கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள திப்புவின் கோட்டை ஹைதர் அலியால் 1766 கட்டப்பட்டது.
ஹைதர் அலியின் மகன் திப்புவின் பெயரால் அழைக்கப்படும் இக்கோட்டை கருங்கல்லால் ஆனது.
சஹாயாத்ரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோட்டை.19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இது ராணுவ தளமாக செயல்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கீழ் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூரிலிருந்து இந்த கோட்டை 52 கிலோமீட்டர் தூரத்திலும், கோழிக்கோட்டிலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
இக்கோட்டை பாலக்காடு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கோட்டையில் பெரிய மைதானம் ஒன்று உள்ளது. தற்போது இந்த கோட்டை மைதானம் கிரிக்கெட் போட்டிகள், கண்காட்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த பயன்படுத்தப்படுகிறது.
இந்த மைதானத்திற்குள் திறந்தவெளி அரங்கம் ஒன்று "ராப்பாடி" என்ற பெயரில் உள்ளது. சிறுவர் பூங்கா ஒன்று இந்த கோட்டைக்குள் உள்ளது.
கோட்டையின் கிழக்கு நுழைவாயிலில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.
கோட்டை ஒரு அழகிய அகழியால் சூழப்பட்டு காணப்படுகிறது. 60, 702 சதுர மீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த மைதானம் நம்மை பிரமிக்க வைக்கிறது.
இங்கு தொல்பொருள் அருங்காட்சியமும் உள்ளது. நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். உள்ளூர் மக்கள் நடைப்பயிற்சி செய்வதும், வெளியூர் மக்கள் வந்து பார்வையிடவும் சிறந்த இடமாக உள்ளது.
நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு வர சிறந்த நேரம். அதிக வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் இருப்பதால் நன்கு சுற்றி பார்க்க முடிகிறது. இந்த கோட்டை காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாரத்தின் எல்லா நாட்களும் திறந்து இருக்கும்.
பின் குறிப்பு:
நாங்கள் பிப்ரவரியில் பாலக்காடு கோட்டைக்கு சென்று சுற்றிப் பார்த்தோம். மிகவும் அருமையாக இருந்தது. கல்பாத்தியில் ஒரு பங்க்ஷனில் கலந்து கொண்டு விட்டு Alleppey/Alappuzha Boat House ல் தங்கி, அடுத்த நாள் அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் சென்று ஒரு கையில் சாட்டையும் மறு கையில் சங்கும் ஏந்தி அபூர்வமாக காட்சி தரும் ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்து விட்டு இரவு சென்னைக்கு ரயில் ஏறினோம். இது எங்களுக்கு மறக்க முடியாத பயணமாக இருந்தது. கேரள உணவும் நன்கு ரசித்து சாப்பிடும் படி இருந்தது.