பயணக்கட்டுரை: அதிகம் அறியப்படாத ஆலம்பரைக் கோட்டை!

ஆலம்பரைக் கோட்டை ..
ஆலம்பரைக் கோட்டை ..
Published on

பொதுவாக கோட்டைகள் மலைப்பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கருகில் வட்டக்கோட்டை, மாமல்லபுரத்திற்கு அருகில் சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை, தரங்கம்பாடி கோட்டை என சில கோட்டைகள் மட்டும் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மற்றுமொரு கோட்டையே கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடப்பாக்கம் என்ற ஊருக்கருகில் இடைக்கழிநாடு என்ற பகுதியில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஆலம்பரைக் கோட்டை ஆகும். அக்காலத்தில் அவ்வப்போது நடைபெற்ற கடல்படையெடுப்புகளைத் தடுக்க இக்கோட்டை கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கி.பி.17 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர்கள் பதினைந்து ஏக்கர் நிலப்பரப்பில் சதுரவடிவத்தில் கண்காணிப்பு மாடங்களுடன் கடற்கரையை ஒட்டி இக்கோட்டையைக் கட்டியுள்ளனர். செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையின் மூலமாக இப்பகுதியானது இடைக்கழிநாடு என்று அழைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. முகலாயர்கள் காலத்தில் இக்கோட்டைப் பகுதியானது ஒரு சிறந்த துறைமுகப் பட்டினமாக இயங்கியுள்ளது. நவாப்களின் முக்கிய வர்த்தகத் துறைமுகமாக இப்பகுதி இருந்துள்ளது. இப்பகுதிக்கு இடைக்கழிநாடு, ஆலம்பர்வா, ஆலம்புரவி என பிற பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. கி.பி.1735 ஆம் ஆண்டில் இப்பகுதியை நவாப் தோஸ்து அலிகான் என்பவர் ஆட்சி செய்தார்.

கி.பி.1750 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இக்கோட்டையைக் கைப்பற்ற முயன்றார்கள். அப்போது ஆங்கிலேயர்களை எதிர்க்க பிரெஞ்சு தளபதி டியூப்ளே உதவி செய்தார். இதற்குப் பிரதிபலனாக அப்போது இப்பகுதியை ஆட்சி செய்த சுபேதார் முஸாபர்ஜங் இக்கோட்டையை அவருக்குப் பரிசளித்தார். பின்னர் பிரெஞ்சு ஆட்சியின் வலிமை குறைந்த சமயத்தில் கி.பி.1760 ல் பிரெஞ்சுப் படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப் படை இந்த கோட்டையைக் கைப்பற்றியது. அவ்வப்போது நடைபெற்ற போர்களின் காரணமாக இக்கோட்டை பெரும்பகுதி சிதைந்துபோய் தற்போது கோட்டையின் சிதைந்த சுவர்கள் மட்டுமே மிச்சமாகக் காட்சி அளிக்கின்றன. கோட்டையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள 100 மீட்டர் நீளப் படகுத்துறையின் வாயிலாக அக்காலத்தில் கப்பலில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. இங்கிருந்து ஜரி துணிகள், நெய் மற்றும் உப்பு முதலானவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆலம்பரைக் கோட்டை...
ஆலம்பரைக் கோட்டை...

ஆலம்பரைக் கோட்டையில் முற்காலத்தில் நாணயச் சாலை இருந்திருக்கிறது. இந்த நாணயசாலை ஆலம்புரவி என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆலம்பரைக் காசு மற்றும் ஆலம்பரை வராகன் முதலான நாணயங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது தமிழகத்தில் அதிகம் அறியப்படாத இருபது சுற்றுலாத்தலங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் இக்கோட்டையும் அடங்கும். தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறையால் இக்கோட்டை பாதுகாக்கப்படுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 2004 ல் இப்பகுதியை சுனாமி ஆழிப்பேரலை தாக்க இந்த கோட்டை மேலும் சிதைந்து போனது. தற்போது கோட்டையின் உடைந்த சுவர்கள் வரலாற்றை நமக்குச் சொல்லியபடி ஆங்காங்கே நிற்கின்றன.

இதையும் படியுங்கள்:
அனுபவச் சுவடுகள் - 2 'அரியமாணிக்கம் அம்மன்'!
ஆலம்பரைக் கோட்டை ..

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ஈசிஆர்) கடப்பாக்கத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடைக்கழிநாடு என்ற ஊரில் ஆலம்பரைக் கோட்டை அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இக்கோட்டை அமைந்துள்ளது.

மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் ஈசிஆரில் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புகள் மிக்க இந்த ஆலம்பரைக் கோட்டையை வார விடுமுறையின்போது ஒருநாள் சென்று பார்த்து ரசித்து வாருங்கள். இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முதலியார் குப்பம் படகுத்துறைக்கும் சென்று படகு சவாரி செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com