முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கதிரவனைக்காண கண் கோடி வேண்டும்!

Sunrise at Kanyakumari
Sunrise at Kanyakumari

தமிழகத்தில் வியப்பூட்டும் வகையில் காண்பதற்கு அரிய எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. நம் மாநிலத்தில் இருக்கும் அதிசய இடங்களைச் சுற்றிப் பார்க்க நினைத்தால் அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அவ்வகையில், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத் தலத்திற்கு பெயர் போனது. ஏனெனில், தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்புகள் இங்குள்ளன. அரேபிய, இந்திய மற்றும் வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் அற்புத இடம் கன்னியாகுமரி. காலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரிய அஸ்தமனத்தைக் காணவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

கோடை விடுமறையில் வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், மனச் சோர்வை நீக்கவும் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்குச் செல்கின்றனர். கோடையில் சுற்றுலா செல்லத் திட்டமிடுபவர்களுக்கு கன்னியாகுமரிகச் சிறந்த தேர்வாக இருக்கும். கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையில் சூரியன் வெளிவரும் அழகிய காட்சி காண்போரை இயற்கையின் படைப்பை ரசிக்க வைப்பதோடு, நிச்சயமாக சிந்திக்கவும் வைக்கும். கடற்கரை என்றாலே பலருக்கும் பிடித்த இடமாக இருக்கும். அதிலும் முக்கடலும் கூடும் கன்னியாகுமரி கடற்கரை என்றால் சொல்லவா வேண்டும். மகிழ்ச்சியின் எல்லையில் அல்லவா மிதப்பார்கள் சுற்றுலாப் பயணிகள்.

முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் முதல் வேலையாக சூரிய உதயத்தைக் கண்ட பிறகு, விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையையும் கண்டு ரசிப்பார்கள். சூரிய உதயம் பார்க்கும் பலரும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதில்லை. இருப்பினும் மாலையில் சூரிய அஸ்தமனத்தைக் காணவும் பலர் இங்கு கூடுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஓட்டல்களில் விற்பனை களைகட்டும். அதுவும் வார நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே சமயம் குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். கன்னியாகுமரியில் கடற்கரையைத் தவிர மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, லெமூர் பீச், உதயகிரி கோட்டை மற்றும் வட்டக் கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது உண்டு.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இதைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்!
Sunrise at Kanyakumari

அதே நேரம் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் கும்பலும் கடற்கரையில் உள்ளனர். ஆகையால், பயணிகள் அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம். கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட வந்துவிட்டு, கவனமாக இல்லையென்றால் அது உங்களுக்குத் தான் ஆபத்தாக முடியும்.

தமிழ்நாட்டில் இருக்கும் இந்த அழகான நகரம் வருடந்தோறும் சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. வரலாற்று நினைவுச்சின்னங்கள், அழகான கோயில்கள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள் மற்றும் அமைதியான கடற்கரை ஆகியவற்றால் நிறைந்த எழில்மிகு கன்னியாகுமரியை நீங்களும் ஒருமுறையேனும் சென்று சுற்றிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com