
'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நானும் என் குடும்பத்தாரும் காரில் சுற்றுலா சென்றோம். கானகத்தின் கொடை அல்லது காடுகளின் பரிசு என்பது கொடைக்கானல் என்பதின் தமிழ் அர்த்தம் ஆகும்!
கொடைக்கானலுக்கு 7 கி.மீ. முன்பே வெள்ளி நீர்வீழ்ச்சி நம்மை முதலில் அன்புடன் வரவேற்கிறது. அப்போது நீர் ஆர்ப்பரித்து கொட்டவில்லையென்றாலும் வருகின்ற நீரைப் பார்க்கும் போதே அழகோ அழகு. கொடைக்கானலில் கொரோனா டயம் என்பதால் பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை செண்பகனூர் அருங்காட்சியகம் போன்ற சில இடங்களை பார்க்க அனுமதியில்லை. இருந்தபோதும் மனம் தளராமல் அனுமதியுள்ள சில இடங்களை மட்டும் பார்க்கப் புறப்பட்டோம்.
குறிஞ்சி ஆண்டவர் கோவில்
முதலாவதாக 4 கி.மீ. தூரத்தில்லுள்ள குறிஞ்சி ஆண்டவர் கோவிலை தரிசிக்கச் சென்றோம். புதுமை மாறாத மிக அழகான, படு சுத்தமான கோவில்! 1936 ஆம் ஆண்டில் லீலாவதி என்ற ஐரோப்பிய அம்மையாரால் கட்டப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் குறிஞ்சி மலர்கள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகிறது. சாமியை வெளியே நின்றுதான் கும்பிட முடிந்தது. குறிஞ்சி ஆண்டவரை வேண்டினால் நினைத்தக் காரியம் நடக்கும் என்கிறார்கள். அங்கிருந்தபடியே கிழக்கு திசையில் பார்த்தால் பழனி முருகன் கோவில் தெரிகிறது, பார்க்க அற்புதமாக இருக்கிறது.
பூம்பாறை
இரண்டாம் நாள் காலை கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள பூம்பாறை என்ற சுற்றுலாத் தலத்திற்குச் சென்றோம். போகும் வழியில் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை மாறா மலைக்காடுகள். இயற்கை தன் அழகையெல்லாம் வாரி வழங்கியிருக்கிறது. பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சி. பூம்பாறையிலுள்ள குழந்தை வேலப்பர் கோவிலைப் பார்க்க வெளியூரிலிருந்து நிறைய பேர் வந்திருந்தனர். பல குடும்பங்களுக்கு அது குல தெய்வமாம்.
அங்கே விற்கப்படும் மலைப்பூண்டு மிகவும் பேமஸ்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நாங்கள் 2 கிலோ பூண்டு வாங்கினோம். கிலோ ரூபாய் 200-லிருந்து 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது, பேரம் பேச முடியாது.
பள்ளங்கி
நாங்கள் கண்டு ரசித்த அடுத்த இடம் பள்ளங்கி. கொடைக்கானலிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரம்தான். போகும் வழியெல்லாம் நெடு நெடுவென உயர்ந்த மரங்கள் இருந்தன. 'மூன்றாம் பிறை' படத்தில் கமலஹாசன் பேசும் வசனம்போல் வானத்தை துடைக்கும் ஒட்டடை குச்சிகளாக மரங்கள் காட்சியளிக்கின்றன. அங்கேயிருந்து கீழேப் பார்த்தால் தலை சுற்ற வைக்கும் படுபயங்கரமான பள்ளத்தாக்குகளும் உள்ளன. சினிமா ஷூட்டிங் எடுப்பதற்கு சரியான லொகேஷன்!
காலை வேளை என்பதால் சில்லென குளிர்ந்த காற்று நம்மேனியைத் தழுவிச் சென்றது. அந்த பரவச உணர்வை நேரில் உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். பள்ளங்கி போன்ற அருமையான, அழகான சுற்றுலாத் தலத்தை சாதாரண நாட்களில், கொரோனா கட்டுப்பாடு இல்லாத நேரத்தில் காணச் செல்பவர்கள் எண்ணிக்கை குறைவுதான்! எங்களுக்கு கொடைக்கானலில் சில இடங்களை மட்டுமே பார்க்க முடியாத காரணத்தால், இங்கே செல்லும் நிலை ஏற்பட்டது. அதுவே அரியதொரு நல்வாய்ப்பாகவும் அமைந்தது. அதோடு எங்களை மிகவும் கவர்ந்த இடமாகவும் பள்ளங்கி அமைந்துவிட்டது.
-எஸ்.கெஜலட்சுமி
பின்குறிப்பு:-
இப்பயணக்கட்டுரை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியி ருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்