

பயண நிறுவனம் (Travel agency) என்பது வாடிக்கையாளர் களுக்குப் பயணம் தொடர்பான சேவைகளை வழங்கும் ஒரு தனியார் சில்லறை அல்லது பொது சேவை நிறுவனமாகும். சுற்றுலாப் பயணிகளுக்கு விமான டிக்கெட்டுகள், தங்குமிடங்கள் போன்ற பயணத் திட்டங்களை ஏற்பாடு செய்து விற்பனை செய்யும் ஒரு வணிகமாகும். இது பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பயண அனுபவத்தை எளிதாக்க உதவுகிறது.
பயண நிறுவனத்தின் முக்கிய பணிகள்:
பயணிகளுக்கான போக்குவரத்து (விமானம், ரயில், பேருந்து போன்றவை) மற்றும் தங்கும் இடங்களை முன்பதிவு செய்தல் போன்ற பயண ஏற்பாடுகள் இவற்றின் முக்கிய பணிகளாகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தருவதும், பல்வேறு இடங்களுக்கான ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பிற தங்கும் இடங்களை முன்பதிவு செய்து தருவதும் இவற்றின் முக்கிய பணியாகும்.
சுற்றுலா பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய தொகுப்புகளை உருவாக்கி விற்பனை செய்தல். பயண முகவர்கள், சுற்றுலாத்தலங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் பயணத்திற்கான சிறந்த நேரங்கள் ஆகியவற்றைப் பற்றி பயணிகளுக்கு ஆலோசனை வழங்குதல் பயண நிறுவனத்தின் முக்கிய பணியாகும்.
சர்வதேச பயணிகளுக்குத் தேவையான விசா விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. பயண ஆவணங்கள், விசா உதவிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற கூடுதல் சேவைகளை இந்தப் பயண நிறுவனங்கள் வழங்குகின்றன.
சுற்றுலாத் தயாரிப்பு வழங்குநர்களுக்கும் (ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள்) பயணிகளுக்கும் இடையே ஒரு இடைத்தரகராக செயல்படுகின்றன. ஹாலிடே பேக்கேஜாக போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் சில நேரங்களில் உணவு அல்லது செயல்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பயணப் பொதிகளை வடிவமைத்து வழங்குவது இவர்களின் முக்கிய பணியாகும்.
கார் வாடகை, க்ரூஸ் முன்பதிவு மற்றும் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்வது இவற்றின் முக்கிய பணியாகும். பயணத்தின் போது எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்க பயணக் காப்பீடுகளை பரிந்துரைக்கிறார்கள்.
நிதி சேவைகள் எனப்படும் தேவைக்கேற்ப வெளிநாட்டு நாணய பரிமாற்ற சேவைகளை (foreign exchange) வழங்குவதும், பயணம் முழுவதும் அல்லது அவசர காலங்களில் 24/7 வாடிக்கையாளர் சேவை மற்றும் உதவியை வழங்குவதும் இவற்றின் முக்கிய பணிகளாகும்.
பயண நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பயண முகவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆலோசனை வழங்குவதுடன் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பயணத்தை மிகவும் எளிதானதாக்குகிறார்கள்.