இந்தியாவில் மறைந்து தோன்றும் கடற்கரை எங்குள்ளது தெரியுமா?

 சந்திபூர் கடற்கரை
சந்திபூர் கடற்கரை

டற்கரை என்றதும் நம் நினைவுக்கு வருவது என்ன? அடிக்கடி வந்து நம் கால்களை வருடி செல்லும் அலைகளும், ஓயாது வீசிக்கொண்டிருக்கும் கடற்கரை காற்றும், பிரமிக்க வைக்கும் கடல் நீரும், கரை ஒதுங்கியிருக்கும் கிளிஞ்சல்களும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இன்று நான் கூறப்போகும் கடற்கரை உங்களுடன் கண்ணா மூச்சி விளையாடும் தெரியுமா?

ஆம். ஒரு சமயம் கண் எதிரேயிருப்பது அடுத்த நொடி மறைந்து போகும். அது எப்படி சாத்தியம்? என்று கேட்கிறீர்களா? அதை பற்றித்தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க.

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசூர் மாவட்டத்தில் இருக்கும் சந்திபூர் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அதிசய கடற்கரையே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்த கடலில் நடக்கும் அதிசய நிகழ்வு என்னவென்றால், உயர் அலையிலிருந்து தாழ்வு அலைக்கு மாறும் போது கடல்நீர்  5 கிலோ மீட்டர் உள்ளே சென்றுவிடும். பிறகு திரும்பவும் உயர் அலையின் போது தண்ணீர் திரும்ப கரைக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிசய நிகழ்வு இக்கடலில் தினமும் நடக்கிறது. ஒரு நிமிடம் கண் முன் இருந்த கடல் அடுத்த நிமிடம் காணாமல் போவது சுற்றுலாப்பயணிகளை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகிறது.

இதனால் இந்த கடற்கரையை காண அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். கடல் தண்ணீர் உள்ளே போகும் போது, கடல் படுக்கையின் மீது நடந்து செல்லலாம். அது கடலிலே நடப்பது போன்ற பிம்பத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 சந்திபூர் கடற்கரை
சந்திபூர் கடற்கரை

இந்த நிகழ்வை முதல் முதலில் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். இப்படி நடப்பதற்கு குறிப்பிட்ட நேரம் காலம் கிடையாது. நிலவின் சுழற்சிக்கு ஏற்ப கடல் நீர் உள்வாங்குவது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு சிறப்பம்சம் இந்த கடலில் உள்ளதால் பல்லுயிர்களை ஆதரிக்கும் வண்ணமாக உள்ளது. இந்த கடற்கரை சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாக அமைந்திருக்கிறது. இங்கே சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற மாதம், நவம்பர் முதல் மார்ச் வரையாகும். இவ்விடத்தில் கடல் உணவுகள் மிகவும் பிரபலமாகும். மீன் வகைகள் மிகவும் மலிவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 சந்திபூர் கடற்கரை
சந்திபூர் கடற்கரை

கடலில் இந்த நிகழ்வு சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் நிகழுமாம். இந்த கடற்கரை அமைதி விரும்பிகளுக்கும், தனிமை விரும்பிகளுக்கும் மிகவும் பிடிக்கும். கடற்கரை ஓரமாக நடந்து செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த கடற்கரையை ரசிப்பார்கள். இந்த கோடைக்காலத்தில் இப்படியொரு அதிசய கடற்கரைக்கு ஒரு விசிட் அடித்து இந்த ஆச்சர்யமான நிகழ்வை ரசித்து விட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com