
வியட்நாம் என்றாலே நம் நினைவுக்கு வருவது, நீண்ட காலம் நடந்த போர்கள்.
கம்போடியா நாட்டின் உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர் வாட்’, ‘அங்கோர் தாம்’ போன்ற இடங்களைப் பார்த்த பின்னர், கம்போடியாவைப் பிரிய மனமின்றி வியட்நாம் கிளம்பினோம்.
சியாம்ரீப் நகரிலிருந்து வியட்ஜெட் விமானத்தில் சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் வியட்நாமின் ஹோசிமின் (Ho Chi Minh) நகரில் இறங்கினோம். விமான நிலையத்தில் நெரியும் கூட்டம். விசா ஆன் அரைவல் வாங்க அலைமோதிய கூட்டத்தில்., நீண்ட வரிசையில் நின்று, 30 நாட்கள் விசா பெற்றதும், செக்யூரிடி செக். பெல்ட், ஷூ எல்லாம் கழற்றி, மெடல் டிடெக்டர் சோதனை முடித்து, பெட்டிகளை கலெக்ட் செய்து, வெளியே வந்தால், மேக வெடிப்புபோல பெரும் மழை.
எங்களை வரவேற்ற வியட்நாம் கைடு வ்ராங் (Vrong), மழை நின்றதும் எங்களை நகரின் மையத்தில் இருந்த பே (Bay Hotel) ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். நகரின் மையத்தில், மிக பிசியான தெருவில் இருந்தது அந்த ஹோட்டல்.
வடக்கு தெற்கு என்று பிரிந்திருந்தபோது தெற்கு வியட்நாமின் தலைநகரமாக விளங்கிய சைகான் (Saigon) என்றழைக்கப்பட்ட இன்றைய ஹோசிமின், தெற்கு வியட்நாமின் பெரிய வணிக நகரம்,
போர் என்று சரித்திரத்தில் இடம் பெற்ற அந்த நீண்ட காலப்போர் பற்றி ஒரு சிறு விளக்கம்…
முதலில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தது வியட்நாம்.
பின்னர், ஆசிய ஆப்ரிக்க நாடுகளைக் கைப்பற்ற பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையில் நடந்த போட்டியில் 18ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் வந்தது.
1954ல் வடக்கு வியட்நாம், பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்று, வியட்நாம் ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of Vietnam) என்றபெயரில் தனி நாடானது. பின்னர் தெற்கு, வடக்கு என வியட்நாம் பிரிந்தது.
வடக்கு வியட்நாமை ஆதரித்த அன்றைய சோவியத் ரஷ்யா சீனா போன்ற கம்யூனிச நாடுகள், ஆயுதங்களையும், போர் உத்திகளையும் கொடுத்து உதவின.
தெற்கு வியட்நாம், அமெரிக்காவுடன் சேர்ந்து வடக்கு வியட்நாமை எதிர்த்தது.
இது கம்யூனிசத்தை ஒடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாகவும் கருதப்பட்டது.
ஆனால், தெற்கு வியட்நாமில், வியட்காங் என்ற ஒரு படை, அங்கேயே கம்யூனிச எதிர்ப்பாளர்களைக் கொல்ல கொரில்லாப் போர்முறையைக் கையாண்டது. இதன் மூலம் நவீன போர் உத்திகளைக் கையாண்ட அமெரிக்காவை பின் வாங்க வைத்தனர். போர் 20 ஆண்டுகள் நீடித்தது. 1973இல் பாரீஸ் அமைதி ஒப்பந்தம் முடிவாயிற்று. அதே ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்கப்படைகள் முழுமையாகப் பின்வாங்கின.
அத்துடன் போர் முடிவுக்கு வந்ததும் அடுத்த ஆண்டில் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் ஒன்றிணைந்தது. இந்தப் போரில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும்,
11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டு போயினர். போர்க்காட்சிகளின் புகைப்படங்கள் உலகப் புகழ் பெற்றன.
வியட்நாம் போரின் நாயகனாக போற்றப் படுபவர் மறைந்த தலைவர் ஹோசிமின்.
(Ho Chi Minh) ஃபிரான்ஸிடமிருந்து வியட்னாமுக்கு விடுதலை வாங்கித் தந்ததோடு, அமெரிக்கப் படைகள் திரும்பிச் செல்லவும் காரணமாக இருந்தவர் என்பதால் மக்களிடையே பெரும் ஹீரோவாக போற்றப்படுகிறார்.
சைகான் என்ற நகரின் பெயரை ஹோசிமின் என்றும் மாற்றியுள்ளனர்.