

பின்லாந்தில் பெண்களுக்கான தீவு சூப்பர்ஷி தீவு (SuperShe Island). இது பெண்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தீவாகும். இதில் பெண்கள் பாது காப்பாகவும் சுதந்திரமாகவும் தங்கள் சுற்றுலா அனுபவத்தை பெறமுடியும். தெற்குப் பின்லாந்தில் உள்ள ராஸ்போரி கடற்கரையில் அமைந்துள்ள இத்தீவு 8.4 ஏக்கர் பரப்பளவில் மிகவும் அழகுடன் காணப்படுகிறது.
ஆண்களுக்கு அனுமதி இல்லாத இந்த தீவில் பெண்கள் சுதந்திரமாக ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சி பெறவும் உருவாக்கப்பட்டது. இந்தத் தீவு தொழிலதிபர் கிறிஸ்டினா ரோத்தின் சிந்தனையில் உருவானது. 2018 ஆம் ஆண்டில் சூப்பர்ஷி தீவு ரிசார்ட்டை திறந்து வைத்தார். உலகெங்கிலும் உள்ள பெண்களை ஒரே இடத்தில் கொண்டு வருவதே இதன் யோசனை என்று அவர் கூறியுள்ளார். இந்தத் தீவு அமைதி மற்றும் இயற்கையை ரசிக்க சிறந்த இடமாகும். இங்கு அழகான கேபின்கள் பல உள்ளன. இந்த கேபின்களில் ஸ்பா, சானா மற்றும் பிற வசதிகள் கூட உள்ளது.
கிறிஸ்டினா உண்மையில் ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட்டை சேர்ந்தவர். ஆனால் தனது வாழ்க்கையை நியூயார்க்கில் தொடங்கியவர், உலகம் முழுவதும் தனது தனிப் பயணங்களுக்கு அதை தளமாக மாற்றினார். இவருக்கு துருக்கி மற்றும் கைக்கோசிலும் தீவுகள் உள்ளன.
இங்கு பெண்கள் கடற்கரையின் அழகை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி பெற யோகா, தியானம், மசாஜ், பேசியல் என பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல விஷயங்கள் உள்ளன. ஆடம்பரமான வில்லாக்கள் முதல் பாரம்பரியமான குடிசைகள் வரை தீவில் பல விதங்களில் தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையுடன் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்த தனியார் தீவு பின்லாந்து கடற்கரையிலிருந்து பேட்லிக் கடலில் உள்ள ஹெல்சின்கி விமான நிலையத்திலிருந்து சுமார் 1.5 மணி நேரத் தொலைவில் உள்ளது. பயணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு இந்த சூப்பர்ஷித் தீவு மிகவும் பிடித்தமான இடமாக இருக்கும். வாழ்க்கையின் பரபரப்பான வேகத்திலிருந்து விலகி, தனிப்பட்ட தருணங்களை விரும்பும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது இந்தத் தீவு. சமையல் முதல் டைவிங் பயிற்சி வரை அனைத்து நடவடிக்கைகளும் பெண்களால் மட்டுமே கையாளப்படுகின்றன. சமையல் வகுப்புகள், உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பல நல்வாழ்வு அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.
சூப்பர்ஷி தீவு என்பது உலக அளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். ஆனால் இந்த இடம் மலிவானதல்ல. அத்துடன் அங்கு செல்வதும் அவ்வளவு எளிதல்ல. அதற்கு முதலில் ஒரு விண்ணப்பத்தை அனுப்பவேண்டும்.
தீவுக்குள் நுழைய, நீங்கள் ஏன் தீவுக்கு செல்லவேண்டும், உங்களுக்கு அது எவ்வாறு பயனளிக்கும், அங்கு தங்கவேண்டிய அவசியத்தை எவ்வாறு உணர்ந்தீர்கள் போன்ற விண்ணப்ப படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு திருப்திகரமாக பதில் அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கும்.
வித்தியாசமான பயண அனுபவத்தைத்தேடும் பெண்களுக்கு இத்தீவு ஒரு சூப்பரான இடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.