ராட்சச மலைகள்...
ராட்சச மலைகள்...

வியட்நாமில் பயமுறுத்தும் பாறை மலைகளும் இருட்டு குகைகளும்!

வியட்நாம் - பகுதி 3

டகில் சென்றுகொண்டிருக்கிறோம். கடலுக்குள்ளிருந்து எழுந்து வானை நோக்கி உயர்ந்த மாபெரும் கரிய ராட்சச மலைகளை திடீரென கண்ணெதிரே பார்க்கும்போது எப்படி இருக்கும்? கிங்காங், காங் ஸ்கல் ஐலேண்ட் (Kong: Skull Island)  ஹாலிவுட் திரைப்படங்கள் நினைவுக்கு வருகிறதல்லவா… அதே இடம்தான்… தென் சீனக் கடல் பகுதி.

வியட்நாமில், தென் சீனக் கடலின் ஹலாங்  விரிகுடா (Halong Bay) வுக்குச் சென்றபோதுதான் அந்த  பயமுறுத்தும் அதிசயங்களைப் பார்த்தோம்.

உலகின் இயற்கை அதிசயங்கள் அவை! யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுண்ணாம்புக்கல் பாறை மலைகள்!

ஹலாங் விரிகுடா என்பது வடக்கு வியட்நாம் பகுதியில் ஹனோய்க்குக் கிழக்கே 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பயமுறுத்தும் பாறை மலைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக, ஹனோய் நகரில் நாம் சுற்றிய சில பகுதிகளைப் பற்றிய செய்திகள்..

தெற்கு வியட்நாமின் ஹோ சி மின் நகருக்கு வடக்கே 1,760 கிலோமீட்டர் தொலைவில், தென் சீனக் கடல் அருகே 80 மைல் தொலைவுக்குள்ளும் இருப்பது ஹனோய் நகர்.

வியட்நாம் நாட்டிலேயே மிகப் பெரிய, மிக மிக அழகிய ஹோசி மின் நகரின் டான் சன் நாட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Tan Son Nhat International Airport) ஹனோய்க்குப் பறந்தோம். வியட்ஜெட்  ஏர்வெஸ் விமானத்தில் சுமார் இரண்டேகால் மணி நேரப் பயணம். (சென்ற நவம்பரிலிருந்து, திருச்சி, கொச்சி போன்ற இந்திய நகரங்களிலிருந்து, ஹோ சி மின் நகருக்கு வியட்ஜெட் விமானங்கள் இயக்கப்படுகின்றன.) நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் (Noi Bai International Airport) இறங்கிய போது லன்ச் நேரம். நல்ல பசி.

முதலில் நாங்கள் தங்க வேண்டிய ஹனோய் டேவூ ஹோட்டல் (Hanoi Daewoo Hotel) என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்தோம். இது ஹனோய் நகரில் முதன்முதலில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டல். அறையில் செக் இன் செய்தபிறகு, அங்கேயே வியட்நாம் உணவு சாப்பிடலாமா என்று யோசித்தோம்.

வியட்நாம் ஸ்பெஷலான ஸ்ப்ரிங் ரோல்ஸ், கிரில்ட் மீட் பால்ஸ், டர்மரிக் ஃபிஷ், நூடுல் பௌல், நூடுல் சூப், புரோக்கன் ரைஸ் என்று இன்னும் பல நான்வெஜ் அயிட்டங்கள்கொண்ட மெனுகார்ட் அவர்கள் மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்ததைக் கவனித்தோம்

சைவமான நமக்கு  இண்டியன் ரெஸ்டரண்ட்தான் சரிப்படும் என்று தீர்மானித்து, ‘நமஸ்தே’ உணவு விடுதிக்குச் சென்றோம். (கனமான) ரொட்டி, தால், சப்ஜி , சாதம், கிடைத்தால், வேறென்ன வேண்டும்?

னோய் நகரம் மிக நவீனமாகக் காட்சியளித்தது. ஜப்பானியத் தொழில் நுட்பத்தில் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது. மறக்கமுடியாத இடங்களில் ஒன்று, ஹனோய் நகரின் முக்கிய இடமான ஹோசிமின் முசோலியம் வளாகம். (Ho Chi Minh Mausoleum complex).

