தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் அழகிய சுற்றுலா தளங்கள் நிறைய இருந்தாலும் கொல்லிமலைக்கு என்று எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.
கொல்லிமலை நாமக்கல்லுக்கும் திருச்சிக்கும் நடுவே பரந்து விரிந்திருக்கும் மலைத்தொடராகும். இம் மலைத்தொடர் 1300 மீட்டர் உயரத்தையும் 280 சதுர கி.மீட்டரையும் உடையது. நாமக்கல்லில் இருந்து 43கி.மீட்டர் தொலைவிலும் திருச்சியிலிருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கொல்லிமலை யாருக்கு உகந்த இடம்?
கொல்லிமலை சுமார் 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அதனால் இது அதிகமாக வாகனம் ஓட்ட விரும்பும் சாகச பயணிகளுக்கு உகந்த இடமாக இருந்து வருகிறது என்பதில் ஐயமில்லை.
கொல்லிமலை பெயர்க்காரணம்:
கொல்லிமலையை எட்டுக்கை அம்மன் என்னும் கொல்லிப்பாவை பாதுகாக்கிறது என்று அங்கிருக்கும் மக்களால் நம்பப்படுகிறது. அதுவே இப்பெயர் வர காரணமாயிற்று.
கொல்லிமலையில் சுற்றிப் பார்க்கக் கூடிய பிரபலமான இடங்கள்:
அரபலீஸ்வரர் கோவில்; கொல்லிமலையில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலாகும்.
இந்த கோவிலின் அருகிலேயே ஆகாய கங்கையும் கோரக்கர் சித்தர் குகையும், காலங்கிநாதர் சித்தர் குகையும் இருக்கிறது
ஆகாய கங்கை:
ஆகாயகங்கை கொல்லிமலையில் உள்ளது. இந்த அருவி அய்யாறு என்னும் ஆற்றிலிருந்து உருவாகி வருகிறது. இது 300 அடி உயரம் கொண்ட அருவி.
இந்த ஆகாயகங்கையை பேயருவி என்று கூறுவது வழக்கம். ஏனெனில் இந்த அருவியிலிருந்து உருவாகும் பயமுறுத்தும் அளவிலான தண்ணீர் வரப்பினால் இப்படி அழைக்கப்பட்டது.
ஆகாய கங்கையை அடைவதற்கு 1196 படிகள் ஏற வேண்டும். அந்த படிகளும் சற்று செங்குத்தாக வேயிருக்கும்.
இறங்கி வருவதற்கு 10 நிமிடமே எடுத்து கொண்டாலும் ஏறுவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். ஆங்காங்கே சுற்றிப்பார்க்க வருபவர்கள் ஓய்வெடுக்க நிழற் குடைகளும் அமைத்து தரப்பட்டுள்ளது.
வசலூர்பட்டி போட் ஹவுஸ்:
இந்த போட் ஹவுஸ் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் அமைந்துள்ளது.
இது கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான ஒரு இடமாகும். ஏரியை சுற்றியுள்ள பச்சைப் பசேலெனும் மலைத்தொடரை ரசித்துக் கொண்டே போட்டிங் செல்வது புது அனுபவமாக இருக்கும்.
சித்தர் குகைகள்:
கொல்லிமலை சித்தர்கள் வசிக்கும் இடமாகவே கருதப்பட்டது. அமைதியாக தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக கொல்லிமலை அமைந்திருந்தது. அங்கே இன்றும் காலங்கிநாதர் வாழ்ந்த குகையையும் கோரக்கர் வாழ்ந்த குகையையும் பொதுமக்கள் சென்று பார்த்துவிட்டு வரலாம்.
கொல்லிமலை ரகசியம்:
சித்தர்களுக்கு தவம் செய்வதற்கான அமைதியான இடமாக கருதுவது கொல்லிமலையை தான். இருப்பினும் இங்கே பிசாசுகள் அவர்களை தவம் செய்ய விடாமல் தடுத்தது. அதனால் சித்தர்கள் கொல்லி பாவையிடம் வேண்டியதால், அவளே பிசாசுகளை கொல்லிமலையில் இருந்து விரட்டி அடித்தாள் என்ற புராணம் உண்டு.
கொல்லிமலையில் கிடைக்கும் பொருட்கள்:
கொல்லிமலை மசாலா பொருட்கள் வாங்குவதற்கு பிரபலமான இடம். இங்கே காபி, ஏலக்காய், மிளகு, அரிசி, தேன் ஆகியவற்றை குறைந்த விலையில் தரமாக வாங்கலாம்.
கொல்லிமலை இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி பொறுமையாக சுற்றிப் பார்த்து விட்டு வருவதற்கான ஏற்ற இடம்.
கொல்லிமலையில் நிறைய ரகசியங்கள் மறைந்தி ருப்பதாக இன்னும் கருதுவதால் சாகச பயணத்திற்காக செல்பவர்கள் உண்டு. அதை தவிர்த்து பைக் சவாரி செய்ய விரும்புவோர்களுக்கும் கொல்லிமலை மிகவும் விருப்பமான இடமாகவேயிருக்கிறது.