

உலகெங்கிலும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்காக பல நீரூற்றுகளில் நாணயங்களை போடுகிறார்கள். ரோமில் உள்ள புகழ்பெற்ற "ட்ரெவி (Trevi) நீருற்றுதான் இந்த நம்பிக்கையின் பிண்ணனியில் உள்ளது.18 ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், சுமார் 30 ஆண்டுகளில் இந்த நீரூற்று கட்டி முடிக்கப்பட்டது.
சுமார் 20 மீட்டர் அகலமும் 26 மீட்டர் உயரமும் கொண்ட ட்ரெவி நீரூற்று நகரத்தின் மிகப்பெரிய பரோக் பாணி நீரூற்று ஆகும், இது அதன் கட்டிடக்கலை மற்றும் கடல் கடவுளான நெப்டியூனின் சிலைக்கு பெயர் பெற்றது, சுற்றுலாப் பயணிகள் நாணயங்களை வீசி ரோம் திரும்புவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் பாரம்பரியத்திற்காக மிகவும் விரும்பப்படுகிறது.
ரோம் நகரம் கண்கவர் நீரூற்றுகளால் சூழப்பட்டுள்ளது, அவற்றில் மிகப்பெரிய மற்றும் அழகானவை முதல் சிறியவை வரை 2,000 க்கும் மேற்பட்டவை உள்ளது. ட்ரெவி நீரூற்று மிகவும் பிரபலமானது. மேலும் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 20 மாதங்களுக்கு விரிவான புதுப்பித்தலுக்கு உட்பட்டது, பிறகு 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மதுவின் மீதான விதிக்கப்பட்ட வரிப்பணத்தில் இந்த ' ட்ரெவி' நீரூற்று கட்டப்பட்டது.ரோம் நகரின் மையப்பகுதியில் இது 'பியாஸ்ஸா டி ட்ரெவி' என்ற இடத்தில் 'அக்வா விர்கோ ' நீர் வழிப்பாதை முடிவில் உள்ளது. சுவாரஸ்யமாக, ட்ரெவியின் பெயர் ட்ரெ வியே (மூன்று வழிகள்) என்பதிலிருந்து உருவானது, ஏனெனில் நீரூற்று மூன்று தெருக்களின் சந்திப்பு இடமாக இருந்தது.
கி.மு 19 ல் ஆக்வா வெர்ஜினே மாளிகை கட்டி முடிக்கப்பட்டதற்காக இந்த இடம் அமைக்கப்பட்டது. முதல் நீரூற்று மறுமலர்ச்சியின் போது, போப் நிக்கோலஸ் இன் வழிகாட்டுதலின் கீழ் மாற்றம் செய்யப் பட்டது.பின்னர் ட்ரெவி நீரூற்றின் இறுதி தோற்றம் 1762 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, நிக்கோலா சால்வியின் கைகளில் பல வருட பணிகளுக்குப் பிறகு, அது 'கியூசெப் பன்னினியால் 'இறுதி வடிவம் செய்யப்பட்டது.
ஏன் எப்போதும் நீரூற்றிற்கு செல்லும் மக்கள் தண்ணீரில் நாணயங்களை எறிந்து தங்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்?
1954 ஆம் ஆண்டு வெளியான "த்ரீ காயின்ஸ் இன் தி ஃபவுண்டன்" என்ற ஹாலிவுட் படத்திற்குப் பிறகு இந்த பாரம்பரியம் பிரபலமடைந்தது. படத்தின் கதைக் களத்தில், மூன்று அமெரிக்கர்கள் சாகசத்தைத்தேடி இத்தாலிக்குச் சென்று, ரோமில் உள்ள ட்ரெவி ஃபவுண்டனில் தங்கள் நாணயங்களை எறிந்துவிட்டு ஒரு விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள்.இதனடிப்படையில் இந்த நாணய நம்பிக்கை வலுப்பெற்றது.
நீங்கள் ஒரு நாணயத்தை எறிந்தால் : நீங்கள் ரோமுக்குத் திரும்புவீர்கள். நீங்கள் இரண்டு நாணயங்களை எறிந்தால் நீங்கள் ஒரு கவர்ச்சியான இத்தாலியரை காதலிப்பீர்கள். நீங்கள் மூன்று நாணயங்களை எறிந்தால், நீங்கள் சந்தித்த நபரையே திருமணம் செய்து கொள்வீர்கள் என்பது நம்பப்பட்டு வருகிறது. சிலைக்கு முதுகுப் புறத்தை காட்டி தோள்பட்டை வழியாக நீரூற்றுக்குள் நாணயத்தைப் போடும் பழக்கம் இங்கு பிரபலமானது.
ஒவ்வொரு நாளும் சுமார் 3,000 யூரோக்கள் நீரூற்றில் வீசப்படுகின்றன. நீரூற்றில் வீசப்படும் பணம் கரிட்டாஸ் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. பின்னர் அது தொண்டு பணிகளுக்குப் பயன்படுத்துகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில் 1000 முதல் 1200 பார்வையாளர்கள் வருகின்றனர். இந்த நீரூற்றிலிருந்து விநாடிக்கு 170 லிட்டர் நீர் வெளியேறி மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.
இதுவரை இலவசமாக இந்த நீரூற்றுக்கு அருகில் சென்று காசு வீசி வந்தவர்கள் இனி அருகில் சென்று காசு வீசி எறிய முடியாது. அதற்கு இரண்டு யூரோ பணம் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்த்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை. இது வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.