தெற்கு ஆசியாவின் மிக உயரமான மாத்தூர் தொட்டிப் பாலம்!

மாத்தூர் தொட்டிப் பாலம்...
மாத்தூர் தொட்டிப் பாலம்...

ன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. நாகர்கோவிலுக்கு அருகில் திற்பரப்பு அருவி, உதயகிரிக் கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம் என புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. இந்த பதிவில் நாம் தெற்கு ஆசியாவின் மிக உயரமான பாலமாகக் கருதப்படும் மாத்தூர் தொட்டிப் பாலத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுவோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருவிக்கரை ஊராட்சியில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான பாலமாக இந்த தொட்டிப் பாலம் கருதப்படுகிறது. இரு மலைகளுக்கு இடையில் தொட்டில் போன்ற அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளதால் இதை தொட்டில் பாலம் என்றும் அழைக்கிறார்கள். மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும் கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இந்த தொட்டிப் பாலம் இணைக்கிறது.

திரு.காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பாலம் 1969 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பாலத்தின் நீளம் 1204 அடிகள். உயரம் 104 அடிகள் மற்றும் இந்த பாலத்தை 28 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 32 அடி சுற்றளவு கொண்டது.

தொட்டிப் பாலம் ...
தொட்டிப் பாலம் ...

பாலத்தின் மேற்பகுதியில் ஒரு பகுதியில் தண்ணீரை எடுத்துச் செல்லும் தொட்டியும் மறுபகுதியில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொட்டியும் ஏழு அடி ஆழமும் ஏழு அடி ஆறு அங்குல அகலமும் உடையது. பாலத்தைப் பார்வையிட்டு பாலத்திலிருந்து இறங்க வசதியாக படிகள் அமைக்கப் பட்டுள்ளன. நீரானது பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கோதையாறு கால்வாய் வழியாக கொண்டு வரப்படுகிறது. அணையிலிருந்து வரும் நீரானது முதலில் மாத்தூர் பாலத்திற்கும் பின்னர் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டனம் கிராமத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது. முக்கியமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பாலத்தின் கீழ் பரளியாறு எனும் சிற்றாறு ஓடுகிறது.

இதையும் படியுங்கள்:
சூரிய ஒளி கடிகாரம் அமைந்த அபூர்வ திருக்கோயில் தெரியுமா?
மாத்தூர் தொட்டிப் பாலம்...

மாத்தூர் தொட்டிப் பாலத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மிகவும் புகழ் பெற்ற திற்பரப்பு அருவி அமைந்துள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவிலும் திருவட்டாரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து இருபத்திஎட்டு கிலோ மீட்டர் தொலைவிலும் மாத்தூர் அமைந்துள்ளது. நாகர்கோவிலுக்குச் சென்றால் தவறாமல் திற்பரப்பு அருவியையும், மாத்தூர் தொட்டிப் பாலத்திற்குச் சென்று பார்த்து மகிழ்ச்சியோடு திரும்புங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com