ஹோசிமின் முசோலியம் வளாகம்
ஹோசிமின் முசோலியம் வளாகம்

வியட்நாமின் புரட்சித் தலைவரும், அதிபருமான ஹோசிமின் அவர்களின்  நினைவிடம். நகரின் மையப் பகுதியில் பா டின் சதுக்கம் (Ba Dinh Square) என்ற இடத்தில் அமைந்திருக்கும் மிகப் பெரிய வளாகம் இது.

இந்த வளாகம்,  ஹோ சி மின் கல்லறை (Ho Chi Minh’s Mausoleum) ஹோ சி மின் ஸ்டில்ட் ஹவுஸ் (Ho Chi Minh’s Stilt House), ஜனாதிபதி மாளிகை (Presidential Palace), ஹோ சி மின் அருங்காட்சியகம் (Ho Chi Minh Museum) மற்றும் புத்தர் கோயிலான ஒரு தூண் பகோடா (One Pillar Pagoda) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  இந்த இடம் ஒரு வரலாற்றுச் சின்னமாகவும் இருப்பதால் பார்வையாளர்கள் குவிகிறார்கள். நுழைவாயிலைக் கடந்து சற்று தூரம் நடந்த பிறகு பெரிய தூண்களுடன் கூடிய மண்டபம் போன்ற அமைப்பு உயர்ந்து நிற்கிறது.

ஹோ சி மின் கல்லறையில் எம்பாம் செய்யப்பட்ட அவரது உடல் ஒரு அறைக்குள் கூலர் உள்ளே  கண்ணாடிப் பேழைக்குள், தீவிரமான ராணுவப் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது.

ஒற்றைத் தூண் பகோடா என்ற சற்றே சிறிய புத்தர் கோயிலில், சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். தாமரை இதழ்களின் வடிவத்திற்குள், ஒரே ஒரு தூண் போன்ற அமைப்பின் மீது கட்டப்பட்டுள்ளது. 1024ம் வருடம் கட்டப்பட்டு இப்போது 1000  ஆண்டுகளை  நிறைவு செய்துள்ள கோயில் இது.

கைதிகள்...
கைதிகள்...

டுத்து  போர் (War) மியூசியம், சிறைச்சாலை விசிட். வியட்நாம் என்றால் போர் இல்லாமலா? அன்றிருந்த கைதிகள்,  இன்றைய மெழுகுப் பொம்மைகளாய்க் காட்சி தருகிறார்கள். எல்லாமே மனதை கனமாக்கும் காட்சிகள்…பொருட்கள்..

மிக நவீன முன்னேற்றம் கண்ட ஹனோய் நகரின் சில கட்டடங்களில், பல நூற்றாண்டுகளைக் கண்ட பழமையும் கருத்தைக் கவர்கிறது.

மக்களிடையே தெற்காசியா, சீனா, மற்றும் ஃப்ரான்ஸ் கலாசாரம் கலந்த பாரம்பரியம் என்று சுவாரஸ்யம் காட்டும் ஹனோய் நகருக்கு வயது ஆயிரம் ஆண்டுகள்.

இந்நகரின் இதயத்தைப் பார்க்க வேண்டுமென்றால் ஒல்ட் குவார்ட்டர் (Old Quarter) என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். நெருக்கமான 40 தெருக்கள்.  கூட்டமான கூட்டம். எல்லாப் பொருட்களையும் விற்பனை செய்யும் நூற்றுக் கணக்கான கடைகள், தெருவோர உணவுகள், சைக்கிளில் மெல்ல நகர்ந்து, பூக்கள், பழங்கள் விற்பவர்கள்,செக்கர்ஸ் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவோரின் உற்சாகக் கூச்சல் (காசு வைத்து விளையாட்டா -தெரியவில்லை) என்று கலவைகளான சத்தம்.

விற்பனை செய்யும் கடைகள்...
விற்பனை செய்யும் கடைகள்...

டுத்த நாள் ஹனோயிலிருந்து கோச்சில் ஹலாங் பே (Ha Long Bay) போர்ட் சென்றோம்.

