
மிகப் பிரமாண்டம், கம்பீரம், கட்டிடக்கலையின் அபார நிபுணத்துவம், புராதனத்தின் மகிமை, ஆன்மிகம் என்று எல்லாம் சேர்ந்த ஓர் இடம் அங்கோர் வாட். அதன் முக்கிய நுழைவாயில் ஒரு சிறு கோபுரத்துக்குள் ஒரு சன்னிதி. எட்டு கைகளுடன் கூடிய பெரிய விஷ்ணு சிலை இன்று புத்தராகியிருக்கிறது.
அங்கோர் வாட்டின் உயர்ந்த நடு கோபுரம், மேரு மலையைக் குறிப்பதாக, அதாவது சிவன் வாழும் கைலாசம் என்கிறார் நாப் (கைடு).
மொத்தம் மூன்று தளங்கள். ஒவ்வொன்றிலும் சதுர கூடங்கள் அவை, நடு கோபுரத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்தின் நீண்ட பிரகாரங்களின் சுவர்களில் பாறைக் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. எட்டு விதமான கதைகளை இந்துமத இதிகாச, புராணங்களிலிருந்து எடுத்து, அந்த காட்சிகளை, புடைப்புச் சிற்பங்களாக, நெருக்கமாக செதுக்கியிருக்கிறார்கள். இந்தச் சிற்பங்களின் பரப்பளவு மொத்தம் 1200 சதுர மீட்டர்கள்.
அமிர்தம் எடுப்பதற்காக வாசுகி என்கிற பாம்பை கயிறாக்கி, மேருமலையை மத்தாக்கி பாற்கடலைக் கடையும் தேவர்கள் ஒருபுறம், அசுரர்கள் மறுபுறம். விஷ்ணு ஓர் ஆமையின் மேல் காட்சி தருகிறார் (கூர்ம அவதாரம்?) விஷம் வெளிப்படுதல், சிவபெருமான் அதை உண்டு, நீலகண்டன் ஆதல் சிற்பங்களெல்லாம் சற்றே வித்தியாசமாக மங்கோலிய முக பாவனையில் காட்சி தந்தாலும், கம்போடியக் கோயில் கேலரிகளில் காணும்போது, நமக்கு பரவசமாக இருக்கிறது.
நாப், தனது கம்போடியன் ஆங்கிலத்தில் நம் புராணங்களை விவரிக்கும்போது, புன்னகையுடன் ரசிக்கிறோம்.