போலந்து பயணம் 3 - தானாக எரியும் வார்சா விளக்குகள்!
வார்சாதான் போலந்தின் தலைநகர். உயர்ந்த கட்டிடங்களும், அதிகமாக ஓடும் ட்ராம்களும் நம்மை வரவேற்கின்றன. ஐரோப்பாவின் பல நகரங்களிலும் இன்னும் டிராம்களும், வெஸ்டிப்யூல் பஸ்களும், ரயில்களும் சேர்ந்து, போக்குவரத்தை எளிமையாக்குகின்றன. நம்மூரில் பல்லாண்டுகளுக்கு முன்பாகவே ட்ராம்களுக்கு விடை கொடுத்து விட்டோம்!
நகரின் முக்கியச் சாலைகளில் உயர்ந்த கட்டிடங்களும், அருகிலேயே உயரம் குறைந்தவை இருந்தாலும், முக்கிய வீதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நான்கு மாடி என்றால் அனைத்துக் கட்டிடங்களும் அதே உயரத்திலேயே உள்ளன. தெருக்களுக்கு அதுவே ஓர் தனியழகைக் கொடுத்து விடுகிறது! இப்பொழுது வீட்டுக் கதவுகளைத் திறக்க அருகிலுள்ள செல் போன்ற அமைப்பில் எண்களைப் போட்டே திறக்கிறார்கள்.
இருட்டி விட்டால் விளக்குகள் தானாக எரிவதையும், சில சந்துகளில் நாம் நுழைந்தாலே விளக்கு எரிவதையுமெல்லாம் பல இடங்களிலும் காண முடிகிறது. ஹாலில் இருக்கும் ஒரே மின் விளக்கைப் பல வண்ணங்களில் எரிய விடுவதும், அதனையே ஒளியைக் குன்றச் செய்து நைட் லாம்ப்பாகப் பயன்படுத்துவதெல்லாம் இங்கு சர்வ சாதாரணமாகி விட்டது. ’பவர் கட்’ டும் எங்கும் ஏற்படுவதில்லை. (எங்கள் கூடுவாஞ்சேரியிலோ தினமும் பவர்கட் என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.)
வார்சா அரண்மனையை அழகாகப் பராமரிக்கிறார்கள். விசுத்துலா ஆற்றின் கரையில் சாலையையொட்டிக் கம்பீரமாகக் காட்சி தருகிறது அது. சாலைக்குச் சற்று மேலே அழகிய புல் வெளி! அதில் பவுண்டன்களும், இருபுறமும் உட்கார அழகிய பெஞ்சுகளும் உள்ளன.
சரிவுப் பாதையில் மேலேறிச் சென்றால் அரண்மனையின் முகப்பு. அரண்மனையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ‘ஓல்ட் டவுன்’ என்று அழைக்கிறார்கள். ஓல்ட் டவுனைச் சுற்றிச் சுவர்களையும் எழுப்பி இருக்கிறார்கள். கட்டிட அமைப்பிலேயே ஓல்டுக்கும், நியூவுக்கும் வித்தியாசம் தெரிகிறது.
உள்ளே உள்ள சாலைகளைக் கருங்கற்களால் போட்டு, பராமரிப்பை எளிதாக்கியுள்ளார்கள். பல தெருக்கள் உள்ளே உள்ளன. பழைய, பெரிய வீடுகளின் அடித்தளங்களில் கடைகளும், ரெஸ்டாரண்டுகளும் செயல்படுகின்றன. தெருக்களைத் தாண்டி வந்தால் சிட்டி சென்டர் அல்லது சதுக்கம் என்ற அகண்ட பொதுவிடத்திற்கு வரலாம். அங்குள்ள ஒரு கட்டிடத்தின் படிகளில் ஏறிச் சென்றால் நல்ல உயரத்திலிருந்து நகரின் அழகைக் கண்டு களிக்கலாம். சதுக்கத்தில் பலரையும் கவரும் வண்ணம் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரண்மனை, பார்க், பவுண்டன் என்று ஒரு நாள் முழுவதும் சுற்றி வந்தோம்.
