வேடந்தாங்கல் போகாமலேயே லட்சக்கணக்கான பறவைகளை பார்க்கணுமா.. சென்னைக்கு அருகில் இருக்கும் ரகசிய தீவு!

pulicat-lake-bird-sanctuary
pulicat-lake-bird-sanctuary
Published on

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே சென்னையில் வெயிலின் தாக்கம் நம்மைப் பாடாய்ப்படுத்திவிடும். ஊட்டி சென்று படகு சவாரி செய்யவோ, கன்னியாகுமரிக்கு சென்று சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கவோ நமக்கு நீண்ட நாட்கள் விடுமுறை தேவைப்படும். 

ஆனால், இது அத்தனையையும் ஒரே நாளில், அதுவும் சென்னைக்கு மிக அருகிலேயே அனுபவிக்க ஒரு அட்டகாசமான இடம் உள்ளது. அதுதான் இயற்கையின் மாபெரும் பொக்கிஷமான பழவேற்காடு ஏரி. 

பயண தூரம்!

பழவேற்காடு ஏரியை அடைவது மிகவும் சுலபமான ஒரு விஷயம். சென்னை சென்ட்ரல் பகுதியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்திலும், புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த இடம் அமைந்துள்ளது. சொந்த வாகனத்தில் பொன்னேரி வழியாகச் செல்வது ஒரு இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும். 

பேருந்தில் செல்பவர்கள் கோயம்பேடு அல்லது திருவொற்றியூர் வழியாகச் செல்லும் மாநகரப் பேருந்துகளைப் பயன்படுத்தலாம். ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் கவரைப்பேட்டை அல்லது கும்மிடிப்பூண்டி வரை ரயிலில் சென்று, அங்கிருந்து உள்ளூர் பேருந்துகளிலோ அல்லது ஆட்டோவிலோ இந்த ரம்மியமான இடத்தை இரண்டு மணி நேரத்திற்குள் ஈஸியாக அடைந்துவிடலாம்.

பிரமிக்க வைக்கும் சிறப்பம்சங்கள்!

இந்த ஏரி சாதாரணமான ஒரு ஏரி கிடையாது. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர் ஏரி என்ற மாபெரும் பெருமையை இது கொண்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்களுக்கு இடையே சுமார் 759 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இது பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது. 

விண்வெளி ஆராய்ச்சிகள் நடைபெறும் புகழ்பெற்ற ஸ்ரீஹரிகோட்டா தீவு இந்த ஏரிக்கு மிக அருகாமையில் தான் அமைந்திருக்கிறது. இங்கு காலை வேளையில் தெரியும் சூரிய உதயம் உங்களை அப்படியே கட்டிப்போடும் அளவுக்கு அழகாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட்டுக்குள் படகு சவாரி செய்ய கொல்லிமலையில் இப்படி ஒரு இடமா!
pulicat-lake-bird-sanctuary

படகு சவாரி!

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்வது இங்குள்ள படகு சவாரி தான். உள்ளூர் மீனவர்களின் உதவியோடு சிறிய படகுகளில் ஏரியின் நடுவே செல்வது த்ரில்லிங்காக இருக்கும். இதற்கு வாடகையாக 400 முதல் 1000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அக்டோபர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த பகுதி முழுவதுமே ஒரு பெரிய பறவைகள் சரணாலயமாக மாறிவிடும்.

வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் ஃப்ளெமிங்கோக்கள், கொக்குகள் மற்றும் வாத்துகள் என பலவிதமான பறவைகளை கேமராக்களில் படம் பிடிப்பது ஒரு தனி சுகம். இதுதவிர அங்குள்ள பழமையான கோயில்கள், சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்க்கை முறையையும் நாம் நேரில் பார்த்து ரசிக்கலாம்.

ஒரு நாள் விடுமுறையை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உற்சாகமாகக் கழிக்க இதைவிட ஒரு சிறந்த இடம் சென்னைக்கு அருகில் இல்லை. இந்த ஏரிக்கோ அல்லது பறவைகளைப் பார்ப்பதற்கோ நீங்கள் எந்த ஒரு நுழைவுக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், அதிகாலை அல்லது மாலை வேளைகளில் இங்கு செல்வது உடலுக்கு இதமாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
கெமிக்கல் வேண்டாம்... இயற்கை போதும்! முகம் ஜொலிக்க சில ரகசியங்கள்!
pulicat-lake-bird-sanctuary

இயற்கை எழில் கொஞ்சும் இந்த பழவேற்காடு ஏரிக்கு இதுவரை நீங்கள் சென்றதில்லை என்றால், இந்த வார இறுதியிலேயே ஒரு பிளான் போட்டு கட்டாயம் சென்று வாருங்கள். உங்களின் மன அழுத்தம் முழுவதும் காணாமல் போய் ஒரு புதிய பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பது நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com