

உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரத்தின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. ஜூலியஸ் பேர் அறிக்கையின் படி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிங்கப்பூர் இந்த இடத்தை தக்க வைத்துள்ளது. வலுவான பொருளாதார அடிப்படைகள், உயர்தர வாழ்க்கை தரம் ஆகியவை உலகம் முழுவதும் உள்ள பயணிகளை ஈர்க்கின்றன.
ஊழலுக்கு எதிரான கடுமையான சட்ட திட்டங்களை கொண்ட நாடு சிங்கப்பூர். லஞ்சம் பெறுபவர்களுக்கான கடுமையான தண்டனைகள் இருப்பதால் சிங்கப்பூர் ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூரில் அரசாங்கம், செல்வாக்கின் அடிப்படையில் அல்லாமல், திறமையின் அடிப்படையிலேயே ஊழியர்களைப் பணியமர்த்துகிறது. இங்கு ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுவதும், லஞ்சம் வாங்குவது அல்லது தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்கிறது.
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான். சிங்கப்பூர் பாஸ்போர்ட்டைக் கொண்டு உலகின் 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம் அல்லது சென்றடைந்ததும் விசா பெறலாம். ஏறத்தாழ 190 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விசா இன்றி செல்லக்கூடிய வசதியைப் பெற்றுள்ள சிங்கப்பூரின் பாஸ்போர்ட் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது என்ற தரநிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
‘ஹென்லி’ பாஸ்போர்ட் குறியீடு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வெளியிட்ட இவ்வாண்டுக்கான தரப்பட்டியலில் 192 இடங்களுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றடைந்தவுடன் விசா பெறக்கூடியதாகச் சிங்கப்பூர் பாஸ்போர்ட் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க சில முக்கிய காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளில் ஒன்றாகும். சிங்கப்பூர் குடிமக்கள் பிற நாடுகளுக்குச் செல்லும்போது, அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேற வாய்ப்பில்லை என்று பிற நாடுகள் கருதுகின்றன. இதுவே பிரதானக் காரணமாகும்.
அதேபோல சர்வதேச அரசியல் மோதல்களில் சிக்காமல், அனைத்து நாடுகளுடனும் சிங்கப்பூர் நடுநிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. மேலும், சிங்கப்பூர் அரசு உலகின் பிற நாடுகளுடன் மிகவும் வலுவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது. பல நாடுகளுடன் பரஸ்பர விசா விலக்கு ஒப்பந்தங்களையும் சிங்கப்பூர் செய்துள்ளது. இதன் காரணமாகவே சிங்கப்பூர் வலிமையான பாஸ்போர்ட்டாக உள்ளது.
உலகின் உயரமான செங்குத்துப் பண்ணையை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது சிங்கப்பூர்.உலகின் பெரிய உட்புறச் செங்குத்துப் பண்ணையை சிங்கப்பூர் அரசு 2026 (ஜனவரி 7 ல் திறந்துள்ளது.ஜூரோங் வெஸ்ட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள கிரீன்ஃபைட்டோ (Greenphyto) பண்ணை $80 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து மாடி பண்ணையில் 23 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அடுக்குகளில் கீரைகள் வளர்க்கப்படுகின்றன.
இரண்டு ஹெக்டர் பரப்பளவில் மண்ணின்றி நீரில் (hydroponic) கீரைகளை வளர்க்கும் பண்ணை முழுக்க முழுக்க தானியக்க முறையில் செயல்படுகிறது. கிரீன்ஃபைட்டோ பண்ணையில் ஹைட்ரோபோனிக் முறையில் பல கீரை வகைகள் உற்பத்தி செய்யப் படுகின்றன.செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் அதிநவீன உற்பத்தி இயந்திரங்களும் பண்ணையின் செயல்பாடுகளைப் பார்த்துக்கொள்கின்றன.
கிரீன்ஃபைட்டோ பண்ணையில் வளர்க்கப்படும் ‘காய்லான்’, ‘லெட்யுஸ்’ போன்ற கீரை வகைகள், ஃபேர்பிரைஸ், ஷெங் ஷியோங் என 95 உள்ளூர் பேரங்காடிகளில் கடந்த ஆண்டிலிருந்து ஹைட்ரோகிரீன்ஸ் (Hydrogreens) என்ற பெயரில் விற்கப்படுகின்றன.கிரீன்ஃபைட்டோ பண்ணையில் ஜப்பானிய ‘சை சிம்’, ‘பேபி ஸ்பினெச்’, ‘அருகுலா’ ஆகியவையும் உற்பத்திசெய்யப்படுகின்றன. முழுமையாகச் செயல்படும் பண்ணையில் ஓர் ஆண்டுக்கு 2,000 டன் கீரை வரை உற்பத்தி செய்யமுடியும். தற்போது 200 டன் கீரையைப் பண்ணை உற்பத்தி செய்கிறது.