

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி, ராமக்கல்மெட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இப்பகுதி தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதில் ராமக்கல்மெட்டு பகுதி கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அனைத்து இயற்கை ஆர்வலர்களுக்கும் புத்துணர்ச்சி யூட்டும் இந்த அழகிய இடம், இங்குள்ள பாறை மேற்பரப்பில் காணப்படும் பாதத் தடங்களின் காரணமாக ராமக்கல் மெட்டு என்று இப்பெயரைப் பெற்றது. இந்தப் பாதத் தடங்கள் ராமர் பெருமானுடையவை என்று நம்பப்படுகிறது. இந்திய இதிகாசமான ராமாயணத்தின்படி, ராமர் பெருமான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார். பழங்காலக் கதைகளின்படி, ராமர் பெருமான் தனது மனைவி சீதையைத் தேடிச் சென்றபோது இந்த இடத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அவரது வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் என்பதால், இந்த மலைகளுக்கு ராமக்கல்மேடு என்று பெயரிடப்பட்டது.
ராமக்கல்மேடு மலைகள், கேரளத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அழகிய கிராமங்களின் அற்புதமான பரந்த காட்சிகளைப் பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன. கிழக்கு நோக்கி நிற்கும் 300 மீட்டர் உயரமான தூண் போன்ற பாறை அமைப்பு இங்குள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ராமக்கல்மேட்டில், அதன் இயற்கை அழகைத் தவிர, மிகவும் சுவாரஸ்யமான அம்சம் இங்கு அமைந்துள்ள மிக உயரமான இரட்டைச் சிலையான. குறவன் மற்றும் குறத்தி சிலை, ஒரு பழங்குடித் தம்பதியினர் தங்கள் சிறு குழந்தையுடன் பார்வையாளர்களை அலட்சியமாகப் பார்ப்பது போல் உள்ளது. இங்குள்ள மற்ற ஈர்ப்புகளில் ஆமைப் பாறை, தவளைப் பாறை போன்ற பல்வேறு இடங்களும் அடங்கும்.
40 அடி உயரத்தில் குறவன் குறத்தி ராட்சத சிலை அமைக்கப்பட்டுள்ள இங்கு மணிக்கு 35 கிமீ வேகத்தில் காற்று வீசும். ஆசியா கண்டத்திலே காற்று அதிகம் வீசும் பகுதிகளில் ராமக்கல்மெட்டும் ஒன்று. அதனால் இப் பகுதியை சுற்றிலும் காற்றாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. தேக்கடிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ராமக்கல்மெட்டு பகுதிக்கு அவசியம் வந்து செல்கின்றனர். இங்கு இயற்கையில் வீசும் காற்றுக்கு மத்தியில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த சிலை சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக உள்ளது.
இடுக்கி அணை கட்டுவதற்கு உதவியாக இருந்ததாகக் கருதப்படும் குறவன் மற்றும் குறத்தி என்ற இரு வரலாற்று கதாபாத்திரங்களின் பிரம்மாண்டமான சிலை இது. 2005-ல் நிறுவப்பட்டது. இந்த, குறவன் மற்றும் குறத்தியின் சிலைக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. இடுக்கி அணையின் கட்டுமானத்திற்குப் பின்னால் இருந்த இரண்டு வரலாற்றுப் பாத்திரங்கள் குறவன் மற்றும் குறத்தி என்று கூறப்படுகிறது.
இடுக்கி அணைக்கு இடையில் உள்ள பாறைகளுக்கு அவர்களின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. தகவல்களின்படி, அணையைக் கட்டுவதற்குச் சரியான இடத்தைக் கண்டறிய குறவனும் குறத்தியும் அதிகாரிகளுக்கு உதவியுள்ளனர். மலைகளின் மீது குறவன், அவரது குடும்பத்தினர் மற்றும் ஒரு சமையல்காரரின் சிலையை நீங்கள் காணலாம். ஆனால், சுற்றுலாப் பயணிகள் சிலையின் மீது ஏற அனுமதிக்கப்படுவதில்லை. சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக சிலைக்குப் பின்னால் கட்டப்பட்ட ஒரு மண்டபத்தையும் நீங்கள் காணலாம்.
டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும். இங்குள்ள சிலையை பார்க்கவே நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். ‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளத்தின் மேற்கு எல்லைப் பகுதியான கம்பம்மெட்டு வழியாக 26 கிமீ தொலைவில் உள்ளது ராமக்கல்மெட்டு. குமுளியிலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் செங்கனாசேரி (90 கி.மீ.) மற்றும் அருகிலுள்ள விமான நிலையம் மதுரை (145 கி.மீ.) ஆகும். ராமக்கல்மேடுக்குச் செல்ல செப்டம்பர் முதல் மே வரையிலான காலம் சிறந்த பருவமாகும். மழைக்காலத்தைத் தவிர்க்கலாம்.