அதீத சுற்றுலா என்றால் என்ன?

tourist places
tourist places
Published on

“அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம்” என்பது பழமொழி. பொதுவாக நாடுகள் சுற்றுலாப் பயணிகளை இரு கரம் கூப்பி வரவேற்கும். சுற்றுலா ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.  மற்றும் அந்த சுற்றுலாத்தளம் அமைந்துள்ள இடத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. இதனால், பல நாடுகள் தங்கள் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை உயர்த்த சகல முயற்சிகளையும் மேற் கொள்கிறார்கள். ஆனால், சமீப காலமாக, ஐரோப்பாவில், பல பிரபல சுற்றுலாத் தலங்கள் தங்கள் நாட்டிற்கு வருகின்ற பயணிகள் எண்ணிக்கையைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம், அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது. ஒரு இடத்தில் நிறுவியுள்ள கட்டுமானங்கள் அந்த இடத்தில் வசிக்கும் மக்கள் தொகை, எதிர் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை, ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அடிப்படை வசதிகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால், அங்கு வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. இதை அதீத சுற்றுலா என்கின்றனர் அங்கு வசிக்கின்ற மக்கள். சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையைக் குறைக்க அரசை வலியுறுத்துகின்றனர்.

அதீத சுற்றுலாவினால் வீடு பற்றாக்குறை, வாடகை அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகள். தண்ணீர் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் குறைபாடு, அதிகரிக்கின்ற குப்பைகள், கழிவுப் பொருட்களை அகற்றும் பணிகளில் தேக்கம் ஏற்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு கட்டப்படுகின்ற விடுதிகள், வீடுகள் சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா மையங்களைப் பாதிக்கின்றன.

ஸ்பெயின் நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமான பார்ஸிலோனாவில், மக்கள் பெரிய பேரணி நடத்தி வீதிகளில் ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தின் முக்கியமான கோஷங்கள், “பார்ஸிலோனா விற்பனைக்கு இல்லை”, “சுற்றுலாப் பயணிகள் எங்கள் இருப்பிடத்தை விட்டுச் செல்லுங்கள்”. இதைத் தவிர கண்ணில் தென்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீது தண்ணீர் துப்பாக்கியின் வாயிலாக தண்ணீர் கொட்டிச் சென்றார்கள்.

2023ஆம் வருடம், பார்ஸிலோனாவிற்கு 120 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். பார்ஸிலோனா நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நாளைக்கு 4யுரோ கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு கஷ்டங்கள் தேவை!
tourist places

இத்தாலியின் வெனிஸ் நகரத்தில், சுற்றுலாப் பயணிகள் வருகையைக் கட்டுப்படுத்த நுழைவுக் கட்டணம் விதிக்க ஆரம்பித்துள்ளார்கள். சுற்றுலாப் பயணிகள், நுழைவுக் கட்டணம் தேவையற்றது என்று எதிர்க்க, வெனிஸ் நகர வாசிகள், பயணிகள் எண்ணிக்கை குறைக்க இந்த நடவடிக்கை போதாது என்று கருதுகிறார்கள். மிலான் நகரிலும் சுற்றுலாப் பயணிகள் இரவு நேர செயல்பாடுகளைக் குறைக்க பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.  முக்கியமானவை நடு இரவிற்குப் பின் பித்சா, ஐஸ்கீரீம் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில், அக்ரோபோலிஸ் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கான நேரத்திற்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். சுமார் 198 கடலோர சுற்றுலாத் தளங்களில் உணவு விடுதிகள், பார் வசதிகள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளார்கள்.

ஹால்ஸ்டாட், ஆஸ்திரியா அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரம். வருகின்ற பயணிகள், ரம்மியமான இடங்களின் முன்பு “செல்ஃபி” எடுத்துக் கொள்வது தங்களுடைய இயல்பு வாழ்வை பாதிக்கிறது என்கிறார்கள், அந்த ஊர் வாசிகள். அதனால், பல சுற்றுலா இடங்களைச் சுற்றி அந்த ஊர் மக்கள் வேலி அமைக்க ஆரம்பித்தனர். அரசின் முயற்சியினால் அது கைவிடப்பட்டது.

tourist places
tourist places

வட மேற்கு ஆப்பிரிக்கா அருகில், அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டம் கேனரி தீவுகள். இது ஸ்பெயின் நாட்டின் பகுதி. இந்த பகுதியின்  கடற்கரை அழகின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம். 2023ல், 160 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளார்கள். பயணிகள் வருகையால் தங்களுடைய வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படுவதாக இங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள். வீட்டு விலைகள் அதிகரித்து, சிலர் கார்களிலும், குகைகளிலும் தங்கும் நிலையில் இருக்கிறார்கள். இந்த நாட்டில் 34 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். சுற்றுலாக் கூட்டத்தினால், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிப்பதாக குற்றச்சாட்டு.

ஸ்பெயின் நாட்டின் பால்மா மெஜோர்கா, சுற்றுலாப் பயணிகளி கவர்ந்து இழுக்கும் தீவு. சுற்றுலாப் பயணிகளால் இயல்பு வாழ்க்கை, வேலை வாய்ப்பு, குடியிருப்பு பற்றாக்குறை அகியவற்றை வலியுறுத்தி மெஜோர்கா, இபிசா ஆகிய இடங்களில் மாபெரும் பேரணி நடந்தது. சுற்றுலாப் பயணிகளை பயமுறுத்தும் விதமாக, கடற்கரைகளில் “ஆபத்தான ஜெல்லி மீன்கள்”, “கழிவுகள் கலந்த கடல் தண்ணீர்”, “விழுகின்ற பாறைகள்” என்று பொய்யான தகவல்களை பதாகைகளில் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தனர்.

“அதீத சுற்றுலா” என்பது சுற்றுலாப் பயணிகளே வேண்டாம் என்று சொல்வதல்ல. அதே சமயம் பயணிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். பயணிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், சுற்றுலா வரி விதித்தல், பார்வையாளர்கள் நேரத்தை குறைத்தல், பிரபலமான இடங்களுக்கு முன் பதிவு செய்தலை கட்டாயமாக்குதல், அதிகம் அறியப்படாத இடங்களை விளம்பரப்படுத்துதல் ஆகியவை அதீத சுற்றுலாவிற்கான சில தீர்வுகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com