
கம்போடியாவில் மிதக்கும் வீடுகள்… வெள்ளம் வந்து மிதக்கும் வீடுகள் அல்ல இவை. மாபெரும் கடல் போன்ற டோன்லே சாப் (Tonlé Sap) ஏரியில் கட்டப்பட்டிருக்கும் மீனவர் குடியிருப்புக்கள்,
ஆசியாவில் மூன்றாவது மிக நீளமான நதி மீகாங் (Mekong) திபேத்தின் இமயமலைப் பகுதியில் உற்பத்தியாகி, தென்கிழக்கு ஆசியாவில் சீனா, தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம் உட்பட ஏழு நாடுகளில் ஓடிவரும் வற்றாத நதி.
கம்போடியாவில் ஒரு பகுதியாக இருக்கும் ‘டோன்லே சாப்’ ஏரி உலகின் மிகப் பெரிய நல்ல நீர் ஏரி (freshwater lake). இங்கு காணப்படும் மீன் வளத்தை நம்பி சுமார் 30 லட்சம் மக்கள், பல கிராமங்களாக குழுமி, ஏரி வீடுகளில் வாழ்கிறார்கள். ஏரியில் நீரின் அளவு மழைக் காலத்தில் அதிகரித்தும், கோடையில் குறைந்தும் மாறி மாறி இருப்பதால் அதற்கேற்றபடி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏரிக்கரையை ஒட்டி, உயரமான மூங்கில் கொம்புகளைப் பதித்து, (ஸ்டில்ட்) அதன் மேல் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற கூரைகள் அமைத்து வீடாக்கியிருக்கிறார்கள். அந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புக்களைக்காண நாம் ஒரு க்ரூயீஸ் படகில் சென்றோம்.
சயாம்ரீப் நகரிலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணம். வரிசையாக வீடுகள். அங்கேயே ஒரு சர்ச் இருக்கிறது. பள்ளிக்கூடம், உணவு விடுதி கூட இருக்கிறது. மருத்துவமனையும் அவர்களுக்காக அங்கே கட்டியிருக்கிறார்கள்.
எங்கள் போட் அருகே சர்சர்ரென்று விரையும் மீனவ மக்களின் படகுகள். அவர்களது போக்குவரத்து சாதனம். நடுவில் ஓர் இடத்தில் கரையை ஒட்டி இருந்த ஓர் அழகான புத்தர் கோயில் அருகே படகு நிற்கிறது. இறங்கிச் சென்று புத்தரை தரிசிக்கிறோம். ஆறேழு வயதுப் பள்ளிக் குழந்தைகள் சிலர் ஓடி வருகிறார்கள். எளிய உடை அணிந்த கம்போடியப் பெண்கள், கையில் பென்சில் கட்டுக்கள், பாடப் புத்தகங்களுடன் நம்மை சூழ்ந்துகொண்டு, அந்தக் குழந்தைகளுக்கு வாங்கித் தரும்படி கெஞ்சுகிறார்கள். எல்லாம் ஒரு டாலர், இரண்டு டாலருக்கு. குழந்தைகளுக்கு சில புத்தகங்களை வாங்கிக் கொடுத்தோம்.