Payanam articles
Top 5 tallest buildings!

பொருளாதார வலிமையின் சின்னங்கள்: ஆசியாவின் டாப் 5 உயரமான கட்டிடங்கள்!

சியாவின் உயரமான கட்டிடம் என்றவுடன் மலேஷியாவின் பெட்ரோனஸ் டிவின் டவர் முதலில் நியாபகம் வந்தால் நாமெல்லாம் 90ஸ் கிட்ஸ் என்று அறிக. இப்ப பெட்ரோனஸ் டவர் எல்லாம் டாப் 10 லிஸ்டில் கூட இல்லையாம். அதை தாண்டி வின்னுயர கட்டிடங்கள் எல்லாம் ஆசியாவில் வந்துவிட்டது. ஒரு நாட்டின் பொருளாதார வளம், பொறியியல் முன்னேற்றத்தின் வலிமையைக்காட்ட உயரமான கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

 பொருளாதார வலிமையில் ஆசியாவில் 2 வது பெரிய பொருளாதார வளம் மிக்க நாடான இந்தியாவில், இன்று வரையில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய கட்டிடம் இல்லை என்பது வேதனை. டெண்டரில் கட்டப்படும் பாலம், கட்டிடம்போல இடிந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ? இன்னும் 10 மாடி கட்டிடத்தை பார்த்தே இந்தியர்கள் வாயை பிளக்க வேண்டியுள்ளது. அதே வேளையில் நம்மவர்கள் ஆசியாவில் சுற்றுலா பயணம் செய்து பார்க்க வேண்டிய ஐந்து உயரமான கட்டிடங்களை இங்கு பார்ப்போம்.

1. புர்ஜ் கலீஃபா – துபாய் burj khalifa dubai


Top 5 tallest buildings!
burj khalifa dubai

துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடம் ஆசியாவில் மட்டுமல்ல , உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடத்தில் முதல் இடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வ வனப்பை காட்டுவதற்காக இது கட்டப்பட்டது. இதன் உயரம் 828 மீ , உலகளாவிய பொருளாதார மையமாக துபாய் நகரை மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. அட்ரியன் ஸ்மித் என்ற பொறியியல் வல்லுநர் புர்ஜ் கலீபாவை வடிவமைத்தார். இந்த கட்டிடத்தில் ஆடம்பர குடியிருப்புகள், கார்ப்பரேட் சூட்கள், அர்மானி ஹோட்டல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்காணிப்பு தளங்கள் உள்ளன.

2. மெர்டேக்கா 118 – மலேசியா - Merdeka 118


Top 5 tallest buildings!
Merdeka 118

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் கட்டப்பட்டுள்ள மெர்டேகா 118 கட்டிடம் , 678.9 மீ உயரத்துடன் மலேசியாவின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றது மட்டும் அல்லாமல் , உலகின் இரண்டாவது பெரிய கட்டிடம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இதற்கு முன் மினரா வாரிசன் மெர்டேக்கா , கே.எல் 118 என்ற பெயரிலும் இந்த கட்டிடம் அழைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு மெர்டேக்கா 118 கட்டி முடிக்கப்பட்டது. உள்ளே சொகுசு ஹோட்டல்கள் , ஆடம்பரமான அலுவலகங்கள் போன்றவற்றுடன் மலேசியாவின் புதிய சின்னமாக நிற்கிறது.

3. ஷாங்காய் டவர் – சீனா - Shanghai Tower


Top 5 tallest buildings!
Shanghai Tower

சீனாவின் ஷாங்காய் மாநகரத்தில் வானுயரக் கட்டிடமாக புடாங்கில் ஷாங்காய் டவர் கட்டப்பட்டுள்ளது. 632 மீ உயரத்தில் உலகின் மூன்றாவது உயரமான கட்டிடமாகவும், ஆசியாவின் 3 பெரிய கட்டிடமாகவும் இது உள்ளது. மலேசியாவின் மேர்டேக்கோ 118 கட்டிடம் கட்டப்படும் வரையில் இதுதான் உலகின் மிக உயரமான இரண்டாவது கட்டிடமாக இருந்துள்ளது. திருகலான இதன் வடிவமைப்பு காற்றினால் ஏற்படும் அழுத்தத்தில் பாதிக்கப்படாமல் இருக்கும் .சீனர்களின் நவீன கட்டிடக்கலைக்கு சான்றாகவும், சீனாவின் தரமான பொருளுக்கு உதாரணமாகவும் ஷாங்காய் டவர் உள்ளது

4. மக்கா ராயல் வாட்ச் டவர் -  சவுதி  - Makkah Royal Clock Tower


Top 5 tallest buildings!
Makkah Royal Clock Tower

சவூதி அரேபியாவின் மிக உயரமான கட்டிடமான இது மெக்கா நகரின் பெரிய மசூதியை பார்த்த வண்ணம் கட்டப்பட்டுள்ளது. ராயல் வாட்ச் டவரில் உள்ள மிகப்பெரிய கடிகாரம் , சுற்று பட்டில் 25 கிமீ தூரம் வரை உள்ள இடங்களில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள் , சொகுசு ஹோட்டல்கள், மசூதிகள் ஆகியவை இந்த கட்டிடத்திற்குள் உள்ளன. மேலும் மெக்கா வரும் இஸ்லாமிய பயணிகளை தங்க வைக்கும் நோக்கத்திலும் இது கட்டப்பட்டுள்ளது.

5. பிங் அன் நிதி மையம்- சீனா - Ping An Finance Centre


Top 5 tallest buildings!
Ping An Finance Centre

சீனாவின் ஷென்சென் நகரின் மத்தியில் கட்டப்பட்ட பிங் அன் நிதி மையம் சீனாவின் இரண்டாவது உயரமான கட்டிடமாக உள்ளது. ஆசிய அளவில் 5 வது உயரமான கட்டிடமாகவும் உள்ளது. இந்த கட்டிடத்தில் பிங் அன் இன்சூரன்ஸ் தலைமை அலுவலகம் , உயர்தர ஹோட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com