தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சார வளம் மற்றும் அமைதியான மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் பார்க்கப்படுகிறது. சென்னையையும் புதுச்சேரியும் இணைக்கும் முக்கிய பகுதியாக இருக்கும் விழுப்புரத்தில் பழமையான கோவில்கள், கம்பீரமான கோட்டைகள், ஆன்மீக இடங்கள் ,இயற்கை அழகு மற்றும் தனித்துவமான கைவினை கலைகள் கொண்ட சுற்றுலாத்தலமாக உள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை பற்றி இப்பதிவில் காண்போம்.
பயணிகளை ஈர்க்கும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள செஞ்சி கோட்டையை 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது கிழக்கின் ட்ராய் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்படும் இந்த கோட்டை சோழர் ,விஜயநகர பேரரசர் ,மராத்திய மன்னர் சிவாஜி மற்றும் ஆற்காடு நவாபுகளின் வரலாறை தாங்கி நிற்கிறது.
ராஜகிரி ,கிருஷ்ணகிரி, மற்றும் சந்திரகிரி என்ற மூன்று மலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோட்டையிஸ் உள்ள கல்யாண மஹால் கோட்டையின் கட்டிடக்கலையை பறைசாற்றுகிறது .மேலும் சர்க்கரை குளம் மற்றும் செட்டிகுளம் தடாகங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
விழுப்புரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் தமிழ்நாட்டின் மூன்றாவது உயரமான கோபுரத்தை கொண்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் காணப்படும் பசுமை நிறைந்த வயல்கள் மன அமைதியை கொடுக்கிறது.
வானூர் தாலுகா புதுச்சேரிக்கு அருகில் புளிச்சப்பள்ளம் என்ற இடத்தில் இருக்கும் மங்கள புத்த விகார், ஆன்மீக அமைதியையும் புத்த மதத்தின் எளிமையான அழகையும் கொடுக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா ஆணையத்தின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள புத்த விகார் புத்த மதத்தின் வரலாறு மற்றும் தத்துவங்களை தெரிந்து கொள்ள உதவுவதோடு தியானம் செய்யவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் மன நிம்மதி தரும் இடமாக இருக்கிறது. இதற்கு அருகில் ஆரோவில் மற்றும் புதுச்சேரி கடற்கரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கும்பாபிஷேகம் கண்டுள்ள விக்கிரவாண்டி அருகில் உள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் என்ற நேத்ரோதாரண்யேஸ்வரருக்கு சித்திரை மாதம் சூரியக்கதிர்களால் அபிஷேகம் நடைபெறும் கோவில் என்ற சிறப்பு பெற்றது. 276 பாடல்பெற்ற சிவன் கோவில்களில் பனைய புரமும் ஒன்று என்பதோடு மன அமைதியை கொடுக்கும் தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்கள் மற்றும் பூஜைகள் குறிப்பாக அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஆன்மீகப் பயணிகளின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது .
தற்போது திருவிழா நடைபெறும் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்களால் கட்டப்பட்ட பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் ஒரு கோவிலாக இருக்கிறது.
மேற்கூறிய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளடக்கிய அனைத்து கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்துமே காண்பவர் மனதில் அழியா இடத்தை பெறும் என்பதில் ஐயமில்லை.