ரூடிஷெய்ம் ரெய்ன்
ரெய்ன் நதியைச் சுற்றியுள்ள ஒரு சிறு நகரம். மிகப் பெரிய அளவில் இங்கு திராட்சை சாகுபடி ஆகிறது. அதற்கான சீதோஷ்ண நிலை இருப்பதால் வைன் உற்பத்தி இங்கு பிரதானம். அங்கே உள்ள சிறு குன்றையடைய நடந்து ஏறலாம் அல்லது கேபிள் கார் மூலம் நதிக்கரையிலிருந்து மேலே செல்லலாம். அது திராட்சைத் தோட்டத்திற்கு மேலாகவே செல்லுவதால் நீண்ட தூரம் தோட்டத்தைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. இதைவிட மேலேறிய பின் நதியும், நகரமும், தோட்டமும் பார்க்கப் பார்க்கப் பரவசமே. மேலே புகழ் பெற்ற கிட்டத்தட்ட 124 அடி உயர சிலை. நெய்டர்வால்ட் மெமோரியல் என்று அழைக்கப்படும் வெற்றியின் சின்னமான இது ஜெர்மனியின் பெருமையையும் ஒற்றுமையையும் குறிக்கிறது. சிலையைப் பார்த்து நீண்ட படிகளில் இறங்கினால் தடுப்புடன் கூடிய அடுக்கடுக்கான மூன்று பெரிய தளங்கள். நதி மற்றும் நகரத்தின் அழகைக் கண்டு களிக்கும் முகமாக ஆங்காங்கே நிறைய பென்ச்கள். நேரம் போவதே தெரியாமல் நின்றோ, அமர்ந்தோ ரசிக்கலாம்.
ஸார்லாண்ட்
ஜெர்மனியின் மிகவும் சிறிய மாவட்டம். ஆனால் மிக அழகிய மலைப் பிரதேசம். அதை நோக்கிச் செல்லும் சாலையின் இரு மருங்கும் - சுற்றிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமையானமரங்கள். இங்கு ஸார் நதி 'U' வடிவில் உள்ளது. இங்கும் tree top walking என்று சொல்லப்படும் மரங்களின் உச்சியூடே உயரத்தில் நடக்கும் நீண்ட மரப்பாதை உள்ளது. ஜெர்மனி முழுதிலும் மொத்தம் 5 இடங்களில் இது போல் அமைக்கப்பட்டுள்ளன. நடந்து முடிக்கும் இடத்திலிருந்து இன்னும் உயரம் சென்று பார்க்கும்படி 7 அடுக்கு அகல மரப்பாதை. ஏறுவதும் இறங்குவதும் சிரமமாக இல்லாதபடி செய்திருக்கிறார்கள். உச்சியிலிருந்து பார்த்தால் நதியின் யூ வடிவ அழகைக் கண்டு ரசிக்கலாம்
இங்கு பெருமளவில் நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்திருக் கின்றன. கடைசியாக ஒரு குன்று கரிவளம் குறைந்த நிலையில் 2012ல் மூடப்பட்டது. பல நூற்றாண்டுகள் கரி தந்து தொழிற்சாலைகளை உருவாக்கித்தந்ததன் நினைவாக மிக்க முயற்சியுடன் ஒரு சின்னம் உருவாக்கியிருக்கிறார்கள். முழுவதும் ஸ்டீலாலான பல்கோண வடிவு ஒன்றை 'ஸார் பாலிகன்' என்ற பெயரில் அமைத்திருக்கிறார்கள் இது கிட்டத்தட்ட 100 அடி உயரம். ஏறுவதற்கு 132 படிகள். இதன் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு வடிவில்- முக்கோணமாக, நீள் சதுரமாக, தலைகீழ் முக்கோணமாக, Z போன்று என்று விதவிதமாக இது காட்சி தரும். அரை மணி நேரம் மூச்சு முட்ட பீடபூமியேறி பின்னர் அதன் மேல் அமைந்த இதன் படிக்கட்டுகளைக் கஷ்டப்பட்டு ஏறிச்சென்றால் - அந்த சிரமத்திற்கான பலன் - ஆஹா! நகர் முழுதும் கண்முன் அழகாய் விரிகிறது. தொலைதூரத்தில் ஃப்ரான்ஸ் மற்றும் லக்ஸம்பர்கும் தெரியும். நல்ல காற்றும், இயற்கை வளம் கொஞ்சும் ஊரையும் ஆசைதீர பார்த்து விட்டு இறங்கலாம்.
ஸார்புர்க் என்று ஒரு செங்குத்தான குன்று இங்குள்ளது. கேபிள் கார் ரூடிஷெம்மில் மூன்று புறமும் மூடியிருந்தது. ஆனால் இங்கோ பின்னால் தவிர மூன்று பக்கங்களும் திறந்திருப்பதால் கொஞ்சமாக பயம் இருந்தது. மேலே சென்றால் அழகிய பசுமை வளம். அதுமட்டுமின்றி குன்றிலே சுற்றி சுற்றி அகன்ற தண்டவாளம் போன்ற தோற்றத்தில் ஸ்டீலில் பதிக்கப்பட்ட ஓர் அமைப்பு. நீண்டு வளைந்து , நெளிந்து, சறுக்கி, ஏறி இறங்கும்படி அமைத்திருக்கிறார்கள்.
ரோடல்பான் என்று இதிலே பயணிக்க குட்டியாக வண்டி போல் ஓர் இருக்கை. ஒருவர் அல்லது குழந்தையுடன் இருவர் அமரலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் தானே இயக்கி ஓட்ட வேண்டும். வேகத்தை அதிகரிக்க, குறைக்க, நிறுத்த என்று கார் க்ளட்ச் போல ஒன்று இருக்கிறது. நிறைய வளைவுகளைத் தவிர மூன்று இடத்தில் செங்குத்தான சறுக்கலில் சரியாக கன்ட்ரோல் செய்யாவிட்டால் பயங்கர வேகத்தில் இறங்குகிறது. அதைப் பார்த்த மாத்திரத்தில், பயணிக்க ஆசையிருந்தாலும், பார்வையாளராக இருப்பதே மேல் என்ற முடிவெடுத்தேன்
கோடை காலமானதால் இதமான குளிர்ச்சியான காற்றையும் பசுமை அழகையும் ரசித்தவாறே..!