கண்ணாடி பாலம் சீனா...
கண்ணாடி பாலம் சீனா...

கண்ணாடி பாலத்தில் நடக்கும் த்ரில் அனுபவம் வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லலாமே!

Published on

லகிலேயே மிகவும் உயரமான மற்றும் நீளமான கண்ணாடி பாலம் சீனாவிலே உள்ளது. சீனர்களுக்கு கண்ணாடி பாலத்தின் மீது உள்ள காதலை விவரிக்க முடியாது. ஏனெனில் சீனாவில் மட்டுமே 2300 கண்ணாடி பாலங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தத்கது. எனினும் சீனர்களை குறைக்கூற முடியாது. கண்ணாடி பாலம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதன் மீது நடக்கும்போது கிடைக்கும் த்ரில் அனுபவம் சாகசப் பிரியர்களை அந்த இடத்திற்கு கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் உள்ள சாகச பிரியர்களுக்காக இங்கேயும் பல இடங்களில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அதனால் கண்ணாடி பாலத்தில் நடக்க சீனா வரை போகத் தேவையில்லை. சரி வாங்க, இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில பிரபலமான கண்ணாடி பாலங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கண்ணாடி பாலம் ராஜ்கிர் பீகார்

ராஜ்கிர் பீகார்
ராஜ்கிர் பீகார்

பீகாரில் உள்ள கண்ணாடி பாலம் 200 அடி உயரத்தில் அடர்ந்த காட்டிற்கு நடுவே தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்த கண்ணாடி பாலமானது, 85 அடி நீளமும், 6 அடி ஆளமும் கொண்டது. இதை கட்டியதற்கான முக்கிய காரணம், இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காகவேயாகும். பீகாரின் முதலமைச்சரான நித்திஷ் குமார் சீனாவின் கண்ணாடி பாலத்தை முன்னுதாரணமாக வைத்தே இந்த கண்ணாடி பாலம் கட்டப்பட்டது என்று கூறினார். இங்கிருந்து மலைகளில் மற்றும் காடுகளின் அழகை ரசிப்பதோடு மட்டுமில்லாமல் காடுகளில் சபாரியும் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே சுற்றிப்பார்க்க குறைந்தது 2 நாட்களாவது ஆகும். சபாரி செல்வதற்கு ரூபாய் 250 வசூலிக்கிறார்கள்.

சிக்கிமில் இருக்கும் கண்ணாடி பாலம்

சிக்கிம் கண்ணாடி பாலம்
சிக்கிம் கண்ணாடி பாலம்

சிக்கிம் பெல்லிங்கில் அமைந்துள்ளது இந்த கண்ணாடி பாலம். இது கடல் மட்டத்திலிருந்து 7200அடி உயரத்தில் உள்ளது. இங்கே அமைந்துள்ள சென்ரிசிக் சிலை (chenrezig statue) 137 அடி உயரம் கொண்டது. இங்கிருந்து பனிப்படர்ந்த ஹிமாலய மலையின் அழகையும், கீழே செல்லும் ஆறுகளின் அழகையும் கழுகுப்பார்வையில் பார்த்து ரசிக்க முடியும். இங்கு செல்ல 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

வயநாட்டில் உள்ள 900 கண்ணாடி பாலம்

வயநாடு கண்ணாடி பாலம்
வயநாடு கண்ணாடி பாலம்

தென்னிந்தியாவில் உள்ள முதல் கண்ணாடி பாலம் கேரளாவில் உள்ள வயநாட்டில் அமைந்துள்ளது. தனியார் ரிசார்ட்டான 900 கண்ணாடிக்கு இந்த பாலம் சொந்தமானது. வயநாடு கண்ணாடி பாலம் தரையிலிருந்து 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கண்ணாடி இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடைக்க முடியாத ஃபைபர் கிளாஸால் ஆனது. இந்த இடத்தை அடைய ஜீப்பில் அல்லது நடைப்பயணம் மேற்கொண்டு செல்லலாம். எதுவாயினும் இயற்கையை ரசித்துக்கொண்டே செல்லும் பயணம் நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும். இந்த கண்ணாடி பாலத்தில் நடப்பதற்கு 30 நிமிடத்திற்கு ஒருவருக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும் அங்கிருக்கும் காடு,மலை, மேகக் கூட்டம் போன்றவற்றின் அழகை ரசிப்பதற்கு முன் வசூலிக்கப்பட்ட கட்டணம் ஒன்றுமில்லை என்று தோன்றும்.

இந்த கண்ணாடி பாலங்களில் நடப்பது பாதுகாப்பானதாக இருந்தாலும், எத்தனை பேர் செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவசியமாகும். பலமான காற்று வீசும் சமயங்களில் இந்த பாலங்களை மூடிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com