தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் குகை கோயிலுக்கு வருடந்தோறும் யாத்திரிகர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். 62 நாட்களை அதாவது இரண்டு மாதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையானது ஜூலை 1 ல் தொடங்கி ஆகஸ்டு 31 ஆம் தேதி ரக்ஷா பந்தன் அன்று நிறைவடைகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை, தெற்கு காஷ்மீரில் உள்ள பாரம்பரிய பஹல்காம் பாதை மற்றும் மத்திய காஷ்மீரின் குறுகிய பால்டால் பாதை என இரண்டு இடங்களிலிருந்து தொடங்கவிருப்பதாகத் தகவல்.
யாத்திரை தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் (SASB) யாத்திரிகர்களுக்கான உணவு மெனுவை வெளியிட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள உணவு மெனுவின்படி, ஹல்வா பூரி, சமோசா, ஜிலேபி, குலாப் ஜாமூன், பீட்சா, தோசை, வறுத்த ரொட்டி மற்றும் ஆரோக்கியமற்ற இன்னும் சில உணவுகளைகளையும் கூட யாத்திரிகர்களுக்கு வழங்க ஸ்ரீ அமர்நாத் ஆலயம் தடை விதித்துள்ளது. அவை என்னென்ன உணவுகள் என்று மேலும் தெரிந்து கொள்வோம்.
கனமான புலாவ், ஃபிரைடு ரைஸ், பூரி, சென்னா பட்டூரா, பீட்சா, பர்கர், ஸ்டஃப்டு பராததா, தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய்யுடன் கூடிய ரொட்டி, கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, வறுத்த பப்பட்(அப்பளம்) போன்ற துரித உணவுப் பொருட்கள் இந்த ஆண்டு SASB ஆல் அமைக்கப்பட்ட சமூக சமையலறைகளில் (லங்கர்கள்) யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறார்கள்.
பஹல்காம் மற்றும் பால்டால் உள்ளிட்ட இரட்டை யாத்திரை வழித்தடங்களில் யாத்திரிகர்களுக்காக சுமார் 120 சமூக சமையலறைகளை SASB அமைத்துள்ளது. இவற்றில் மேற்கண்ட துரித உணவுப் பொருட்கள் மாத்திரம் அல்லாது, குளிர் பானங்கள்,லட்டு, கோயா பர்ஃபி, ரஸகுல்லா போன்ற இனிப்பு வகைகள், கொழுப்பு மற்றும் உப்பு அதிகமுள்ள மொறுமொறுப்பான தின்பண்டங்களான சிப்ஸ், மத்தி, நம்கீன் கலவை, பக்கோரா, சமோசா போன்ற நொறுக்குத் தீனி வகையறாக்களை வழங்கவும் வாரியம் தடை விதித்துள்ளது.
இவை தவிர ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம், யாத்திரிகர்களுக்கு அசைவ உணவு, மது, புகையிலை, குட்கா, பான் மசாலா, சிகரெட் மற்றும் பிற போதைப் பொருட்களை வழங்கவும் தடை விதித்துள்ளது. SASB அதிகாரி ஒருவர் கூறுகையில், அமர்நாத் யாத்திரையின் போது குப்பை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல
என்றும், யாத்திரை மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.