
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி அருவி. நீர்வீழ்ச்சி என்றதும் நம் நினைவுக்கு வருவது குற்றாலம்தான். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம்போல் மதுரைக்கு அருகேயும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது.
குட்லாடம்பட்டி அருவி (Kutladampatti):
சோழவந்தான் கிராமத்தில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மதுரையின் ஒரு சிறந்த சுற்றுலாதலமாகவே மாறி வருகிறது. இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு வனத்துறையால் இயக்கப்படும் சிறுமலை ரிசர்வ் வனப்பகுதியின் ஒரு பகுதியாகும். இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் 500 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்றும் உள்ளது.
அடர்ந்த காட்டுக்கு நடுவே அருவியின் தண்ணீர் சத்தம், இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே அருவியின் ஓரத்தில் அமர்ந்து சூழலை நன்றாக அனுபவிக்கலாம். மலையேற்றம் செய்ய விரும்புவர்களுக்கும் இந்த இடம் ஏற்றதாகும். மலையேறுபவர்கள் இந்த அருவிக்கு 2 கிலோமீட்டர் மலையற்றம் செய்யலாம். சிறுமலையில் மழை பெய்யும் நேரங்களில் இந்த அருவியில் தண்ணீர் அதிகம் கொட்டும். அதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமாக இங்கு வந்து குவிக்கின்றனர்.
பழமையான தடாகை நாச்சியம்மன் கோவில்:
மலைகளில் பல்வேறு மருத்துவகுணங்கள் கொண்ட தாவரங்கள், சந்தன மரங்கள், பலா மற்றும் மாமரங்கள் உள்ளன. காட்டில் மான், காட்டுப்பன்றிகள், பெரிய அணில் போன்றவை காணப்படுகின்றது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில்தான் சத்தியார் அணை உள்ளது. தடாகை நாச்சியம்மன் கோவில் என்று அழைக்கப்படும் 500 ஆண்டுகள் பழமையான தடாகை அம்மன் கோவில் உள்ளது. இது தவிர ஒரு புத்த தியான மையமும், ராமங்கிரி ஆசிரமம் என்ற இரண்டு ஆன்மீக மையங்கள் உள்ளன. ஆசிரமம் மாம்பழ பண்ணைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு மயில்கள் நிறைய காணப்படுகிறது.
மதுரையின் குற்றாலம்:
குற்றாலம்போல் குளித்துக் கொண்டாட மதுரையில் சூப்பர் ஸ்டார் சோழவந்தானில் இப்படி ஓர் அருவியா என்று ஆச்சரியப்படும் வகையில் சூப்பரான அருவி ஒன்று உள்ளது. மதுரையின் குற்றாலம் என்று அழைக்கப்படும் இந்த அருவி போடலாம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் காப்பு காடுகள் அமைந்திருக்கிறது இயற்கை அழகு ததும்பும் சில்லென்று கொட்டும் அருவியில் குளிப்பது மிகுந்த சந்தோஷத்தை தரும்.
மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் குட்லாம்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 87 அடி (27 மீ) உயரத்தில் இருந்து கொட்டும் இந்த அருவியை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு குளிக்க அனுமதிக்கப் படுகின்றார்கள். நுழைவாயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருவியை அடையலாம். உள்ளே செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன.
மென்மையாக சில்லென்று கொட்டும் தண்ணீரில் குளிப்பது ஆனந்தத்தை தருவது மட்டுமல்லாமல், மலைப்பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் மலையேற்றம் செய்யும்பொழுது எங்கும் இயற்கை சூழ்ந்து காணப்படுவது கண்ணை கவரும் வகையில் உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு அருகில் 500 ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்றுள்ளது. மதுரையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ளவர்கள் வார இறுதி நாட்களில் இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்து சுகமான ஒரு குளியல் போடுவதுடன் அருகில் உள்ள கோவிலுக்கும் சென்று வருவார்கள்.
எப்படி அடைவது?
மதுரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு நிறைய பேருந்து இணைப்புகள் உள்ளன. மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக பஸ் வசதி உள்ளது. வாடிப்பட்டி வழியாகவும் இந்த அருவிக்கு வரலாம்.