

சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜி தேசிய வனப்பூங்கா (Zhangjiajie National Forest Park) வுலிங்யுவான் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியின் ஒரு பகுதியாகும். 1982ல் நிறுவப்பட்ட நாட்டின் முதல் தேசிய பூங்காவாகும். இது குவார்ட்ஸ்-மணற்கல் தூண்கள், அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மேகமூட்டமான பள்ளத்தாக்குகளுக்கு பெயர் பெற்றது. 3,000க்கும் அதிகமான மணற்கல்லால் ஆன உயரமான தூண் போன்ற மலைகள் உள்ளன. 1992 ஆம் ஆண்டில் வுலிங்யுவான் அதிகாரப்பூர்வமாக யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.
மிதக்கும் மலைகள் எனும் மாயத் தோற்றம்:
அவதார் திரைப்படத்தின் மிதக்கும் மலைகளுக்கு உத்வேகம் அளித்த இடமாக இது உலகளவில் புகழ்பெற்றது. இங்கு குவார்ட்ஸ் மணற்கல் தூண்களில் ஒன்றான 1,080 மீட்டர்(3,540 அடி) உள்ள 'தெற்கு வானத் தூண்' என்று முன்பு அழைக்கப்பட்டது ஜனவரி 2010ல் அவதார் திரைப்படத்தின் நினைவாக அதிகாரப்பூர்வமாக "அவதார் ஹல்லேலூஜா மலை" என்று மறுபெயரிடப்பட்டது.
இதுவும் மூடுபனி சூழ்ந்த பிரம்மாண்டமான தூண் அமைப்புகள் கொண்ட யுவாங்குவான்ஜாயும் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும். அத்துடன் வியக்க வைக்கும் இயற்கை காட்சி முனைகளைக் கொண்ட தியான்ஸி மலை போன்றவை பெரும்பாலும் மேகங்களால் மூடப்பட்டிருப்பதால், மிதக்கும் மலைகள் போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.
உலகின் உயரமான வெளிப்புற லிஃப்ட்:
"நூறு டிராகன்கள் ஸ்கை லிஃப்ட்" என்று பொருள்படும் பெய்லோங் லிஃப்ட் (Bailong Elevator) உலகின் மிக உயரமான வெளிப்புற லிஃப்ட் 2002 ஆம் ஆண்டு பொது மக்களுக்காக திறக்கப்பட்டது. 326 மீ(1,070 அடி) உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான வெளிப்புற லிஃப்ட் ஆகும். இது பார்வையாளர்களை 2 நிமிடங்களுக்குள் உச்சிக்கு கொண்டு செல்லும். இது மூன்று தனித்தனி கண்ணாடி லிஃப்டுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 50 பேர் வரை பயணிக்க முடியும். இது பார்வையாளர்களை விரைவாக மலை உச்சிக்கு கொண்டு செல்கிறது.
ஜாங்ஜியாஜி கிராண்ட் கேன்யன் கண்ணாடி பாலம்:
ஆகஸ்ட், 2016ல் உலகின் மிக நீளமான (430 மீ) மற்றும் மிக உயரமான (300 மீ) பாதசாரி கண்ணாடி பாலமான ஜாங்ஜியாஜி கிராண்ட் கேன்யன் கண்ணாடி பாலத்தை திறந்தது. பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பாலம் மூடப்பட்டு ஏராளமான சுற்றுலா பயணிகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. கண்ணாடியாலான நடைபாலங்கள் இங்கு முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
பூங்காவிற்குள் மூன்று கோண்டோலா லிஃப்ட் அமைப்புகள் உள்ளன. தியான்சி மலை கேபிள் கார், யாங்ஜியாஜி கேபிள் கார் மற்றும் ஹுவாங்ஷிஷாய் கேபிள் கார். அத்துடன் 10 மைல் காட்சியகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச்செல்வதற்கு ஒரு மோனோரயில் வசதியும் உள்ளது. தேசிய பூங்காவின் மற்றொரு சிறப்பம்சம் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கும் கார்ஸ்ட் குகைகளாகும்.