
பலமுறை சுவிசின் சூரிக் சென்றாலும், ஒவ்வொரு முறை அனுபவமும் வேறு வேறாகவே இருக்கும்! அரபு நாடுகள் வழியாகவே பெரும்பாலும் சென்று வந்ததால், இம்முறை தலைநகர் டெல்லி சென்று, பின்னர் இத்தாலியின் ‘மிலான்’ சென்று அங்கிருந்து காரில் சூரிக் செல்ல ஏற்பாடாயிற்று! அதற்கு இரண்டு காரணங்கள்.
முதலாவது புது வழியில் செல்வது; இரண்டாவது நமது ‘ஏர் இந்தியா’ விமானங்களில் பயணிப்பது!
காலை எட்டு மணிக்கு ‘ப்ளைட்’ என்பதால் வீட்டை விட்டு நான்கரை மணிக்கே கிளம்பினோம். நமது நாட்டில் பிரம்ம முகூர்ததம் (4.30-6.00) விசேஷமானது அல்லவா?
இந்தக் கோடையில் அந்த நேரத்தில்கூட வியர்க்கவே செய்தது!சாலையெங்கும் ஆடோமாடிக் சிக்னல்கள் வேலை செய்தாலும், நமது ஓட்டுனர்கள் யாருமே அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காதது வருத்தம் அளிப்பதாகவே உள்ளது! இவ்வளவுக்கும் அந்த அதிகாலை, சுறுசுறுப்பான நேரம்! மிட் நைட் 12ஓ 2 ஓ அல்ல!தனி மனித ஒழுக்கம் இல்லாத எந்த நாடும் முன்னேறுவது கடினமே! நமக்குப் பயமுறுத்தும் போலீஸ் தேவைப்படுகிறதோ?