
கடந்த 'எபிசோடில்', இரவு நேரப் பயணத்தைப் பற்றிப் பேசினோம்! இரவோ, பகலோ எந்நேரமும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது இங்குள்ளவர்களின் வழக்கமாகி விட்டது. அவற்றை ஒழுங்காகப் பின்பற்றாததாலேயே நம்மூரில் ஆண்டுக்கு லட்சக் கணக்கில் விபத்துக்களில் மனிதர்கள் இறக்கும் நிலை உள்ளது! என்ன? எதையும் எளிதாகக் கடந்து போகும் மனநிலை நம்மிடம் உண்டு. இங்குள்ளவர்கள் எதற்கும் தீர்வு தேடி, அதனை நடைமுறைப்படுத்தி, அல்லல்களைக் குறைத்து, அமைதியாக வாழ்கிறார்கள்.
இந்தத் தொடரில் பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலையையோ, அழகிய ரைன் நதியையோ பற்றிப் பேசுவதை விடுத்து, புற நகர்ப்பகுதி எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றியும், பாரம்பரிய வீடுகள் பற்றியும் சற்று பார்ப்போம்! சுவிஸ் நாட்டின் முழு இயற்கை அழகையும் ரசிக்கவேண்டுமென்றால் புற நகர்ப் பகுதிகளில் மட்டுமே வசித்தால்தான் அது சாத்தியமாகும். அதிலும் பாரம்பரிய வீடுகளை அவர்கள் பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.