பே அருகே சென்றதும் நாங்கள் இறங்கியது ஒரு வித்தியாசமான இடம். கடலில் கிடைக்கும் ஏராளமான ‘ஆயிஸ்டர்’ (Oyster) என்ற சிப்பிகளிலிருந்து செயற்கை முத்துக்கள் தயாரிக்கும் இடம் மற்றும் விற்பனைக் கூடம். சிப்பிக்குள் விழும் துகள், அதைச் சுற்றி சிப்பி உண்டாக்கும் அடுக்கடுக்கான கால்சியம் கார்பனேட் போன்ற வேதியியல் பொருளால், காலப்போக்கில் முத்துக்களாகிறதல்லவா? அதேதான். சிப்பிகளுக்குள் ஒரு மெல்லிய திசுவை மெல்ல இம்ப்ளான்ட் செய்து பாதுகாக்கிறார்கள். முத்துக்கள் உருவாக ஆறு மாதம் முதல் நான்கு வருடங்கள் வரை ஆகலாம். உருவாக்கத்தை ஒவ்வொரு கட்டமாக டெமொ செய்து காட்டுகிறார்கள். அங்கேயே மிகப் பெரிய ஹாலில் விற்பனைக்காக விதவித வண்ணங்களில் முத்து நகைகள் ஜொலிக்கின்றன. விலை? அபாரம்… இந்திய ரூபாயில் ஒரு வியட்நாம் டாங் 297 ரூபாய்க்கு சமம்.  (Vietnamese Dong (VND)) ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான அந்த ஊர் கரன்சி, சுமார் 24000 டாங்குகள். (1 USD = 24,521 VND ) சின்னதாக முத்துத் தோடு வாங்கியதோடு பட்ஜெட் ஓவர்.

கோல்டன் க்ரூயிஸ்...
கோல்டன் க்ரூயிஸ்...

பெரிய சொகுசுக் கப்பலான ‘கோல்டன் க்ரூயிஸ்’ எங்களுக்கான  ஸ்டேட் ரூமுடன் காத்திருந்தது. எங்கள் அறை பால்கனியிலிருந்து பார்க்கும்போதே தொலைவில் தெரிந்த ராட்சசப் பாறைகள் பிரமிக்க வைத்தன. சிறு படகுகள், சூரிய ஒளியில் மினுமினுத்த மரகதப் பச்சை நீரில் மெல்ல அசைந்து கொண்டிருந்தன.

ஆயிரக்கணக்கான குட்டித் தீவுகளில் சில தொலை தூரத்தில் பாறைகளின் இடுக்கில் தென்பட்டன. இயற்கை அளித்த மயக்கப் பேரழகு அது.  வர்ணிக்க வார்த்தைகள் இல்லை…

‘ஹலாங்’ என்றால் ‘தரையிறங்கும் டிராகன்’ (descending dragon) என்று அர்த்தமாம்.

ஒரு டிராகனின் பெரிய வால் பூமியைக் கிழித்து, பள்ளத்தாக்குகள் மற்றும் பிளவுகளை உருவாக்கி, அந்த மிருகம் அருகிலுள்ள தண்ணீரில் குதித்தபோது வெள்ளத்தில் மூழ்கியது என்று ஒரு புராணக் கதை இங்கு நம்பப்படுகிறது.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கடலோரத்தில் வசிக்கும் மக்கள், மீன்பிடித்தல், மற்றும், சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கிறார்கள்.

ளம் காலை ஒளியில் ஸ்டாலக்சைட் (stalactite)  பாறை மலைகளை  நோக்கி படகில் பயணம். நின்றபடி துடுப்புப் போடுகிறார் அந்த ஊர் படகோட்டி. அருகே செல்லச் செல்ல மலைப்புத் தருகின்றன ராட்சச மலைகள். மலைகள் நடு நடுவே அச்சமூட்டும் இருட்டுக் குகைகள் வேறு. ஒரு குகைக்குள் படகு நுழைகிறது. இருட்டில், தலையில் இடிக்கும் கூரான தொங்கு பாறைகளுக்கு நடுவே ஒரு த்ரில் பயணம் அது. ஒரு கணம் கிங்காங் அந்த மலைகளுக்கு நடுவிலிருந்து எழுந்து வருவதுபோலத் தோன்றுகிறது.. படகு பாறைகளில் முட்டி நிற்கிறதோ? ஆஹா…கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பமே...சல்யூட்…