அடுத்த நாள் மிருகக் காட்சி சாலை சென்றோம். எல்லா இடங்களையுமே மரங்களால் நிறைத்து விடுகிறார்கள். ஐரோப்பிய மிருகக் காட்சி சாலைகளில் பிளமிங்கோ (flamingo) இல்லாதவையே இருக்காது என்று கருதுகிறேன். தங்கள் நீண்ட கழுத்துக்களை இறகுகளுக்குள் செருகித் தூங்குவது போல் அவை அழகு காட்டின.
அவற்றைத் தொடர்ந்து கங்காருகள், வரிக் குதிரைகள், குதிரைகள், மான்கள், ஒட்டகச் சிவிங்குகள், புலிகள், சிறுத்தைகள், காண்டா மிருகம், ஒட்டகங்கள் என்று பல விலங்குகளும் உள்ளன. எல்லாவற்றையும் புல் வெளிகளில் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார்கள்.
பல மிருகங்கள் பல எண்ணிக்கையில் இருந்தன. சிங்கம் மட்டும் ஒன்று மட்டுமே கண்ணில் பட்டது. ஒரு காட்டுக்கு ஒரு ராஜாதான் என்பதாலோ! அதுவும் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டேயிருந்தது. சிங்கம் ஒரு நாளில் 20 மணி நேரத்திற்கு மேல் தூக்கத்திலும், ஓய்விலுந்தான் இருக்குமென்று எப்பொழுதோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது.
ஏற்கெனவே ஹங்கேரியில் இது போன்ற ஒரு மிருகக்காட்சிச் சாலை சென்றதாக ஞாபகம். அங்கும் எல்லா மிருகங்களையும் பல எண்ணிக்கையில் வைத்திருந்தார்கள். ஒன்றிரண்டு ஓய்வெடுத்தாலும் மற்றவைகளைக் கண்டு நாம் மனம் மகிழலாம்!
அடுத்த நாள் அங்குள்ள ‘கோப்பர்நிகஸ் சயின்ஸ் சென்டர்’ சென்றோம். கூட்ட நெரிசலைத் தடுக்கும் விதமாக, குறிப்பிட்ட நேரத்தில் குறித்த எண்ணிக்கையினரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். உள்ளே சென்றால் நிறைய நிகழ்ச்சிகளைக் காணலாம்! சிறுவர்களுக்கும், ஏன்? பெரியவர்களுக்குங்கூட விஞ்ஞானத்தை எளிதாக விளக்குகிறார்கள்.
அதனை முடித்துக் கொண்டு சுமார் 400 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள ஜிடன்ஸ்க் நகருக்குப் பயணமானோம். ஜிடன்ஸ்க் நகரில் தங்கி, இரண்டு மூன்று ‘பீச்’களுக்குச் சென்றோம்.
ஒரு பீச்சின் அருகிலுள்ள 'அக்வேரியம்' (Aquarium) சென்றோம். அப்பப்பா!மீன்களில்தான் எத்தனை வகைகள்! எத்தனையெத்தனை வண்ணங்கள் மற்றும் டிசைன்கள்!
ஆண்டவன், தான் சந்தோஷமாக இருந்த நேரத்தில் மலர்கள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் இவற்றைப் படைத்திருக்க வேண்டும். இவற்றின் வண்ணங்களும், வகைகளும் நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்துகின்றன.
நம்மூரிலும் எல்லாம் உள்ளன. சுற்றுலாத் தளங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் வெளிநாட்டுப் பயணியரும் அதிக அளவில் வருவர்! அரசின் வருமானமும், வேலை வாய்ப்பும் பெருகும்! அரசின் சட்ட திட்டங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்கும் விதமாக அமைய வேண்டும். பொருளாதாரப் பற்றாக்குறை இருக்கும் மக்களால் சுற்றுலாவைப் பற்றி நினைக்கக்கூட முடியாதே!
அத்தோடு, நம் மக்களும் எப்பொழுதும் பணத்தைச் சேமிப்பதிலேயே குறியாக இல்லாமல், மனதிற்கு இதமளிக்கும் சுற்றுலாக்களுக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, குடும்பத்தினருடன் ஊர், உலகைச் சுற்றி வந்து உற்சாகம் பெற மனது வைக்க வேண்டும்!
(நிறைந்தது)
ரெ.ஆத்மநாதன், சூரிக், சுவிட்சர்லாந்து