ஸ்ரீ கிருஷ்ணர் ராஜ்ஜியமான பேட் துவாரகை!

ஸ்ரீ கிருஷ்ணர் ராஜ்ஜியமான
பேட் துவாரகை!
Published on

துவாரகையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது பேட் துவாரகை. ஓஹா துறைமுகத்தின் அருகே அனைவரின் வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இது ராணுவ நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. இங்கிருக்கும் படகுத் துறை, ‘ஜெட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே நிறைய மோட்டார் படகுகள் நிற்கின்றன. இங்கிருந்து பேட் துவாரகை செல்ல தலைக்கு 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். நம் ஊர் பேருந்துகளைப் போல் அந்தப் படகுகளில் ஆட்களைத் திணிக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதி உட்கார்ந்தும், நின்றும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. சுமார் அரை மணி நேரப் படகுப் பயணம். பிறகு அக்கரையில் இருக்கும் படகுத் துறையில் இறங்கி சுமார் 1 கி.மீ. தொலைவு நடந்தால் பேட் துவாரகா ஆலயத்தை அடையலாம்.

முன்னதாக, இந்தப் படகுப் பயணத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றைச் சொல்ல வேண்டும். படகு புறப்படுவதற்கு முன்பே கரையில் பொரி போன்ற தின்பண்டங்களை விற்கிறார்கள். நாம் தின்பதற்கு அல்ல. அவற்றை பக்தர்கள் கடலில் வீசுகிறார்கள். ஏராளமான பறவைகள் அவற்றைக் கடலில் விழும் முன்னரே ஆகாயத்தில் பறந்தவாறே கொத்தி லபக்கென்று விழுங்குகின்றன. Sea gulls வகையைச் சேர்ந்தவை அந்தப் பறவைகள். அவை படகுகளைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. நமது தலைக்கு மிக அருகாமையில் பறந்து வந்து அவை உணவு கேட்பது போல ஒலி எழுப்புகின்றன. பக்தர்கள் கடலில் வீசும் உணவை அவை பாய்ந்து சென்று சாப்பிடுகின்றன. அவை தனது குட்டிக் கால்களை அசைத்து கடலில் நீந்துவதை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

பேட் துவாரகா என்பது ஒரு தீவு. இது அமைந்திருக்கும் பகுதி கட்ச் வளைகுடாவில் உள்ளது. இதற்கு, ‘பேட் ஷங்கோதரா’ என்றும் வேறு பெயர் இருக்கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண் பானைத் தடயங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மௌரியர் காலத்து எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தடயங்களும் இங்கு அகப்பட்டு இருக்கின்றன.

‘பேட்’ என்றால் பரிசு என்றும் பொருள் சொல்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் தனது இளமைக்கால நண்பர் குசேலரிடம் இருந்து பரிசு (அவல்) பெற்ற இடம் இது என்பதால், ‘பேட் துவாரகை’ எனப் பெயர் ஆயிற்று. கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் சிறு கடைகளில் சிப்பிகளும் ஸ்ரீகிருஷ்ணர் உருவங்களும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையை விட்டு நீங்கி, வைகுண்டம் சென்ற பிறகு இது நீரில் மூழ்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன. பேட் துவாரகாவை, ‘ஸ்ரீகிருஷ்ணரின் ராஜ்ஜியம்’ என்று அழைக்கிறார்கள். மீரா, சூர்தாஸ் ஆகியோர் துவாரகீசரைப் போற்றிப் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். ஆழ்வார்களாலும் பாடப்பட்ட தலம் இது.

‘ஸ்ரீ கேசவராய்ஜி’ என்று இங்கு அருளும் ஸ்ரீகிருஷ்ணர் அழைக்கப்படுகிறார். ‘சமஸ்த் புஷ்கரண’ பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் இவரே. இங்கேயும் துவாரகாநாதருக்குச் சிலை உள்ளது. அது, ருக்மிணியால் செய்யப்பட்டது என்றும், மீரா இந்தச் சிலையில் ஐக்கியமாகி உலகை நீத்ததாகவும் சொல்கிறார்கள்.

கோயிலில் காலை, மாலை வேளைகளில் ஆரத்தி சேவை நடைபெறுகிறது. ருக்மிணி ஆலயமும் இங்கு இருக்கிறது. தவிர, விநாயகர், புருஷோத்தமர், தேவகி, மாதவராய், அம்பிகா, பலராமர், கல்யாணராமர், சத்தியபாமா, கருடர், லட்சுமி, ராதிகா மாதாஜி ஆகியோருக்கும் தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்கே இருபது விஷ்ணு ஆலயங்களும், 23 சிவாலயங்களும்,14 தேவி ஆலயங்களும், ஒன்பது ஆஞ்சனேயர் ஆலயங்களும் இருக்கின்றன. இது தவிர, சில ஜைன ஆலயங்களும் உள்ளன. 24 ஜைன தீர்த்தங்கரர்களையும், சைதன்ய மஹாபிரபுவையும் தரிசிக்கலாம்.

இங்குள்ள கடற்கரை மிகவும் ரம்மியமாக இருக்கிறது. வண்ண வண்ணச் சிப்பிகள் நிரம்பிய மணலையும், அலையடிக்கும் கடலையும் வியந்தவாறு நெஞ்சம் நிறையப் பாலகன் கண்ணனை நினைத்தபடி நீண்ட நேரம் கடற்கரையில் அமர்ந்து பக்தர்கள் தங்கள் ஆன்மிக அனுபவத்தைத் துய்க்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com