குகைக்குள் படகு
குகைக்குள் படகு

படகு சென்று ஒரு குட்டித்  தீவில் நிற்கிறது. அதன் பெயர் டி டாப். அங்கே இறங்கி நடக்கிறோம்.. காபி கடை களிலிருந்து நல்ல மணம் பரவுகிறது. குகைகளுக்குள் ஏறிச் செல்வோரும், நீச்சலடிப்போருமாக, சுற்றுலா வாசிகளால் மாலைப்பொழுது அந்தக் குட்டித் தீவை கலகலப்பாக்குகிறது. இருள் சூழும் நேரம் கப்பலுக்குத் திரும்புகிறோம்.

அன்றிரவு கப்பலில் இந்திய உணவுகளோடு, வியட்நாம் ஸ்பெஷலும் கலந்த ஏகப்பட்ட ஐட்டங்களுடன் டின்னர். மேல் டெக்கில் நின்று பார்க்கும்போது… பகலில் அந்தப் பாறைகளும் தீவும் ஒரு அழகு என்றால் இரவில் கொள்ளை அழகு. தொலைவில் நின்றிருக்கும் மற்றோர் கப்பலிலிருந்து உற்சாகமான பாட்டு, இசைக்கருவிகளின் முழக்கம்… இவற்றைக் காற்று சுமந்து வருகிறது. தோரணமாய் விளக்கொளி நீரில் பிரதிபலித்து அசைகிறது.

காலையில் மீண்டும் உலா, பின்னர் ஹனோய்க்குத் திரும்புகிறோம்.

னோயில் நகர் வலம்களை முடித்த பிறகு, அங்கிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் நமது டிரான்சிட் ஆன பாங்காக் வந்திறங்கினோம்.  அங்கே பல காரணங்களால் ஏழு மணி நேரக் காத்திருப்பு. செக்யூரிடி எல்லாம் முடித்து டிபார்ச்சர் லவுஞ்சில் காத்திருந்து… காத்திருந்து… எல்லோருக்குமே செம பசி. லவுன்ச்சில் ஒன்றும் கிடையாதே?

இதையும் படியுங்கள்:
பதநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
ராட்சச மலைகள்...

தாய் ஏர்வேஸ், சாப்பிட ஏதாவது  தருவார்களா என்று பார்த்தால், ஆளுக்கொரு சிறிய பன், ஒரு சின்ன வாட்டர் பாட்டில் தரப்பட்டது. ஒரு வழியாக விழுங்கினோம். காத்திருப்பு முடிந்து ஃப்ளைட்டில் ஏறி உட்கார்ந்த பின்னும் கிளம்பவேயில்லை,  ஏதோ கோளாறு, விமானம் வேறு மாற்ற வேண்டிய நிலைமை.. இன்னோரு கேட் செல்ல வேண்டும் என்றார்கள். மழை வேறு… அத்தனை பயணிகளும், கைப் பெட்டிகளுடன் வழுக்கும் அலுமினியப் படிகளில் இறங்கி, (ஏறும்போது ஏரோ ப்ரிட்ஜ் இருந்தது) மற்றோர் கேட் செல்ல ஏர்போர்ட்டின் பஸ்ஸில் ஏறினோம். அந்த கேட் பாங்காக்கின் எல்லையில் இருக்கும்போல இருக்கிறது. போய்க்கொண்டே இருந்தது பஸ்.

அப்பாடா.. ஒரு வழியாக  விமானம் அருகே வந்து  நின்றது பஸ். அங்கும் படிகள்தான். ஏறி உட்கார்ந்து விமானம் கிளம்பிய பிறகுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வியட்நாமில் தங்கியிருந்த நாட்களை நினைத்தபடி சென்னை நோக்கி பயணித்தோம்.
வியட்நாம் பயணம் நிறைவுற்றது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com