சின்னப் பயணம் சென்று வாருங்கள். மனம் லேசாகும். எல்லாம் மாறும். மாற்றுவதற்கான வலிமையும் உங்களுக்கு கிடைக்கும். புலம்பல்கள் போதும். உங்களை நீங்கள் தெம்பாக்கிக்கொள்ள முயலுங்கள்.