
கிங்டம் ஆஃப் கம்போடியா:
இன்று சுதந்திரமான ஜனநாயக நாடாக இருந்தாலும், அரசியல் சாசனத்துகுட்பட்டு, அரச பரம்பரையை மதிக்கும் ஒரு சில நாடுகளில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவும் ஒன்று. ஆசியாவின் மூன்றாவது பெரிய நதியான மீகாங் நதியின் முகத்துவாரத்தில், வியட்னாம், தாய்லாந்து, லாவோஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டது காம்போடியா.
மலைகளும், சமவெளிகளும், மீகாங் நதியின் செழிப்பும், வளமான மண்ணும் இருந்தாலும், 20ம் நூற்றாண்டு வரை பலப் பல போர்களினால் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்த நாடு. ஒரு காலத்தில், 11,12ம் நூற்றாண்டு களில் பல இந்து அரசர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள்.
மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் கொண்டாடிய நாடு. பின்னர் அரசர்கள் மாற, கொள்கைகளும் கோயில்களும் அந்தந்த அரசரின் ஆசைப்படி மாற்றியமைக்கப்பட, இன்று 90 சதவீதத்தினர் புத்த மதத்தைப் பின்பற்றும் நாடாகி யிருக்கிறது.
ஃப்ரான்ஸ், ஜப்பான், வியட்னாம் என்று பல நாடுகளின் ஆதிக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்கள் என்று அலைக்கழிக்கப்பட்ட நாடு. அமெரிக்க ரஷ்ய நாடுகள் கடந்த 1975 வரை வியட்னாம் சண்டையில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்காவால் குண்டு வீசப்பட்டு, பாதிப்புக்குள்ளான நாடு.
அப்போது கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட இந்த நாட்டில் 1975ல் கேமர் ரூஜ் (Khmer Rouge) என்னும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் செயலாளராக இருந்த ‘போல் போட்’ (Pol Pot) நாட்டின் பிரதமரானான். 1976 முதல் 1979 வரை இந்நாட்டை ஆண்ட இந்த சர்வாதிகாரி, வேகமாக கம்யூனிசத்தை நாட்டில் பரப்பும் தீர்மானத்தில், நாட்டின் 25 சதவீத மக்களைக் கொன்று குவித்திருக்கிறான். போரும், வன்முறைகளும் 1990 வரை தொடர்ந்தன. ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் 1991 ம் ஆண்டு சண்டை நிறுத்தமும், ஆயுதகுறைப்பும் நடப்புக்கு வந்தது.
ஏறக்குறைய 20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்து துறைகளும் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஆனால், இன்று நிதானமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது கம்போடியா.
தலைநகரம் ‘நாம் பென்’ (Phnom Penh) என்றாலும் உலகப் புகழ்பெற்ற அங்கோர் வாட் இருப்பதால், நாங்கள் சென்ற நகரம் சியாம் ரீப். கம்போடியாவின் அடையாளமாக, இருப்பது அங்கோர் வாட் (Angkor Wat) என்னும், (அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத) உலக அதிசயங்களில் ஒன்றான இந்து - புத்தக் கோயில். அன்றைய கேமர் (Khmer) சாம்ராஜ்யத்தின் அரசராக இருந்த இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட இந்த அதிசயத்தைப் பார்க்கும் ஆவலில், கம்போடியப் பயணத்தை மேற்கொண்டோம்.
கம்போடியாவின் இரண்டாவது பெரிய நகரமான சியாம் ரீப் (Siem Reap) பின் மீடியம் சைஸ் ஏர்போர்ட்டில் விசா ஆன் அரைவல் (visa on arrival) நடைமுறை பின்பற்றப்படுகிறது. தலைக்கு 30 அமெரிக்க டாலர் கட்ட வேண்டும். கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ், இமிகிரேஷன் என இரண்டு ஃபார்ம்களை நிரப்பி, சென்னை ட்ராவல் ஏஜென்ட் கொடுத்திருந்த ஈ-விசா பேப்பர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, ஒரு மாத விசா எங்கள் பாஸ்போர்ட்டில் குத்தப்பட்டு, வெளியே வந்தோம். பயணக் கம்பெனியின் அட்டையைக் காட்டி எங்களுக்காக வெளியே காத்திருந்தார் கம்போடியாவைச் சேர்ந்த எங்கள் வழிகாட்டி நாப் (Nob).
நாங்கள் செல்ல வேண்டிய ஹோட்டல், ‘சோம்தேவி அங்கோர் வாட் அண்ட் ஸ்பா’ (இந்துக் கடவுள் பெயர் போல இல்லை?) ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் நகரின் அகன்ற சாலைகளில் அமைதியான போக்குவரத்து. அக்டோபர் மாதம் என்றாலும் காற்றில்லாத வானில் கதிரவனின் வெப்பமான வீச்சு. ஏகப்பட்ட மோட்டார் பைக்குகள், பல வெளிநாட்டுக் கார்கள், டுக்டுக் எனப்படும் ஆட்டோக்கள் விரையும் சாலைகளில் பஸ் ஒன்று கூடக் காணோம்!