
சுவிட்சர்லாந்து நமது ஊட்டியைப்போன்று, காஷ்மீரைப் போன்று குளிர்ச்சியான பிரதேசம் என்பதை அறிவோம். ஆனால் ஊட்டி வீதிகளில் கரடி, காட்டெருமை, யானை போன்ற விலங்குகளும் சில சமயம் நகர் சுற்றக் கிளம்பி விடுவதுதான் நமக்குத் தலைவலியே! காஷ்மீரிலோ அடிக்கடி துப்பாக்கிச் சூடு! இது போன்ற பிரச்னைகள் ஏதுமில்லாத இடந்தான் சுவிஸ். சட்டங்களை மதித்து அமைதி காக்கும் அற்புத மனிதர்களைக் கொண்ட நாடு இது!
நீண்ட புல்வெளிகளுக்கு இங்கு குறைவே கிடையாது. பல ஏக்கர் கணக்கில் அவை நீண்டு கிடக்கின்றன. நாங்கள் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழியில் ஒரு மாட்டுப் பண்ணை... மாட்டுப் பண்ணை என்பதை விடப் ‘பசுப் பண்ணை’ என்றழைப்பதே மிகவும் பொருத்தமாகும்.
அதிக எண்ணிக்கையிலான பசுக்கள் மட்டுமே அங்கு உண்டு. பெரிய இடத்தில் அவற்றைப் பராமரிக்கிறார்கள். நம்மூர் பசுக்கள், அரிக்கும் கழுத்துப் பகுதியை சுவற்றிலோ, மரங்களிலோ தேய்த்து அரிப்பைப் போக்கிக் கொள்ளும். இங்குள்ள பண்ணையில் அதற்கென பிரத்யேகக் கருவியைப் பொருத்தியுள்ளார்கள். பசுக்களும் வந்து அந்தக் கருவியைப் பயன்படுத்திச் சொரிந்து கொள்கின்றன.