பெங்களூருவிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் இருக்கும் இந்த நந்தி மலை சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நந்தி மலை இயற்கை அழகுக்கும், சாகச விளையாட்டுகளுக்கும் ஏற்ற ஒரு சுற்றுலா தளமாகும். இந்த மலை சுமார் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனைப் பல்வேறு வகையில் கர்நாடகா அரசு மேம்படுத்தி வருகிறது. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் இந்த மலை சுற்றுலா வாசிகளுக்காக முழுநேரமும் செயல்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நந்தி மலை புகழ்பெற்ற கங்கா வம்ச மன்னர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது என்று வரலாற்றில் கூறப்படுகிறது. இந்த மலையே ஆங்கிலேயர்களையும் திப்பு சுல்தானையும் உள்ளே வரவிடாமல் பின்வாங்கச் செய்தது என்றும் கூறுவார்கள். நந்தி மலையில் மலைக்காலங்களிலும் வார இறுதி நாட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த மலையில் சென்ற ஆண்டுத்தான் ரோப்வே கட்டமைப்பு பணிகள் ஆரம்பித்தன. இந்த வேலை முடிவடைய இன்னும் 20 மாதங்கள் ஆகும் என்று கட்டட நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த ரோப்வேவிற்காக ஏறத்தாழ 96 கோடிகள் வரை செலவாகியுள்ளது. இந்த மலைக்கு நிறைய சுற்றுலா வாசிகள் வருவதால் கட்டாயம் இந்த ரோப்வே அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கர்நாடகா அரசு கூறியுள்ளது.
மேலும் இந்த நந்தி மலைக்கு அருகில் விரைவில் ஈஷா யோகா மையத்தின் புதிய கிளைத் தொடங்கவுள்ளனர். அதேபோல் நந்தி மலைக்கு அருகில் கோயம்புத்தூரில் உள்ள சிவன் போல் 112 அடி அளவு மார்பளவு கொண்ட சிவன் உள்ளது. ஆகையால் நந்தி மலை அழகை ரசித்தப்பின் சிவனைப் பார்க்கலாம். நந்தி மலைக்கு அருகில் டிஸ்கவரி வில்லேஜ் என்ற ரிசார்ட்டும் உள்ளது. இங்கு சைக்கிளிங், பறவைகள் கண்கானிப்பு, மலை ஏறுதல், கேம்பிங், படகு சவாரி ஆகியவை செய்யலாம்.
அதேபோல் நந்தி மலைக்கு அருகில் உள்ள யோக நந்தீஸ்வரர் கோவில், திப்பு சுல்தான் கோட்டை, போகா நந்தீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்கந்தகிரி ஆகிய இடங்களுக்கும் கட்டாயம் சென்று சுற்றிப்பார்க்கலாம்.
நந்தி மலைக்கு காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைச் செல்லலாம். காலை சூர்ய உதயத்திற்கு சென்றால், நாள் முழுவதும் பாராகிளைடிங், ராப்பளிங் போன்ற நிறைய விளையாட்டுகள் விளையாடலாம். அதேபோல் சூர்ய அஸ்தமனத்தைப் பார்த்தப்பின் சிறிது நேரம் இயற்கை அழகை ரசித்துவிட்டு அருகில் இருக்கும் உணவகத்தில் உணவு எடுத்துக்கொண்டு கிளம்பினால் ஒரு தரமான வார இறுதி நாளைக் கழிக்கலாம்.
அதேபோல் நந்தி மலைக்கு அருகே இரவு தங்குவதற்கென நிறைய ஹோட்டல்களும் உள்ளன. மூன்று நாள் பயணம் மேற்கொள்பவர்கள் ஒரு நாள் நந்தி மலைக்கும் இரண்டு நாள் அருகில் இருக்கும் கோவில்கள் மற்றும் கோட்டைகளையும் சுற்றிப்பார்க்கலாம்.